ஸ்கார்லெட் (anime): திரை விமர்சனம்
மமொரு ஹொசோடா இயக்கத்தில் இந்தியாவில் வெளியாகியுள்ள ஸ்கார்லெட் அனிமே திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.

கதைக்களம்
சமவெளி பரப்பில் கண்விழிக்கும் ஸ்கார்லெட் என்ற இளம்பெண், தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்கிறார். நான் இருப்பது சொர்க்கமாக, நரகமா என அவர் கேள்விகளை எழுப்பிக்கொள்ள அவள் நினைவில் இருப்பது அரண்மனையில் தான் இளவரசியாக இருந்ததுதான்.
16ஆம் நூற்றாண்டின் இறுதியில் டென்மார்க்கை ஆட்சி செய்கிறார் ஆம்லெத். அவரது சகோதரர் கிளாடியஸ் அவரை துரோகி என முத்திரை குத்தி அரசராக முடிசூட்டிக் கொள்கிறார். பின் தனது சகோதரர் ஆம்லெத்திற்கு மரண தண்டனையை நிறைவேற்ற, தன் அப்பாவின் மரணத்தை நேரில் காண்கிறார் ஸ்கார்லெட்.

இதற்கு கிளாடியஸை பழிவாங்க வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஆனால் அவளுக்கு விஷம் கொடுக்கப்பட, கண்விழித்துப் பார்க்கும்போது மறுவுலகத்தில் இருப்பது ஒரு கிழவி மூலம் புரிந்துகொள்கிறாள். என்றாலும் தனது பழிவாங்கும் படலத்தை அவள் தொடர, தற்போதைய ஜப்பானில் இருந்து துணை மருத்துவரான ஹிஜிரியும் மறுஉலகத்திற்கு வர, ஸ்கார்லெட்டை அவர் சந்திக்கிறார்.
ஒரு சண்டையில் ஸ்கார்லெட்டிற்கு ஏற்படும் காயத்திற்கு ஹிஜிரி மருத்துவ உதவி செய்ய, இருவரும் ஒன்றாக பயணிக்க ஆரம்பிக்கின்றனர். அதன் பின்னர் ஸ்கார்லெட் தனது தந்தையின் மரணத்திற்கு பழி தீர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
சம்மர் வார்ஸ், மிராய், பெல்லி போன்ற அனிமே படங்களை கொடுத்த மமொரு ஹொசோடா இப்படத்தை இயக்கியுள்ளார். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தின் கதையை எடுத்துக்கொண்டு மறுவுலகம், வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்கள் ஒன்றாக இருப்பது, நவீன கால மனிதனுடன் 16ஆம் நூற்றாண்டின் இளவரசி பயணிப்பது என திரைக்கதையை அமைத்துள்ளார்.
ஸ்கார்லெட் என்ற இளம்பெண்ணின் கோபம், விரக்தி போன்ற உணர்வுகள் நன்றாக கடத்தப்பட்டுள்ளன. அந்த கதாபாத்திரம் சண்டையிடும் காட்சி அருமை. படம் முழுக்க நாம் அவளுடன் பயணிக்கும் வகையில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹிஜிரி கதாபாத்திரம் எல்லோரிடமும் பரிவு காட்ட வேண்டும் என்று வாழ்கிறது. ஆனால் அது சில இடங்களில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. மறுவுலகத்தை காட்டும்போது இடி இடிக்கும் சவுண்டிங் மிரட்டல். கார்ட்டூன் அனிமேஷனையே இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அனிமேஷனை விட பின்னணி இசை, சவுண்ட் எபெக்ட்ஸிற்கு அதிகம் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. சுவாரஸ்யமான கதைக்களத்தில் திரைக்கதை சில இடங்களில் தொய்வாகவே நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது. ஸ்கார்லெட், கிளாடியஸ் தவிர ஏனைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

ஹிஜிரி கதாபாத்திரத்தை பயன்படுத்தியதில் கூட பெரிய அழுத்தம் இல்லை. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் வியப்பை தருகின்றன. கிளைமேக்ஸை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர்.
க்ளாப்ஸ்
கதைக்களம்
ட்விஸ்ட்கள்
சவுண்ட் எபெக்ட்ஸ்
பல்ப்ஸ்
திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு
மொத்தத்தில் இந்த ஸ்கார்லெட் பெரிதாக சுவாரஸ்யத்தை தரவில்லை என்றாலும், டைம்பாஸுக்காக பெரிய திரையில் பார்க்கலாம்.
