சிறை திரைவிமர்சனம்
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், இயக்குநர் தமிழ் கதையில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் சிறை. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளிவந்த பின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. சரி, படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
காவல் துறையில் அதிகாரியாக இருக்கும் விக்ரம் பிரபு, சிறையில் உள்ள கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வேலை பார்க்கிறார். இதில் ஒருமுறை 9 கொலை செய்த ஒருவன் விக்ரம் பிரபுவிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய, தனது கையில் உள்ள துப்பாக்கியை வைத்து அந்த கைதியை சுட்டுவிடுகிறார், அந்த கைதியும் இறந்துவிடுகிறான். இதனால் விக்ரம் பிரபு மீதும், அவருடன் சென்ற மற்ற இரு போலீசார் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணை ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, 5 வருடங்களாக சிறையில் இருக்கும் அப்துல் ரஊப் என்பவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. விக்ரம் பிரபு மற்றும் இரண்டு போலீசார் இணைந்து அப்துலை அழைத்து செல்கிறார்கள். அப்போது விக்ரம் பிரபுவுக்கும் அப்துலுக்கும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

டீ குடிப்பதற்காக பேருந்து ஒரு இடத்தில் நிற்க, அப்போது போலீஸ் ஒருவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட, அதை தடுக்க விக்ரம் பிரபு செல்கிறார். இந்த சமயத்தில் பேருந்தில் தனியாக விடப்பட்டு வந்த அப்துல், போலீசின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். அழைத்து வந்த கைதியை தொலைத்து விட்டோமே என அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் விக்ரம் பிரபு.
இதன்பின், இதைப்பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க விக்ரம் பிரபு செல்லும்போது, அங்கு அப்துல் இருக்கிறார். தப்பித்தவன் மீண்டும் கிடைத்துவிட்டான் என நிம்மதியடைய, இதன்பின் தான் யார் என்பதை பற்றி விக்ரம் பிரபுவிடம் அப்துல் கூறுகிறார்.

கைதியாக உள்ள இந்த அப்துல் யார்? எதற்காக 5 ஆண்டுகள் சிறையில் உள்ளார், தப்பித்து ஓடிவிட்டு, மீண்டும் எதற்காக விக்ரம் பிரபுவிடம் வந்தார்? இப்படி பல கேள்விகளுக்கு விடை தருவதுதான் படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதையை இயக்குநர் தமிழ் உருவாக்கியுள்ளார். ஆனால், கிளைமாக்ஸ் உண்மை கதை இல்லை என்பதை இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி கூறியுள்ளார்.
முதல் காட்சியில் தொடங்கி இறுதி வரை பதட்டத்துடன் வைத்திருக்கும் திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் சுரேஷ் ராஜகுமாரி. அதற்கு அவருக்கு பாராட்டுகள். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைத்துள்ளது.

முதலில் கதையின் நாயகனாக வரும் விக்ரம் பிரபு, தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அறிமுக காட்சியில் எப்படி துப்பாக்கியை வைத்து மாஸ் காட்டினாரோ, அதே போல் அப்துலுக்கு உதவும் காட்சியில் கைதட்டல்களை சொந்தமாக்கி விட்டார். இதுதான் டா மாஸ் சீன் என பட்டையை கிளம்பிவிட்டார். விக்ரம் பிரபுவுக்கு இது மாஸ் கம்பேக், அதற்காக வாழ்த்துகள்.
அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் சிறப்பாக நடித்துள்ளார். முதல் படமாக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரமாக திரையில் பரிபாலித்த விதம் நன்றாக இருந்தது. அதே போல் நடிகை அனிஷ்மா அனில்குமாரின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்து விட்டது. காதல் காட்சிகளிலும், தனது காதலுக்காக போராடும் காட்சிகளிலும் அனிஷ்மாவின் நடிப்பு படத்திற்கு பலம்.

இவர்களை தவிர மற்ற அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அது படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறது.
இயக்குநர் படத்தின் திரைக்கதையை வடிவமைத்ததில் ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படவில்லை. இடைவேளை, ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் நம்மை பதற வைக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி கண் கலங்க வைத்துவிட்டது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அங்கேயே இப்படத்தின் வெற்றி நிரூபணம் ஆகி விட்டது.

அதே போல் வசனங்கள் படத்திற்கு பலமாகும். 'கைவிலங்கை அவிழ்த்து என்னை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லுங்கள் சார்' என அப்துல் கேட்க, 'அதை கொலை செய்வதற்கு முன்னால் யோசித்திருக்க வேண்டும்' என விக்ரம் பிரபு பேசும் வசனம் அழுத்தமாக உள்ளது. அதே போல், 'நம்மிடம் உள்ள அதிகாரத்தை எப்படி மற்றவர்களுக்கு பலனளிக்கும் வகையில் பயன்படுத்துகிறோம்' என்பது குறித்து விக்ரம் பிரபு பேசும் வசனம் கிளைமாக்சில் ஹைலைட்.
மேலும் இந்து, முஸ்லிம் குறித்து பேசப்பட்ட கருத்து, தமிழர்களுக்காக ஈழத்தில் முதல் ஆளாக தீக்குளித்தவரின் பெயர் 'அப்துல் ரஊப்' என சொல்லி, மத நல்லிணக்கத்தை பற்றி பேசியது சிறப்பு. அதற்காகவே இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியை பாராட்டலாம்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் என அனைத்து டெக்னிக்கல் ஒர்க்ஸ் வேற லெவல். குறை என்றும் சொல்ல பெரிதாக ஒன்றுமே இல்லை.
பிளஸ் பாயிண்ட்
விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பு
கதைக்களம்
திரைக்கதை
பின்னணி இசை
ஒளிப்பதிவு
எடிட்டிங்
வசனங்கள்
கதாபாத்திர வடிவமைப்பு
மைனஸ் பாயிண்ட்
ஒன்றுமே இல்லை
மொத்தத்தில் 'சிறை' அருமையான அழகிய பயணம். இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. திரையரங்கில் பாருங்க.
