Runner: திரை விமர்சனம்
ஆலன் ரிட்ச்ஸன், ஓவன் வில்சன் ஆகியோர் நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ள Runner ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

கதைக்களம்
இராணுவ சிறப்புப் படையில் இருந்த ஹாங்க் மலோன், வாடிக்கையாளர்களுக்காக சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான பொருட்களைக் கொண்டு செல்லும் Runner வேலையை செய்கிறார். அவருக்கு வேலை கொடுக்கும் இக்கி, விமான நிலையத்தில் இருந்து ஒரு மெடிக்கல் பேக்கேஜை கைப்பற்றி, குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒப்படைக்குமாறு ஹாங்க் தெரிவிக்கிறார்.
அதன்படி விமான நிலையத்திற்கு செல்லும் ஹாங்க், அங்கு பென் பிஷோப் என்ற நபரை சந்திக்கிறார். அவரிடம் பேக்கேஜை கேட்க, அவர் தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்றும், மெடிக்கல் பேக்கேஜை டெலிவரி செய்ய வேண்டியது தனது வேலை என்றும் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக பயணிக்க ஆரம்பிக்க, கார் ஒன்று அவர்களை பின்தொடர்கிறது. அதே சமயம் லிவர் கேன்சரால் பாதிக்க 7 வயது சிறுமிக்கு டொனர் கிடைக்க அவளது தாய் கேட் தவிக்க, லிவர் வந்துகொண்டிருக்கிறது என்று மருத்துவர் அவரிடம் கூறுகிறார்.
இந்த சூழலில் ஹாங்க்கை காரில் பின்தொடரும் கும்பல் அவரை தாக்கி மெடிக்கல் பேக்கேஜை கைப்பற்றி முயற்சிக்கிறது. ஹாங்க், பென் இருவரும் அந்த கும்பலிடம் இருந்து எப்படி தப்பித்து பேக்கேஜை டெலிவரி செய்தார்கள்? சிறுமி உயிர்பிழைத்தாரா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
நீட் ஃபார் ஸ்பீட், எக்ஸ்பென்டப்ள்ஸ் 4 திரைப்படங்களை இயக்கிய ஸ்காட் வாக் இப்படத்தையும் கொடுத்துள்ளார். குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றில் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும் கல்லீரலை, சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க போராடும் ஹீரோ என்ற லைனே ஆக்ஷன் கதைக்கு தேவையான ஒன்றுதான்.
அதனை பரபரப்பான திரைக்கதையில் கொடுக்க முயற்சிப்பதில் ஏறக்குறைய இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறலாம். படம் ஆரம்பித்து 15 நிமிடங்களிலேயே கதையின் வேகம் ஆரம்பித்துவிடுகிறது.

ஒரு சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், நடிகர்களின் பங்களிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது. துப்பாக்கியால் சுட்டு இறந்துவிட்டதாக நினைத்த கதாபாத்திரம் திடீரென உயிருடன் வருவதெல்லாம் காதுல பூ ரக லாஜிக் மீறல். ஹாங்க் கதாபாத்திரத்தில் ஆலன் ரிட்ச்ஸன் அதகளம் செய்துள்ளார். பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.
சண்டைக்காட்சிகளில் பட்டையைக் கிளம்பும் ஆலன், ஒரு சில காமெடியையும் செய்து ரசிக்க வைக்கிறார். ஓவன் வில்சன் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், எமோஷனல் ஆக ஃபீல் செய்யும் வைக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் ரோட்ரிகோ சாண்டோரோ ஈவு இரக்கமில்லாத நபராக மிரட்டியிருக்கிறார்.

லெய்லா ஜார்ஜ் தனக்கான கதாபாத்திரத்தை எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் செய்துள்ளார். ஒரு சீனில் வந்தாலும் ஜெரால்டின் ஹாக்வில் அழகாக நடித்துள்ளார். டெக்னிக்கலாக படம் மிரட்டலாக உள்ளது. சண்டைக்காட்சிகள் மிரள வைக்கின்றன. பின்னணி இசை சுமார் ரகம்.
க்ளாப்ஸ்
- ஆலன் ரிட்ச்ஸன், ஓவன் வில்சன்
- சண்டைக்காட்சிகள்
- கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
- பரபரப்புக்கு கைக்கொடுக்காத இசை
- மிகப்பெரிய லாஜிக் மீறல்
மொத்தத்தில் இந்த Runner நல்ல ஓட்டம்தான். ஆக்ஷன் பட விரும்பிகள் ரசிக்கலாம்.
