'இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம்'.. மனம் திறந்து பேசிய சமந்தா
முன்னணி நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வரும் சமந்தா ரூத் பிரபு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது நடந்த விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமான சமந்தா தற்போது பான்-இந்தியன் ஸ்டாராக கலக்கிக்கொண்டு இருக்கிறார். படங்கள், வெப் தொடர்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

கர்ப்பமாக இருக்கும் சமந்தா
'மா இண்டி பங்காரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சினிமாவிலிருந்து சிறிது காலம் மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுக்கப்போவதாக கூறினார். தற்போது கர்ப்ப காலத்தில் உள்ள சமந்தா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

அண்மையில் கூட கர்ப்ப காலத்தில் இதுவரை 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளதாகவும், தாய்மை பயணம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
மனம் திறந்த சமந்தா
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியது:
"மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்தது. இதனால் என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டுள்ளது."

"இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம் என நான் நினைத்திருக்கிறேன். ஆனால், இது எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டன. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்? என்ற கட்டத்தை தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ உள்ளது என்ற தெளிவை அடைய எனக்கு சிறிது காலம் ஆனது" என கூறினார்.