ராயன் திரைவிமர்சனம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
தனுஷ் vs எஸ்.ஜே. சூர்யா, தனுஷ் இயக்கம், செல்வராகவனை தனுஷ் எப்படி பயன்படுத்தி இருப்பார், ஏ.ஆர். ரஹ்மானின் இசை என படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
தனுஷின் தாய் தந்தை இருவரும் Town-னுக்கு சென்று வருகிறோம், தங்கையையும், இரண்டு தம்பியையும் பார்த்துக்கொள் என தனுஷிடம் கூறிவிட்டு செல்கிறார்கள். ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனால் தனது தம்பிகள் மற்றும் தங்கையுடன் ஊர் பூசாரியிடம் சென்று உதவி கேட்கிறார். அந்த இடத்தில் கைக்குழந்தையாக இருக்கும் தனுஷின் தங்கையை வேறொருவரிடம் விலை பேசி விற்க பார்க்கிறார் பூசாரி. இதை அறிந்து கொண்ட தனுஷ், பூசாரியிடம் சண்டை போடுகிறார்.
வேறு வழியே இல்லை என்ற நேரத்தில் கையில் அரிவாள் எடுத்து பூசாரியை கொன்றுவிடுகிறார் தனுஷ். சிறு வயதிலேயே தனது தனுஷ் கையில் ரத்தக்கறை படிந்து வருகிறது. இதன்பின் அந்த ஊரில் இருந்து சென்னைக்கு தனது தம்பிகள், தங்கையுடன் செல்லும் தனுஷ் அங்கு செல்வராகவனை சந்திக்கிறார்.
செல்வராகவனின் உதவியோடு புது ஊரில் வேலை தேடிக் கொள்கிறார். காலம் கடக்க அனைவரும் பெரியவர்கள் ஆகிறார்கள். நால்வரும் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்து வரும் சமயத்தில் தனுஷின் பெரிய தம்பி சந்தீப் கிஷனால் பிரச்சனை ஒன்று வருகிறது.
சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் துரை என்பவரின் மகனை சந்தீப் கிஷன் கொன்றுவிட, இதனால் சந்தீப் கிஷனை கொள்ள வேண்டும் என துரை முடிவு செய்ய, இதன்பின் என்ன நடந்தது? தனுஷ் எடுத்த முடிவு என்ன என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் நம்மை வியக்க செய்துவிட்டார். படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரும் திரைக்கதையில் எந்த ஒரு தொய்வும் இல்லை.
கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் வேற லெவல். குறிப்பாக துஷாரா விஜயனின் ரோல் மிரட்டுகிறது. துஷாராவின் நடிப்பு தனுஷின் நடிப்பை தாண்டி பேசப்படும். வில்லன் எஸ்.ஜே. சூர்யாவை வழக்கம் போல் அடாவடியான வில்லனாக காட்டாமல், பொறுமையாக யோசித்து செயல்படும் வில்லனாக காட்டிய விதம் படத்திற்கு பலம்.
செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். ரத்தம் தெறிக்க தெறிக்க அனைத்து சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் Clinic-ல் நடக்கும் சண்டை காட்சி வெறித்தனம்.
சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன், அபர்ணா பாலமுரளி என அனைவரின் நடிப்பும் பக்கா. குறை என்று பார்த்தால் குழந்தைகளால் இப்படத்தை கொண்டாட முடியாது என்பது தான். மற்றபடி, படம் ஹாலிவுட் தரத்தில் உள்ளது.
படத்தில் நடிக்கவில்லை என்றால் 'நான் தான்டா ஹீரோ' என பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி நம்மை சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ரஹ்மான் குரலில் உசுரே நீதானே நீ தானே வரும் போது கண் கலங்குகிறது.
ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் இரண்டும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
பிளஸ் பாயிண்ட்
துஷாரா விஜயன், தனுஷ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பு
தனுஷின் திரைக்கதை, இயக்கம்
ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள், பின்னணி இசை
ஒளிப்பதிவு, கலை இயக்கம்
செண்டிமெண்ட் மற்றும் சண்டை காட்சிகள்
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் ராயன் தமிழ் சினிமாவிற்கு தனுஷ் கொடுத்துள்ள தரமான படைப்பு..
You May Like This Video