பாக்யராஜ் உடன் என்ன சண்டை? துரோகத்தை பற்றி பேசிய நடிகர் சுந்தர்ராஜன்
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பிரபலமானவர் ஆர்.சுந்தர்ராஜன். அவர் தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை என்ற ரோலில் நடித்து வருகிறார்.
தற்போது சுந்தர்ராஜன் அளித்த பேட்டி ஒன்றில் பாக்யராஜ் தனக்கு செய்த துரோகம் பற்றி பேசி இருக்கிறார். ஒன்றாம் வகுப்பில் இருந்தே அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில் தான் படித்தார்களாம். அவ்வளவு சின்ன வயதில் தொடங்கிய நட்பு, சினிமாவில் நுழைந்தபின் பாக்யராஜ் செய்த துரோகத்தால் தற்போது வரை அவரிடம் பேசாமல் இருப்பதாக சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
அவன் இவன் என உரிமையுடன் பேசும் அளவுக்கு இருக்கும் ஒரே நண்பன் பாக்யராஜ் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாரதிராஜா அசிஸ்டென்ட்
சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் ஒன்றாக தான் சென்னைக்கு கிளம்பி வந்தோம். ஒரு கட்டத்தில் 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுக்கு அசிஸ்டன்ட் ஆக ஒருவர் வேண்டும் என கேட்டார்கள்.
என்னை தான் போக சொன்னார் அந்த நபர். ஆனால் நான் பாக்யராஜை போக சொன்னேன். அப்போதே அவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். அதனால் தான் அவன் இயக்குனர் ஆனால் நானும் இயக்குனர் ஆகிவிடுவேன் என நினைத்தேன்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து இயக்குனராக ஒரே படத்தை இயக்க போகிறோம் என அப்போது வரை நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இருப்பினும் அது பற்றி பேசியது இல்லை.
லெட்டர்
அதன் பிறகு ஹீரோவாக பாக்யராஜ் நடிக்க தொடங்கிவிட்டார். புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக அவர் நடிக்க தொடங்கியபோது இரவோடு இவராக சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்த்தால் அவன் இல்லை.
அதன் பின் ஒரு லெட்டர் வந்தது. ஊருக்கு போ, கடையை பார்த்துக்கொள்.. நான் படம் இயக்கும்போது கூப்பிடுறேன் என அந்த லெட்டரில் எழுதி இருந்தார். நான் ஒரு inland லெட்டர் வாங்கி அதில் 'நன்றி' என ஒரே வார்த்தை மட்டும் நடுவில் எழுதி அனுப்பிவிட்டேன்.
அவர் வாழ்க்கையில் நான் குறுக்கிடுவேன் என நினைத்திருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையே போனது அவனால் தான் என நான் அப்போது நினைத்தேன். அந்த வயசில் அப்படி நினைத்தேன்.
அதன்பின் பாக்யராஜின் மௌன கீதங்கள் படம் தியேட்டரில் பார்த்தேன். நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நம் நண்பன் ஜெயித்துவிட்டான் என அப்போது எனக்கு தோன்றியது.

பென்ஸ் கார்
அதன்பின் சென்னை மவுண்ட் ரோட்டில் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு பென்ஸ் கார் வந்து நின்றது. அதில் இருந்தது பாக்யராஜ். என்னை டிராப் செய்கிறேன் என அழைத்தார். முடியாது என கூறினேன். தேனாம்பேட்டையிலாவது விட்டுவிட்டு போகிறேன் என்றார், நான் கையில் பெரிய கல் ஒன்றை எடுத்துவிட்டேன். அதன் பின் அவர் போய்விட்டார்.
எந்த மவுண்ட் ரோட்டில் பசியோடு ஒன்றாக நடந்துபோனோமோ.. இப்போ அவன் பென்ஸ் காரில் போனான், நான் பசியோடு நடந்து போனேன் என சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.