ஸ்டார் திரைவிமர்சனம்
இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஸ்டார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள ஸ்டார் திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் கலை (கவின்). அவருடைய தந்தையின் ஆசையும் அதுவே. பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் நடிப்பின் மீது மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்.
பல இடங்களில் முயற்சி செய்தும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் பணம் கொடுத்தால் வாய்ப்பு என கூறிவிடுகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் கவின் மும்பைக்கு செல்கிறார்.
அங்குள்ள பிரபலமான நடிப்பு பட்டறையில் சேர வேண்டும் என நினைக்கும் கவினுக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பையில் கஷ்டப்படும் கவின், தொடர்ந்து முயற்சி செய்து இறுதியில் அங்கு இணைகிறார். பின் அவருக்கு ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்லும் வழியில் விபத்து ஏற்பட, கவினின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. இதனால் அவருடைய சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக அதன்பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி.
படத்தை பற்றிய அலசல்
ஹீரோ கவின் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு பட்டையை கிளப்புகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அசத்திவிட்டார்.
கவினின் தந்தையாக நடித்துள்ள லால் மற்றும் அம்மாவாக நடித்த நடிகை கீதாவும் எதார்த்தமான நடிப்பின் மூலம் மனதை தொடுகிறார்கள். மகனுக்கு ஒரு தந்தையாக இல்லாமல் தோளோடு தோள் நின்று நண்பனாக லால் நடித்தது படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.
ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி பொஹங்கர் இருவருக்கும் படத்தில் நல்ல ஸ்கோப். முதல் பாதியில் வரும் நடிகை ப்ரீத்தி மற்றும் இரண்டாம் பாதியில் வரும் அதிதி இருவரும் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை.
இயக்குனர் இளன் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அருமையாக திரைக்கதையில் வடிவமைத்துள்ளார். சில இடங்கள் ஸ்லோ ஆனாலும், அது படத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. சினிமா என்றால் புகழின் உச்சத்தை அடைவது மட்டுமே அல்ல, அதிலிருக்கும் கஷ்டங்கள், தலைகீழாக மாறும் வாழ்க்கை குறித்தும் அழகாக எடுத்து காட்டியுள்ளார்.
ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான வாழ்க்கையை அழகாகவும், வலியுடனும், கண்ணீருடனும் எடுத்துக் காட்டியுள்ளார். அதற்கு இயக்குனர் இளனுக்கு பாராட்டுக்கள். துவண்ட இருக்கும் பல கலைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைத்திருந்த வசனங்கள் சூப்பர். ஆனால் இந்த கதை அனைவரையும் கவருமா என்பது கேள்விக்குறி தான்.
படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா, பின்னணி இசையிலும், பாடல்களிலும் பட்டையை கிளப்பி விட்டார். குறிப்பாக மும்பையில் Survival-காக கவின் போராடும் போது வரும் பாடல் திரையரங்கை அதிர வைத்து விட்டது.
ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காலகட்டத்திலும் நகரம் காட்சிகளை அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு. பிரதீப் எடிட்டிங் பக்கா.
பிளஸ் பாயிண்ட்
கவின் நடிப்பு.
லால் நடிப்பு.
இளன் இயக்கம், திரைக்கதை.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை.
மைனஸ் பாயிண்ட்
இந்த கதை அனைவரையும் கவருமா என்பது கேள்விக்குறி. இதை தவிர படத்தில் குறை என்று எதுவும் பெரிதாக இல்லை.