Su From So: திரை விமர்சனம்
கன்னடத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் சூ ஃப்ரம் சோ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.
கதைக்களம்
கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
ஊரில் ஏதாவது நல்ல காரியமாகவும் இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி ரவி அண்ணா என்பவரைதான் ஊர் மக்கள் அணுகுவார்கள்.
இந்த சூழலில் அசோகா என்ற இளைஞருக்கு பேய் பிடித்ததாக வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறார். அவர் எவ்வளவு சொல்லியும் யாரும் நம்பவில்லை.
ரவி அவரைப் பார்த்து பேசும்போது அசோகா வேண்டுமென்றே அடித்துவிட்டு பேய் என நாடகமாடுகிறார்.
இதனால் ஊர் மக்கள் அனைவரும் பயந்துபோய் சுவாமி எனும் ராஜ் பி.ஷெட்டியை பேய் ஓட்ட அழைத்து வருகின்றனர்.
அதன் பின்னர் பேய் பிடித்ததாக நாடகமாடும் அசோகாவிற்கு என்ன ஆனது? ஊர் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதா? கலாட்டாவான என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சுலோக்சனா ஃப்ரம் சோமேஷ்வரா என்பதன் சுருக்கமாக சூ ஃப்ரம் சோ என படத்திற்கு தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
ஜே.பி.துமினாட் என்ற அறிமுக இயங்குநர்தான் இப்படத்தை இயக்கி, முதன்மை கதாபாத்திரமான அசோகாவாகவும் நடித்துள்ளார்.
உபேந்திராவின் ரசிகராக அவர் சொல்லும் பொய்யால் ஏற்பட்ட குழப்பத்தால், மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
குறிப்பாக, உண்மையில் பேய் வந்துவிட்டதோ என அவர் தனியறையில் பயப்படும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதேபோல் கெத்தாக சுற்றும் ரவி அண்ணாவையே அடித்துவிட்டோம் என்று அவர் சிரிக்கும் காட்சியும் செம கலாட்டா.
படம் முழுக்க கெத்தான தோரணையில் வலம் வரும் ரவி அண்ணாவாக ஷனீல் கௌதம் அசத்தியிருக்கிறார். அவரது ஆக்ஷன் சீனும் மிரட்டல்.
பானு கேரக்டரில் சந்தியா அரகேரே யதார்த்தமாக பாவப்பட்ட பெண்ணாக நடிக்க, ராஜ் பி.ஷெட்டி, பிரகாஷ் துமினாட், புஷ்பராஜ், தீபக் ராஜ் ஆகியோர் கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர்.
பாவாவாக கல்யாண வீட்டில் புஷ்பராஜ் செய்யும் அட்ராஸிட்டி தியேட்டரில் சிரிப்பலைதான். முண்டாசுப்பட்டி பாணியில் படம் முழுக்க காமெடி கலாட்டா செய்திருக்கிறார் இயக்குநர் துமினட்.
முதல் பாதி காமெடியாக இருந்தாலும் கதை தொடங்கும்வரை சற்று மெதுவாகவே திரைக்கதை நகர்கிறது. அசோகாவை பேய் பிடித்ததும் திரைக்கதை வேகமெடுக்கிறது.
இரண்டாம் பாதியில் நல்ல ஒரு மெசேஜையும் கூறி நிறைவாக படத்தை முடித்து, முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார் இயக்குநர்.
சுமேத்தின் பாடல்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சந்தீப்பின் பின்னணி இசை ஹாரர் மொமெண்ட்டில் பயமுறுத்தவும் செய்கிறது.
க்ளாப்ஸ்
திரைக்கதை
காமெடி காட்சிகள்
யதார்த்த நடிப்பு
இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் வாய்விட்டு சிரிக்க என்ஜாய் பண்ண கண்டிப்பாக குடும்பத்துடன் இந்த "Su From So"வை ரசிக்கலாம். கன்னட திரையுலகிற்கு இப்படம் பைசா வாசூல்தான்.
ரேட்டிங்: 3.5/5