சூது கவ்வும் 2 திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்களில் ஒன்று சூது கவ்வும். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் நடித்து 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சூது கவ்வும்.
இப்படத்தின் இரண்டாம் பாகமாக சூது கவ்வும் 2 இன்று திரையரங்கில் வெளிவந்துள்ளது. இப்படத்தை இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா, கருணாகரன். எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள சூது கவ்வும் 2 திரைப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
சூது கவ்வும் முதல் பாகத்தின் இறுதியில் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கருணாகரன், இரண்டாம் பாகத்தில் நிதி அமைச்சராக 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்து வருகிறார்.

ஊழல் செய்து மட்டுமே நிதி அமைச்சராக இருக்கும் கருணாகரன் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார். முதல் பாகத்தில் எப்படி விஜய் சேதுபதி கடத்தல் தொழில் செய்து வந்தாரோ, அதே போல் இரண்டாம் பாகத்தில் தனக்கென்று சில கொள்கை, கோட்பாடுகளை கொண்டு கடத்தல் தொழில் செய்து வருகிறார் மிர்ச்சி சிவா.

அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கருணாகரனை, மிர்ச்சி சிவா கடத்த, அதன்பின் என்ன நடந்தது? எதற்காக கருணாகரனை மிர்ச்சி சிவா கடத்தினார்? தனக்கு ஏற்பட்ட சிக்கலில் இருந்த கருணாகரன் எப்படி வெளியே வந்தார் என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகனாக வரும் மிர்ச்சி சிவா மற்றும் அவருடைய கேங்கில் இருக்கும் நபர்கள் செய்யும் நகைச்சுவை, சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் நம் பொறுமையை சோதிக்க வைக்கிறது.

அரசியல் குறித்து இடம்பெற்றிருந்த வசனங்கள், அதில் வந்த நகைச்சுவையை அழகாக வடிவமைத்து இருந்தார் இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன். ஆனால், கதாபாத்திரங்களை இன்னும் வலுவாக அமைத்திருந்தால், படம் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும். திரைக்கதையும் ரசிக்கும்படியாக அமைத்திருக்கும்.

மிர்ச்சி சிவா சொன்னது போல், சூது கவ்வும் 1 கல்ட் படம், சூது கவ்வும் 2-ல் கழற்றுவதற்கு எதுவும் இல்லை என்பது போல் தான், இப்படமும் இருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே.

முதல் பாகத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் பின்னணி இசை மற்றும் பாடல்கள் என்று கூறலாம். ஆனால், சூது கவ்வும் 2ல் பாடல்கள், பின்னணி இசை எதுவும் மனதை தொடவில்லை.

பிளஸ் பாயிண்ட்
அரசியல் குறித்து இடம்பெற்றிருந்த வசனங்கள்
சில நகைச்சுவை காட்சிகள்
மைனஸ் பாயிண்ட்
பொறுமையை சோதிக்கும் திரைக்கதை
பின்னணி இசை
மொத்தத்தில் சூது கவ்வும் 2 ஏமாற்றமே..

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    