நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் நடிப்பு என்பதற்கு மறு பெயர் இவர் தான். தனது திரை வாழ்க்கையில் நடித்து ஒவ்வொரு படத்தையும் தனது நடிப்பினால் சிறந்த படமாக உருவாக்கியவரும் இவர் தான். ஆம், தமிழ் சினிமாவில் நடிப்பின் தந்தையாகவும் நடிகர், நடிகைகளால் பார்க்கப்பட்டு, ரசிகர்களால் நடிகர் திலகம் என்று கொண்டாடப்படுவர் சிவாஜி கணேசன். இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து நாம் பார்க்கவிருக்கும் கட்டுரை தான், இது..
பாசமலர்
பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் கடந்த 1961ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாசமலர். இப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து ஜெமினி கணேசன், சாவித்திரி, எம்.என். நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அண்ணன் தங்கை பாச கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, வெற்றியடைந்தது. இன்று வரை திரையுலகில் அண்ணன் தங்கை பாசம் என்றால், முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவதும் இப்படம் தான்.

ராஜராஜ சோழன்
தஞ்சை மண்ணை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் அருள்மொழி வர்மனின் வாழ்க்கை வரலாற்றை, நம் கண்முன் நிறுத்திய திரைப்படம் தான், ராஜராஜ சோழன். ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1973ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ராஜராஜ சோழனாகவே வாழ்ந்திருந்தார் நடிகர் சிவாஜி. இப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து சிவகுமார், லட்சுமி, முத்துராமன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பல மூத்த நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். தமிழில் வெளிவந்து மாபெரும் படைப்புகளில் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ராஜராஜ சோழன் படமும் ஒன்றாகும்.

பராசக்தி
மு. கருணாநிதி அவர்களின் வசனத்தில் கிருஷ்ணன் மற்றும் பஞ்சுவின் இயக்கத்தில் 1952ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பராசக்தி. இப்படம் தான், தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகனான சிவாஜி அவர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. இப்படத்தில் கலைஞர் அவர்கள் எழுதிய ஒவ்வொரு வசனத்தையும் சிவாஜி அவர்கள் பேசும் பொழுது, அனைவருக்கும் மெய்சிலிர்த்துவிடும். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தனது தங்கைக்காக சிவாஜி பேசும் வசனத்தை, தற்போது இருக்கும் நடிகர்களால் கூட அந்த அளவிற்கு பேசமுடியுமா என்று தெரியவில்லை.

முதல் மரியாதை
பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல் மரியாதை. இப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து ராதா, வடிவுக்கரசி, ஜனகராஜ், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கிராமத்து கதைக்களத்தில் உருவான இப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை சிவாஜிக்கு தேடி தந்தது. மேலும், இப்படத்தில் சிவாஜினியின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டுபோனார்கள்.

தில்லானா மோகனாம்பாள்
ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1968ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். இசை மற்றும் நடனம் இரண்டையும் முக்கியமாக கொண்டு உருவான இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் சிவாஜி. குறிப்பாக சிக்கல் ஷண்முகம் கதாபாத்திரத்தில் ரொமான்ஸ், நகைச்சுவை, நாதஸ்வரம் வாசிப்பது என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

விஜய்யின் பீஸ்ட் படம் 5 நாளில் தமிழகத்தில் எவ்வளவு வசூல்- குறைந்ததா?