மறைந்த ஏவிஎம் சரவணன் உடன் என்ன பிரச்சனை.. நடிகர் பார்த்திபன் போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் கடந்த டிசம்பர் 4ம் தேதி காலமானார். அவரை பற்றி ரஜினி உட்பட ஏராளமான பிரபலங்கள் உருக்கமாக பேசி இருந்தனர்.
அவரது நினைவாஞ்சலி நிகழ்ச்சி தற்போது நடந்தது. அதில் ரஜினி, முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பார்த்திபன் பதிவு
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகர் பார்த்திபன் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
பச்சையா ஒரு பொய் சொல்லலாமுன்னா.. இது புது வருடத்தில் வாங்கிய புதூ கார்!
AVM சரவணன் சாரின் நினைவாஞ்சலிக்கு சென்று வந்ததில் என் மனம் சற்றே சாந்தியடைந்தது! White &white-ம் அவர் நினைவாக…! இளையராஜா இல்லாத புதிய பாதை வெற்றிக்குப் பின், பொண்டாட்டித் தேவையில் ராஜா சாருடன் இணைந்தப் பின், Avm சரவணன் சார் படம் செய்ய சொல்லி கை நிறைய advance கொடுத்த போது வாங்கிச் சென்றவன் அடுத்த சந்திப்பில் advance-ஐ திருப்பிக் கொடுத்தேன் காரணம் ராஜா சாருக்கும் avmக்கும் மனஸ்தாபம் இருந்ததால், “ராஜா இல்லாமல் செய்யுங்கள்” என்றார்.
“இப்போது தான் இணைந்துள்ளேன் இனி நிரந்தரமாக அவருடன் பணிப்புரிய இதுத் தடையாகும் “ என மறுத்தேன். அதற்கு சரவணன் சார்” அவர் இல்லாமல் தானே புதிய பாதை வெள்ளிவிழா கண்டது” என்றார் உடனே நான்“ அவர் இருந்திருந்தால் படம் தங்க விழா கண்டிருக்கும்” என புத்திசாலித்தனமாய் பேசி விட்டு வந்து விட்டேன்.
எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணராத உளறல் வயதது ! உள்ளே வெளியே ‘சக்கரக்கட்டி ‘ பாடலின் போது ஐஸ்வர்யா கால்ஷீட் விஷயமாய் எனக்கும் ‘எஜமான்’ AVM-க்கும் ஏற்பட்ட பிரச்சனையில் எனக்கேற்பட்ட நஷ்டத்தை எடுத்துக் காட்டி ‘A V மெய்யப்ப செட்டியாரின் ஆன்மா உங்களை மன்னிக்காது’ என்று கடுங்கோபமாய் கடிதம் கூட அனுப்பினேன்.
கொஞ்சங்கூட கோப்ப்படாமல் அதை ஈடுசெய்ய என்னை அழைத்து மேசை நிறைய பணத்தை விரித்து உருளும் AVM மெகா பந்தை விட தன் மனம் பெரிது என்பதைக் காட்டினார். உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தவர் மனதார மன்னிப்பும் கோரினார் . என் மனம் கலங்கி விட்டது.
என் நியாயமான கோபத்தைக்கூட அவர் அலட்சியப் படுத்தியிருக்கலாம். மேசையை விட உயரத்தில் இருந்த அவர் நற்கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு வெளியேறினேன். என் மீது அவரின் மதிப்பு மிகுந்தது. மதிப்பு மிகுந்த சினிமாவின் சின்னம் AVM.
ரஜினி சார் சரவணன் சாரை அசையா சொத்து என்றார். ஆனால் நான் AVM என்ற அடையாளம் தான் அசையா சொத்து என நினைக்கிறேன். அவர்கள் தொடர்ந்து படமெடுக்க வேண்டுமென அருணா அவர்களிடம் அன்று கூட வலியுறுத்தினேன். சில மனிதர்கள் மறைந்தாலும் அவர்களின் உயர்ந்த குணம் நினைவுகளாக படித்துறை பாசி போல பச்சக் என நெஞ்சோரங்களில் ஒட்டிக் கொள்கின்றன பசுமையாக!.
இவ்வாறு பார்த்திபன் பதிவிட்டு இருக்கிறார்.