இன்று வரை அழுதுகிட்டு தான் இருக்கேன்.. இயக்குனர் செல்வராகவன் உருக்கம்
இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி மிகவும் உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதன் இரண்டாம் பாகம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், அவர் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
அவ்ளோ வலி ..
"நிறைய பேர், எத்தனையோ முறை என்னை ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி பேச சொல்லி இருக்கிறார்கள். எனக்கென்னவோ பேசவே தோன்றவில்லை. ஏனென்றால் அந்த படம் கொடுத்த ரணங்கள், மனசு முழுக்க காயங்கள், தழும்புகள்.. அது என்றைக்கும் வலிச்சிக்கிட்டே தான் இருக்கும். பேச தோணல. அவ்ளோ வலி யாரும் அனுபவிச்சு இருக்க மாட்டாங்க."
"ஆயிரத்தில் ஒருவன் படம் ஆரம்பிக்கும் போது.. ஒரு புது அனுபவத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என நினைத்தேன். ஆரம்பித்ததும் ஒரு நல்ல விஷயம் எனக்கு புரிந்தது. எல்லோருமே உயிரைக் கொடுத்து வேலை செய்யும் ஒரு டீம் கிடைத்திருக்கிறது என புரிந்தது."
"ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம். பாம்புகள், தேள்கள் கூட, அட்டைப்பூச்சிகள் கூட போராடி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடைபெற்றது. பாதி படம் முடியும்போதே அந்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியாது என எனக்கு தெரிந்துவிட்டது. உடனே தயாரிப்பாளரை கூப்பிட்டு பேசினேன்."
"பட்ஜெட் எங்கோ செல்கிறது. உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. நான் படத்தை டேக்ஓவர் செய்துகொள்கிறேன், நீங்கள் இதுவரை போட்ட பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என கூறினேன்."
"ஆனால் அவர் நானே தான் தயாரிப்பேன், இன்னும் ஐந்து கோடி கூட தருகிறேன் என சொன்னார். ஆனால் அதையும் தாண்டி தேவைப்பட்டது. அதனால் நானே வட்டிக்கு வாங்கி பாக்கி படத்தை முடித்தேன். போஸ்ட் ப்ரொடக்ஷனில் விஎப்எக்ஸ் முடிக்க ராத்திரி பகலாக கஷ்டப்பட்டோம்."
அழுதுகிட்டு தான் இருக்கேன்..
"படம் ரிலீஸ் ஆன பிறகு ஒவ்வொருவரும் படத்தை குத்தி குத்தி கிழிச்சாங்க. இவன் யாரு இப்படி எடுக்க என போஸ்டர் ஒட்டினார்கள். ஆந்திராவில் கொஞ்சம் நன்றாக ஓடியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது."
"எனக்கு தேவையில்லை, ஆனால் படத்தில் உழைத்த கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் மற்றும் டெக்னிஷியன்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விட்டதே என வருத்தமாக இருந்தது. அதற்காக இன்னைக்கு வரைக்கும் அழுதுகிட்டு தான் இருக்கேன்."
"இப்போது சோழர்களை பற்றி, தமிழ் அரசர்களை பற்றி படம் எடுப்பவர்கள் எங்களுக்கு ஒரு நன்றி கார்டாவது போடுங்க. அந்த கருட முரடான முள் பாதையில் ஊருண்டுகிட்டு போனவங்க அதற்கு முன் யாரும் இல்லை - நானும், எங்க டீம் மட்டும் தான். அது மட்டும் தான் என் தாழ்மையான வேண்டுகோள்" என செல்வராகவன் உருக்கமாக பேசி இருக்கிறார்.