சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக முதல் இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கும் முன்னணி நடிகர் என்றால், அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வசூலில் பல கோடிகளை குவித்துள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து வாங்க பார்க்கலாம்.
சந்திரமுகி
பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்தின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த இப்படம் 800 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்த இப்படம், ரஜினியின் திரைவாழ்க்கையில் பல ஆண்டுகள் கழித்து வெற்றியை தேடி தந்தது.
எந்திரன்
சிவாஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஷங்கருடன் ரஜினிகாந்த் கைகோர்த்த திரைப்படம் எந்திரன். தமிழ் சினிமாவிற்கு புதிதாக ஒரு கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம், வசூலில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. ஹீரோவாகவும், மறுபுறம் வில்லனாகவும் மிரட்டலான நடிப்பை ரஜினிகாந்த் இப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
பாட்ஷா
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் டான் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் பாட்ஷா. ஆட்டோ காரராக எளிமையான நடிப்பையும் டான்கதாபாத்திரத்தில் மாஸான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார் ரஜினிகாந்த். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாட்ஷா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றிக்கு ரஜினியின் பாட்ஷா கதாபாத்திரத்தம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ரகுவரனின் ஆண்டனி கதாபாத்திரமும் முக்கியமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
படையப்பா
சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்து நடித்த இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தின் மாஸ் காட்சிகள் மற்றும் ரஜினிகாந்த் பேசும் மாஸான வசனங்கள் படையப்பா படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமாக அமைந்தது. ரஜினிக்கு நிகரான ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரமும் படையப்பா படத்தின் வெற்றியை உச்சத்திற்கு எடுத்து சென்றது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சொந்தர்யா, ரமேஷ் கண்ணா, செந்தில், ராதாரவி, நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
தளபதி
மணி ரத்னத்தின் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தளபதி. தாயின் பாசம், நண்பனின் அன்பு இரண்டுக்கும் இடையே பாசப்போராட்டத்தில் தவிக்கும் நடிப்பை சிறப்பாக காட்டியிருப்பார் ரஜினிகாந்த். நட்புக்காக தனது உயிரையும் கொடுப்பேன் என்று ரஜினி கூறும் வசனம் படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம். ஆக்ஷன், செண்டிமெண்ட் இரு காட்சிகளையும் மிஞ்சும் அளவிற்கு காதல் காட்சிகளிலும் நடித்து அசத்தியிருந்தார் ரஜினிகாந்த். இன்று வரை ரஜினியின் திரைவாழ்க்கையில் சிறந்த திரைப்படங்களில் டாப் லிஸ்டில் தளபதி படம் கண்டிப்பாக இடம்பெறும்.
இதில் குறிப்பிட்டள்ள படங்கள் மட்டுமின்றி, ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சிறந்து விளங்கியுள்ளது. அதை அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.