இந்தியன் 2 படம் மீண்டும் துவங்குமா? இயக்குனர் சங்கர் பதில்
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் லைகா தயாரிப்பில் உருவான படம் இந்தியன் 2. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் மீண்டும் துவங்கவில்லை.
இதற்கு நடுவில் தனது அடுத்தடுத்த படத்தின் வேலைகளை இயக்குனர் சங்கர் துவங்கிவிட்டார். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இதனால், இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை சங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
ஆனால், சங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிமன்றம், சங்கர் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி சங்கர் தரப்பில் பதில் வெளியாகியுள்ளது.
அதில், இந்தியன் 2 படத்தை அக்டோபர் மாதத்திற்குள் முடித்துத் தர முயற்சிக்கிறேன், நடிகர் விவேக் மறைவால் வேறு நடிகரை வைத்து அவருடைய காட்சிகள் படமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவால் இந்தியன் 2 பட பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்த நீதிபதிகள், லைகா தரப்பும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி இந்தியன் 2 படப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர்.