ப்ரேமலு திரை விமர்சனம்
சமீப காலமாக தமிழ் திரையுலகையே மலையாள சினிமா தான் காப்பாற்றி வருகிறது.அதிலும் மஞ்சுமல் பாய்ஸ் படம் தமிழகத்தில் எதோ தமிழ் படம் போல் ஓட, ஆல்ரெடி மலையாளத்தில் வெளிவந்து செம ஹிட் அடித்த ப்ரேமலு படத்தின் தமிழ் டப்பிங் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
ஹீரோ நஸ்லான் தமிழகத்தில் கல்லூரி முடித்துவிட்டு எப்படியாவது லண்டன் போக வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனால், அவருக்கு விசா கிடைக்காததால், தன் நண்பருடன் சேர்ந்து, சரி அடுத்து விசா கிடைக்கும் வரை ஐதரபாத்தில் கேட் கோச்சிங் போகலாம் என்று முடிவு செய்கிறார்.
அதை தொடர்ந்து ஐதராபாத்தில் நாயகி மமிதா IT வேலை பார்க்க, நாயகனும், நாயகியும் ஒரு கல்யாண வீட்டில் சந்திக்கின்றனர்.
பிறகு என்ன இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள், இதற்கிடையில் மமிதாவை அவர் கம்பெனியிலேயே ஒருவர் காதலிக்க என பல கலாட்டாக்களை தொடர்ந்து செம பீல் குட் ஆக முடிகிறது இந்த ப்ரேமலு.
படத்தை பற்றிய அலசல்
நஸ்லான் மலையாள சினிமாவிற்கு கிடைத்த புதிய துறுதுறு நாயகன், அதிலும் இன்னசண்ட் ஆக நடிக்க வேண்டும் என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல, காதல் தோல்வியை முதலில் காமெடியாகவும், இரண்டாம் பாதியில் அப்படியே சீரியஸாகவும் காட்டி கலக்கியுள்ளார்.
நஸ்லான் நண்பராக படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் மனதில் அழுத்தமாக நிற்கிறது, அதிலும் கடைசியில் யுவன் பாட்டு புடிக்கல சொன்னாண்டா என அடிக்க போகும் காட்சி தியேட்டரில் விசில் சத்தம்.
மமிதா இனி 10 வருடம் பல முன்னணி நடிகர்கள் படத்தில் வந்துவிடுவார், செம கியூட் ஆக தன் கதாபாத்திரத்தில் பொருந்தி போகிறார்.
மலையாள சினிமா என்றாலே வேறு மாநில காதல் என்றால் உடனே தமிழகம் தான் வருவார்கள், ஆனால், இதில் ஐதரபாத்தை காட்டியது கூடுதல் சிறப்பு, அதுவும் அத்தனை அழகாக.
இன்றைய இளைஞர்கள் பல்ஸ் தெரிந்த இயக்குனர் கிரிஷ் என்பதை இந்த படத்திலும் நிரூபித்துள்ளார்.
சின்ன சின்ன காட்சி ரியாக்ஸனிலும் அவ்ளோ அழகு, ஹீரோயினுக்கு லூஸ்மோசன், அதற்கு ஹீரோ மருந்து தருகிறார், இதை கேட்க என்ன இது என்றாலும், அதை இயக்குனர் தன் திரை மொழியில் காட்டிய விதம் அத்தனை அழகாக வந்துள்ளது.
இத்தனை அழகிற்கும் பக்க பலமாக ஒளிப்பதிவு மற்றும் இசை உள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும்.
தமிழ் டப்பிங் மிக நேர்த்தியாக செய்துள்ளனர்.
டெக்னிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
சொல்வதற்கு ஒன்றுமில்லை, சீரியஸ் பட விரும்பிகள் ஒதுங்கி கொள்ளலாம்.
மொத்தத்தில் வெட்டு குத்து 50 கிலோ துப்பாக்கியை தூக்கி கொண்டு ஹீரோ 500 பேரை சுடும் இந்த காலத்தில் மிக அழகான நேர்த்தியான ஒரு ஜாலி ரைட் தான் இந்த ப்ரேமலு.
ரேட்டிங்: 3.5/5