ஹெச்.வினோத் என்கிற அரக்கன்.. துணிவு ரிலீஸ் நேரத்தில் இப்படி தான் இருந்தாரா?
இயக்குனர் ஹெச்.வினோத் தமிழ்நாட்டில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருந்துவருகிறார். அவர் இயக்கிய துணிவு படம் கடந்த ஜனவரியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து கமல்ஹாசனின் KH233 படத்தை வினோத் இயக்கப்போகிறார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
வினோத் என்கிற அரக்கன்!
இந்நிலையில் துணிவு பட ரிலீஸ் நேரத்தில் சபரிமலையில் ஹெச் வினோத் உடன் இருந்த இயக்குனர் இரா.சரவணன் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"அஜீத் சாரின் ‘துணிவு’ ரிலீஸான நேரம். இயக்குநர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம். நல்ல கூட்டம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்துத் தங்கினோம். ‘துணிவு’ படம் குறித்த ரிசல்ட் பாஸிடிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல். சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை. ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். ‘படம் பக்கா…’ என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத்.
“யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா…” என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார்.
“படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க… நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?” “ஊத்தட்டும் விடுய்யா…” என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார்.
“ஐயோ, நண்பா… படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க...” என்றேன். “சரிய்யா…” - எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தார். ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் வந்து ஆளைப் புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார்.
“நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்…” என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. ‘நல்லதும் கெட்டதும் நமக்குள்தான்’ என்று இயங்குகிற அபூர்வனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

திருவாரூர் அருகே டீசல் கொண்டு சென்ற சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து - ரயில்சேவைகள் பாதிப்பு IBC Tamilnadu
