படையப்பா ரீ ரிலிஸ் எப்படி இருக்கு, சிறப்பு பார்வை
படையப்பா
படையப்பா 1999-ல் எங்கு திரும்பினாலும் ஒலிக்கும் பெயராக இருந்தது.
டீகடை, பெட்டிக்கடை, மார்கெட் என எங்கு சென்றாலும் படையப்பா புராணமே ஓடிக்கொண்டு இருக்க, அதோடு 1996-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி பேசியதால், அவரை வைத்து நீலாம்பரி உருவாகியதாக ஒரு சர்ச்சை உருவாக படத்தின் மீது எக்கசக்க எதிர்ப்பார்ப்பு எகிறி கொண்டே போனது, அப்படி ஒரு உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் வந்த படையப்பா உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.
தற்போது 25 வருடம் பிறகு இன்று மீண்டும் படையப்பா ரீரிலிஸ் ஆக, அதே உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் 2கே ஜெனரேஷனும் இந்த படையப்பனை காண வர, எப்படியிருந்தது இந்த 2025 படையப்பா ரீரிலிஸ், பார்ப்போம்.

சரி கதை என்ன
படையப்பா படம் கதை தெரியவில்லை என்றால், தமிழகத்தில் தமிழ் மொழியின் அ என்ற எழுத்து தெரியாத என்று கேட்பார்கள், ஊருக்கே தெரியும் என்றாலும் ஒரு சின்ன ரீவெண்ட். ரஜினி நிறைய சம்பாதித்து தன் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வருகிறார், அங்கோ ரஜினியின் குடும்பம் தான் பெரிய தலைக்கட்டு.
அவர்கள் தான் ஊரில் இருக்கும் அனைவரின் திருமணத்தையும் ஆறுபடையப்பன் முன்பு நடத்தி வைக்கின்றனர். அதிலும் ஆண்-பெண் இருவர் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கும், அப்படியில்லை என்றால் அந்த திருமணம் நடக்காது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.
இந்த நேரத்தில் ரஜினி அந்த ஊர் பெண் சௌந்தர்யாவை காதலிக்க, ரஜினியின் முறை பெண் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை காதலிக்க ரஜினியோ சௌந்தர்யாவை திருமணம் செய்கிறார். பிறகு என்ன நீலாம்பரி எப்படியெல்லாம் படையப்பனை பழி வாங்க வேண்டும் என 18 வருடம் கழித்தும் அதே பகையில் வளர பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படையப்பா ஒரு ரீவெண்ட்
1996-ல் ரஜினி ஜெயலலிதாவை எதிர்த்ததால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிர்வலை உருவாகியது, திமுக ஆட்சியை பிடிக்கவே ரஜினியின் ஜெயலலிதா எதிர்ப்பும் ஒரு காரணமாக அமைந்தது என பல பத்திரிகையில் எழுதினர்.
அதோடு ரஜினி கண்டிப்பாக அரசியல் வந்துவிடுவார் என்ற நிலையும் தமிழகத்தில் உருவாக, ஒட்டு மொத்த மீடியா வெளிச்சமும் போயஸ் கார்டன் வாசலிலெயே விழுந்தது. ஆனால், ரஜினியோ வழக்கம் போல் கட்சியெல்லாம் இப்போ நமக்கு எதற்கு என்று விலகி சென்று கொண்டே இருந்தார். இத்தகைய பிரமாண்ட எதிர்பார்ப்பில் வந்த படையப்பா, ஒட்டு மொத்த இண்டஸ்ட்ரி ரெக்கார்டையும் அடித்து நொறுக்கியது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் படையப்பா ரெக்கார்டை அடுத்து வந்த ரஜினி படமான சந்திரமுகியே உடைத்தது என்பது கூடுதல் சிறப்பு.
படையப்பா தமிழகம் தாண்டி தெலுங்கிலும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது, கிட்டத்தட்ட 14 கோடி வரை படையப்பா தெலுங்கில் வசூலிக்க, தெலுங்கில் உச்சத்தில் இருந்த சிரஞ்சீவி, பாலையா-க்கே அந்த சமயத்தில் ஷாக் கொடுத்தது.
முத்து படத்தில் ரகுமானின் இசை எவ்ளோ பேசப்பட்டாலும், ரஜினி ரசிகர்களை அது திருப்திபடுத்தவில்லை என்ற ஒரு பேச்சு இருந்தது, அதனால் என்னமோ படையப்பாவில் என் ஆட்டத்தை பாருங்கள் என்று ரகுமான் ஒரு பக்கம் மாஸ் இசைக்கு க்ளாஸ் எடுத்திருப்பார்.
அதிலும் ரஜினி ஊஞ்சலை கீழே இறக்கிவிடும் அவர் போட்ட BGM திரைங்கு DTS தாண்டி வெளியிலும் விசில் சத்தை காதை கிழித்தது. இதில் கூடுதல் தகவல் இந்த இடத்தில் இப்படி ஒரு இசையை வைக்கலாம் என்று வைத்தவர் அப்போது ப்ரோகிராம் இன்ஜினியர் ஆக வேலை பார்த்த ஹாரிஸ் ஜெயராஜ் தான்.
படையப்பா 2கே கிட்ஸை கவர்ந்ததா
படையப்பா 25 வருடம் கழித்து டிஜிட்டல் யுகத்தில் இன்று காலடி எடுத்து வைத்துள்ளது, இந்த காலத்தில் பெண்களை தவறாக காட்டினால் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் நிலை உருவாகிய நிலையில் படையப்பா சிலருக்கு பிற்போக்கு தனமான படமாகவே தெரிந்தது.
அதனால் இந்த ஜெனரேஷனை எப்படி கவரும் என்று பார்த்தால், இன்றைய ரசிகர்கள் வைப் கொண்டாட்ட மனநிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற அனைத்துமே படையப்பாவில் கொட்டி கிடக்கிறது.

பாம்பு புற்றுக்குள் கைய விட்டு எடுக்கும் ரஜினி Intro ஆரம்பித்து, கயிறு அறுந்து ஓடும் மாட்டை காலில் அழுத்தி பிடிப்பது, நாட் பட் நாட் லீஸ்ட் என நீலாம்பரிக்கு எச்சரிக்கை விடுப்பது, இந்த படையப்பனோட இன்னொரு முகத்தை பார்க்காதீங்க, மன்னிகனும் என் வீட்டு எஜமானி ரொம்ப நல்லாருக்காங்க, உங்களுக்குத் வயசே ஆகல என்று பல காட்சிகள் விசில் பறந்துகொண்டே இருக்கிறது.
அதிலும் உச்சமாக அந்த ஊஞ்சல் சீன் தியேட்டரில் 1000 வாலா சரவெடி-யை ரசிகர்கள் தங்கள் கையிலையும், விச்சில் சத்ததிலையும் வெடிக்க வைத்துள்ளனர். குவாலிட்டி பொறுத்தவரை நாம் சன் டிவி-ல் பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் முடிந்த அளவிற்கு சிறப்பாக கொடுத்து கலக்கியுள்ளனர்.
மொத்தத்தில் இந்த படையப்பன் ஆட்டத்தை 1999 இல்லை 2025 ஏன் 2050 வந்தால் கூட குடும்பம் குடும்பமாக கொண்டாடுவார்கள் தான்.