தெலுசு கதா: திரை விமர்சனம்
சித்து ஜோன்னலகடா, ராஷி கன்னா, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள தெலுங்கு ரொமாண்டிக் காமெடி படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
வருணும் (சித்து), ராகாவும் (ஸ்ரீநிதி) கல்லூரி நாட்களில் காதலித்து ஒரு சண்டையால் பிரிகின்றனர். அதன் பின்னர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வருண் திருமணம் செய்து வாழ வேண்டும் என நண்பர் மகேஷ் அவருக்கு பெண் பார்க்கும் படத்தில் இறக்கிறார்.
ஆனால் வருண் எதிர்பார்க்கும் பெண் அவருக்கு கிடைக்காத நிலையில், மேட்ரிமோனி மூலம் அஞ்சலியை (ராஷி கன்னா) சந்திக்கிறார் வருண். இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போக திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர்.
அஞ்சலி கருதரித்ததை அறிய மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு கருவை சுமக்கும் அளவிற்கு அவரது உடல்நிலை இல்லை என்றும், அதனால் அவருக்கு குழந்தை பிறக்காது என்றும் மருத்துவர் கூறுகிறார்.
இதனால் வருணும், அஞ்சலியும் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்க, ராகா வாடகைத்தாய் ஆக இருந்து குழந்தை பெற்று தருவதாக கூறுகிறார். அதன் பின்னர் ஏற்படும் குழப்பங்களுக்கு விடையே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
டிஜே தில்லு படங்களில் இளம் ஹீரோவாக நடித்து கலக்கிய சித்து, இம்முறை மெச்சூரிட்டியான கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார். குழந்தை பெற்றுக்கொண்டு ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படும் அவரை திருமணம் செய்ய ஸ்ரீநிதி மறுக்கிறார்.
அப்போது உடைந்து அழுது நண்பரிடம் பேசும் கட்சியில் அபார நடிப்பை வெளிப்படுகிறார் சித்து. அதேபோல் ராஷி கன்னாவிடம் ரொமான்ஸ், பழிவாங்கும் குணத்தில் காட்டும் தோரணை, பின் இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள் என படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்.
வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஸ்ரீநிதி ஷெட்டி பிரமாதப்படுத்துகிறார். ராஷி கன்னாவும் இருவருக்கும் போட்டி போட்டு நடித்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய பலமே கதையை முதலிலேயே கூறிவிட்டு, அதற்கு முன் என்ன நடந்தது என்பதை நான் லீனியராக காட்டும் திரைக்கதை அமைப்புதான்.
அதனாலேயே அடுத்து என்ன நடக்கும் என்று கேட்பதற்கு பதில் முன்பு என்ன நடந்தது என்று நம்மை கேட்க வைக்கிறது. படம் பார்க்கும்போது இது புரியும். சித்து ஏன்? எதற்கு இதையெல்லாம் செய்கிறார்? என்று ஆடியன்ஸ் கேட்பதுபோல் ஒரு கேரக்டராக மகேஷ் எனும் பாத்திரத்தில் ஹர்ஷா நடித்துள்ளார். அவர் கூறும் ஒன்லைன் பஞ்ச் சிரிப்பலை.
அதேசமயம் எமோஷனல் வசனமும் பேசி அசத்துகிறார். சிக்கலான ஒரு கதையை கையிலெடுத்து அதனை ரசிக்கும்படி சுவாரஸ்யமாக கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் நீரஜா கோணா. ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யமாக நகர்கின்றன.
படம் முழுக்க காமெடி பரவி இருப்பது செம என்டர்டைன்மென்ட் ஃபீல் தருகிறது. ஸ்ரீநிதிக்கு கருமுட்டையை செலுத்தும்போது பிளேஷ்பேக் கட்-யில் சிந்துவும், ஸ்ரீநிதியும் கூடல் கொண்டதை காட்டுவது சஞ்சலத்தை ஏற்படுத்துவதால் அதனை தவிர்த்திருக்கலாம்.
க்ளாப்ஸ்
கதைக்களம் மற்றும் திரைக்கதை
நடிகர்களின் எதார்த்த நடிப்பு
காமெடி காட்சிகள்
தமனின் இசை
பல்ப்ஸ்
கிளைமேக்சில் சித்து தவறை நியாயப்படுத்தும் வசனம்
மொத்தத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் ரொமான்டிக் காமெடி பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த தெலுசு கதா செம ட்ரீட். கண்டிப்பாக திரையரங்கில் ரசிக்கலாம்.