சன் டிவி ரூ.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு.. 30 வருடங்கள் போராடி ஜெயித்த நடிகை சுகன்யா
1996 ஏப்ரல் 17ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பான நேருக்குநேர் என்ற நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் வீரப்பனை சந்தித்து எடுத்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது.
அதில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் மகன் உடன் நடிகை சுகன்யாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக வீரப்பன் அந்த பேட்டியில் பேசி இருந்தார். அது முற்றிலும் பொய்யான, அவதூறு குற்றச்சாட்டு என நடிகை சுகன்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது நற்பெயரை கெடுத்த இந்த பேட்டியால் தனது சினிமா வாய்ப்புகள் பாதிக்கப்பட்டது, மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும், அதற்க்காக 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என வழக்கில் சுகன்யா கேட்டுக்கொண்டார். அதை ஏற்று சிவில் நீதிமன்றம் 10,00,500 ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு
அந்த தீர்ப்பை எதிர்த்து சன் டிவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நக்கீரன் கொடுத்த பேட்டியை அப்படியே ஒளிபரப்பினோம், அவர் பேசியதற்கு நாங்கள் பொறுப்பல்ல என சன் டிவி வாதிட்டது.
ஆனால் அந்த பேட்டியை எடிட் செய்யும் முழு அதிகாரம் சன் டிவிக்கு இருக்கிறது என நக்கீரன் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருக்கிறது. எடிட் செய்ய முழு அதிகாரம் வைத்து இருந்தும், அதை ஒளிபரப்பும் முன் விசாரிக்கவோ, நடிகை சுகன்யாவிடம் இருந்து இது பற்றி விளக்கம் கேட்கவோ இல்லை. அதனால் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பல்ல என சன் டிவி தப்பிக்க முடியாது என கூறிய நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்த 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த அவதூறான பகுதியை மீண்டும் ஒளிபரப்ப நிரந்தர தடையும் தொடரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.