Saiyaara: திரை விமர்சனம்
ஆஷிகி 2 புகழ் இயக்குநர் மோஹித் சூரியின் "சையாரா" ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
வாணி பத்ரா தனது திருமணத்திற்காக ரிஜிஸ்ட்ரர் ஆபிசில் தன் பெற்றோருடன் காதலன் மகேஷுக்காக காத்திருக்கிறார். ஆனால் வாணிக்கு போன் செய்யும் மகேஷ் தனது எதிர்காலத்திற்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறுகிறார்.
இதனால் மனமுடைந்த வாணி ஆறு மாதங்களுக்கு பிறகு வேலைக்காக இன்டெர்வியூக்கு செல்கிறார். அங்கே இன்டிபென்டன்ட் பாடகராக முயற்சிக்கும் கிரிஷ் கபூர் முதல் முறையாக வாணியை சந்திக்கிறார்.
பின்னர் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட, தனது இசைக்கு ஏற்ப பாடல் வரிகளை எழுதி தருமாறு வாணியிடம் கேட்கிறார் கிரிஷ். அவரது வரிகளும், கிரிஷின் இசையும் சேர்ந்து உருவாகும் பாடல் இளைஞர்கள் இடையே பெரிய அளவில் ஹிட் அடிக்கிறது.
இந்த துறையில் பெரியாளாகி விடலாம் என கிரிஷ் நினைக்கும் நேரத்தில் அவரது அப்பாவால் மிகப்பெரிய வாய்ப்பு பறிபோகிறது. இதனால் நொடிந்துப்போய் உட்காரும் அவருக்கு வாணி ஆறுதலாக நிற்கிறார்.
இருவரும் காதலிக்க ஆரம்பிக்கும்போது வாணிக்கு பெரிய பிரச்சனை இருப்பது டாக்டர் மூலம் தெரிய வருகிறது. அதன் பின்னர் அவரது பிரச்சனை சரியாகி காதலர்கள் இணைந்தார்களா? கிரிஷ் தனது துறையில் சாதித்தாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஆஷிகி 2, ஏக் வில்லன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த மோஹித் சூரிதான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகை அனன்யா பாண்டேவின் சித்தப்பா மகன் அஹான் பாண்டேவுக்கு இது முதல் படம். ஆனாலும் அறிமுக படம் என்பதே தெரியாத அளவிற்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார். கோபம், பரிதவிப்பு, விரக்தி என பல ரியாக்ஷன்களையும் சரியான அளவில் கொடுத்திருக்கிறார்.
அதே போல் ஹீரோயின் அனீத் பட்டாவும் வாணி ரோலில் பின்னியெடுத்திருக்கிறார். இருவரும் போட்டி போட்டு நடிப்பது நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது.
இசைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞன், அவனுக்கு காதலால் ஏற்படும் தடங்கல் என ஆஷிகி டெம்ப்லேட்டில்தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார் மோஹித் சூரி. ஆனாலும் எமோஷனல் ஆக படம் நம்முடன் கனெக்ட் ஆவதில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஏற்கனவே ட்ரெய்லர், பாடல்கள் இணையத்தில் ஹிட்டடித்ததால் இப்பாடத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதனை சரியான அளவில் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர். அஹான் பாண்டே வெற்றிக்கு பக்கத்தில் செல்லும்போதெல்லாம் ஏதோ ஒரு தடை வருகிறது.
குறிப்பாக மதுவுக்கு அடிமையான அப்பாவால் பெரிய விஷயம் கைவிட்டு போகிறது. என்றாலும் அவரை சரிசெய்ய அஹான் செய்யும் தியாகம் எதிர்பாராத ஒன்று. அஹான், அனீத் காதலில் உருகி திளைக்கும் காட்சிகள் செம ரொமான்ஸ். அதற்கு ஏற்றாற்போல் அமைந்த பாடல்கள் ஈர்க்கின்றன.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆஷிகி படத்தை நினைவுப்படுத்துவதால் ஆஷிகி 3 என்றே தலைப்பு வைத்திருக்கலாம். எனினும் கிரிக்கெட் பிராக்டிஸ் செய்து தன்னை மோட்டிவேட் செய்துகொள்வது, 8.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போகணும் என்று சொல்லும் காதலியின் நேரத்தை மதிப்பது போன்ற காட்சிகள் அழகியல்.
இசை படத்திற்கு மிகப்பெரிய தூண். 7 பேர் பாடல்களுக்கு இசையமைக்க, ஜான் ஸ்டூவார்ட் பின்னணி இசை அமைத்திருக்கிறார். ரொமான்டிக் எமோஷனல் டிரமா கதை என்றாலும் எங்கும் தொய்வில்லாமல் நகர்கிறது திரைக்கதை.
ஹேப்பி என்டிங் என்பதால் முழு திருப்தியுடன் வெளியே வரலாம். ஏக் வில்லன் ரிட்டர்ன்சில் சறுக்கிய மோஹித் சூரி, சையாரா மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளார் என்றே சொல்லும் அளவிற்கு பார்வையாளர்கள் ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடுகிறார்கள்.
கிளாப்ஸ்
திரைக்கதை
இசை, பாடல்கள்
வசனம்
நடிப்பு
பல்ப்ஸ்
சொல்லும் அளவிற்கு குறைகள் ஏதும் இல்லை