சிங்கப்பூர் சலூன் திரைவிமர்சனம்
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால், மீனக்ஷி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதுவரை தமிழ் சினிமாவில் பல துறைகளை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக முடி திருத்தம் செய்யும் தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன்.
இதுவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
தனது ஊரில் முடி திருத்தம் செய்யும் சாச்சா-வை பார்த்து முடி திருத்தம் செய்யும் வேலையின் மீது ஹீரோ ஆர்.ஜே. பாலாஜிக்கு ஆசை ஏற்படுகிறது. அவரிடம் முடி திருத்தம் செய்யும் வேலையை கற்றுக் கொள்கிறார்.
படித்து முடித்தவுடன் சிங்கப்பூர் சலூன் என தன்னுடைய சொந்த சலூனை துவங்க வேண்டும் என ஆசைப்படும் ஆர். ஜே. பாலாஜி, கஷ்டப்பட்டு தனது சொந்த சலூனையும் ஆரம்பிக்கிறார். நினைத்தபடி சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சலூனை துவங்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கு அதன்பின் பல சோதனைகள் வர தொடங்குகிறது.
இந்த சோதனைகளை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார், இதன்பின் என்ன நடந்தது? இறுதியில் தனது சிங்கப்பூர் சலூனை பெரிய அளவில் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
ஆர். ஜே. பாலாஜி இதுவரை நடித்த படங்களில் இருந்து சற்று மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் காட்டியுள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். படத்தின் முதல் பாதியில் பட்டையை கிளப்பும் சத்யராஜ், இரண்டாம் பாதியில் அமைதியாகி விடுகிறார்.
லால் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை அவர் அழகாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் படத்தின் இறுதி வரை ஆர்.ஜே. பாலாஜிக்கு துணை நின்று நண்பனாக வரும் கிஷன் தாஸ், நம்முடைய வாழ்க்கையில் நமக்காக இருக்கும் நண்பனை நினைவூட்டுகிறார்.
மீனாட்சி சவுத்ரி, ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய் நடிப்பும் ஓகே. லோகேஷ் கனகராஜ், அரவிந்த் சாமி மற்றும் ஜீவாவின் கேமியோ கைதட்டல்களை அள்ளுகிறது.
கோகுல் தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். முதல் பாதி நகைச்சுவையாக செல்ல, இரண்டாம் பாதி முழுக்க எமோஷனலாக பயணிக்கிறது. சில இடங்களில் தொய்வு இருந்தாலும், கதை நம்முடைய வாழ்க்கை பிரதிபலிப்பதன் காரணமாக அந்த தொய்வும் பெரிதாக தெரியவில்லை.
இராண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகள் சற்று அதிகமாக இருப்பதால் 2k கிட்ஸ் இப்படத்தை கிரிஞ்சு என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நல்ல விஷயங்களும், எதார்த்தமான விஷயங்களும் கிரிஞ்சு ஆக தான் தெரியும்.
ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கிஷன் தாஸின் சிறு வயது பருவத்தில் நடித்த சிறுவர்களும் படத்திற்கு பிளஸ் ஆக அமைகிறது. 'success is not an option its must', 'engineering என்ன நம்முடைய குல தொழிலா' என ஆர்.ஜே. பாலாஜி பேசும் வசனங்கள் கவனம் பெறுகிறது.
மேலும், கிளிகளை வைத்து அமைக்கப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓகே. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
பிளஸ் பாயிண்ட்
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பு
சத்யராஜ் நடிப்பு
முதல் பாதி
எமோஷனல் காட்சிகள்
வசனங்கள்
மைனஸ் பாயிண்ட்
சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு
மொத்தத்தில் சிங்கப்பூர் சலூன் முடியை மட்டுமல்ல, வாழ்க்கையையும் திருத்தும்..
You May Like This Video