புஷ்பா : தி ரைஸ் திரைவிமர்சனம்
சமீபகாலமாக பல படங்கள் பான் இந்தியாவாக உருவாகி வருகிறது. இதில் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகிவுள்ளது புஷ்பா : தி ரைஸ். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின், முதல் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் முழு எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்ததா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
சாதாரண கூலி வேலை செய்து வரும் புஷ்பா {அல்லு அர்ஜுன்}, ஒரு நாள் செம்மர கடத்தல் வேளைக்கு கூலியாக செல்கிறார். அங்கு திடீரென போலீஸ் வருவதை அறிந்து செம்மர கட்டைகளை மறைத்து வைத்து, தான் மட்டும் போலீசிடம் சரணடைகிறார். இதனை கேள்விப்படும் செம்மர கடத்தல் தலைவர்களில் ஒருவரான 'கொண்டா ரெட்டி' புஷ்பாவை பெயிலில் எடுக்க, அவருடன் சேர்ந்து செம்மர கடத்தல் தொழில் துவங்குகிறார் புஷ்பா.
தனது மூலையை பயன்படுத்தி பல வகையில் செம்மர கட்டைகளை கடத்தி வரும் புஷ்பாவை தடுத்து, செம்மர கட்டைகளை பிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. அப்படி ஒரு முறை, காவல் துறையில் புஷ்பா சிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், அப்போதும் அங்கிருந்து பாதுகாப்பாக செம்மர கட்டைகளை வேறொரு இடத்திற்கு அகற்றிவிடுகிறார். இதனால், அரசியல் வாதி 'பூமி ரெட்டி, முக்கிய புள்ளியான 'மங்களம் சீனு'வின் நம்பிக்கையை சம்பாதிக்கிறார் புஷ்பா.
தொடர்ந்து 'மங்களம் சீனு'விடம் வேலை செய்து வரும் புஷ்பா, இனி இவர்களுக்கு கீழ் வேலைசெய்யமுடியாது என முடிவெடுத்து, தானே சொந்த முயற்சியில் செம்மர கட்டைகளை கடத்தி, நேரடியாக வாங்குவர்களிடம் டீல் பேசுகிறார். இதனால், மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கும் புஷ்பாவை கொள்ள 'கொண்டா ரெட்டி' முயற்சி செய்கிறார். ஆனால், அந்த முயற்சியில் கொண்டா ரெட்டியை, 'மங்களம் சீனு'வின் ஆட்கள் கொன்றுவிட, 'மங்களம் சீனு' மனைவியின் தம்பியை, புஷ்பா கொன்று விடுகிறார்.
இதனால் புஷ்பாவிற்கு எதிராக பல பகைகள் புதிதாக முளைக்கிறது. எதிர்க்க ஊரில் யாரும் இல்லாத காரணத்தினால், தொடர்ந்து வளர்ந்து கொண்டே போய்க்கொண்டு இருக்கும் புஷ்பாவை தடுத்து நிறுத்த, காவல் துறை புதிதாக நியமிக்கும் போலீஸ் அதிகாரியாக பகத் பாசில் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். இதற்கு பின் என்ன நடந்தது, பகத் பாசில் கொடுத்த கொடைச்சல்களை புஷ்பா எப்படி எதிர்கொண்டார்..? புஷ்பாவால் பகத் பாசிலுக்கு என்ன நடந்தது..? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகனாக வரும் அல்லு அர்ஜுன் மாஸ் காட்சிகளிலும், நகைச்சுவையான காட்சிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகி ராஷ்மிகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். புஷ்பாவின் நண்பனாக வரும் ஜெகதீஷ் கவனத்தை ஈர்க்கிறார்.
வில்லன்கள் அஜய் கோஷ், சுனில் ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது. புஷ்பாவின் தாய் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடைசி 25 நிமிடங்கள் வந்தாலும், வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்துவிட்டார் பகத் பாசில். இயக்குனர் சுகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் சூப்பர்.
ஆனால், திரைக்கதையை சுருக்கியிருக்கலாம். நீண்டுகொண்டே போகும் திரைக்கதை சலிப்பு தட்டுகிறது. கமர்ஷியல் வசனங்களும், சண்டை காட்சிகளும் ஓகே. Mirosław-வின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. கார்த்திக் ஸ்ரீனிவாஸ் மற்றும் ரூபனின் எடிட்டிங் ஓகே.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அல்லு அர்ஜுன், சமந்தா, ராஷ்மிகா மந்தனா என மூவரும் நடனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார்கள்.
முதல் பாகத்தில் புஷ்பா ராஜின் எழுச்சியை காட்டி, ரசிகர்கள் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் புஷ்பா : தி ரூல் படம் எப்படி இருக்க போகிறது என்று..
க்ளாப்ஸ்
கதை
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பு
ஒளிப்பதிவு
பாடல்கள், பின்னணி இசை
பல்ப்ஸ்
திரைக்கதையை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்
ஓவர் கமெர்ஷியல் காட்சிகள்
மொத்தத்தில் கமெர்ஷியல் ரசிகர்களுக்கு புஷ்பா படம் விருந்தாக அமைந்துள்ளது.
2.75 / 5