தலைவன் தலைவி திரைவிமர்சனம்
கிராமத்து கதைக்களத்தின் கிங் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தலைவன் தலைவி. கணவன் மனைவி இடையிலான உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
குடும்பத்துடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதிக்கும் (ஆகாச வீரன்), நித்யா மேனனுக்கும் (பேரரசி) திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. இதன்பின் இருவரும் பழகி புரிந்துகொண்டு காதலிக்க துவங்கும்போது, விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, அவருடைய தந்தை அனைவரும் ரவுடிகள் என தெரியவர, நித்யா மேனன் வீட்டில் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்துவிட்டனர்.
ஆனால், தனது வீட்டை எதிர்த்து விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்கிறார் நித்யா மேனன். திருமணத்திற்கு பின் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்க, விஜய் சேதுபதியின் தந்தை சரவணன், தனது மருமகள் நித்யா மேனனை ஹோட்டல் கல்லா பெட்டியில் அமர்ந்து கணக்கை பார்த்து கொள்ள சொல்கிறார்.
இதுநாள் வரை அதனை பார்த்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதியின் அம்மாவுக்கு புதிதாக வந்த மருமகள் தனது இடத்தை பிடித்து விட்டால் என்கிற ஈகோ ஏற்படுகிறது. அதே போல் இதுநாள் வரை தனது பெயரை ஹோட்டல் இருந்தது, ஆனால், தற்போது தனது மனைவி பெயரில் ஹோட்டலை மாற்றியதால், விஜய் சேதுபதியின் தங்கைக்கும் கோபம் வருகிறது.
இதனால் அம்மாவும் மகளும் சேர்ந்து நித்யா மேனனை ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆள் போல் நடத்த, இதை நித்யா மேனன் அம்மா பார்க்க பெரும் சண்டை விஜய் சேதுபதிக்கும் - நித்யா மேனனுக்கும் இடையே வெடிக்கிறது. ஒரு நாள் சண்டை என்றால் மறுநாள் இணைந்து விடுகிறார்கள். இதற்கிடையில் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது.
இப்படி பிரிவதும் சேர்வதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் நேரத்தில், விஜய் சேதுபதிக்கு வேறொரு திருமணம் செய்து வைப்பதாக வரும் செய்தியை நித்யா மேனன் அறிந்து விடுகிறார். இதனால் பெரும் சண்டை வெடித்து, இருவரும் பிரிந்து விடுகிறார்கள். ஆனால், எப்படியாவது இணைந்து விட மாட்டோமா என இருவரும் தவிக்க, குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்வு கோயிலில் நடக்கிறது.
தந்தை எனக்கே தெரியாமல் என் மகளுக்கு முடி எடுக்கிறீர்களா என கோபத்துடன் விஜய் சேதுபதி கோயிலுக்கு செல்கிறார். அதன்பின் என்ன நடந்தது? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் விஜய் சேதுபதி மற்றும் கதாநாயகி நித்யா மேனன் இருவருமே தங்களது நடிப்பில் மிரட்டிவிட்டனர். உண்மையாகவே ஒரு கணவன் மனைவிக்கு இடையே எப்படி சண்டை வந்தால் நடந்து கொள்வார்களா அதே போல் திரையில் அதனை வெளிப்படுத்தியுள்ளனர். மொத்த படத்தையும் இருவரும் இறுதி வரை சுமந்து செல்கிறார்கள். ரொமான்ஸ், சண்டை, டான்ஸ், நகைச்சுவை என அனைத்திலும் இந்த ஜோடி வேற லெவலில் கலக்கியுள்ளனர்.
அதே போல் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக தீபா, சற்று வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார். அதற்கு அவருக்கு பாராட்டுக்கள். இவர்கள் அனைவரையும் தாண்டி படத்தை வெற்றிகரமாக தனது நகைச்சுவையின் மூலம் கொண்டு செல்கிறார் யோகி பாபு.
இயக்குநர் பாண்டிராஜ் எடுத்துக் கொண்ட கதைக்களத்தை சிறப்பான திரைக்கதையோடு திரையில் வழங்கியுள்ளார். சில இடங்களில் 'என்னடா இது' என்பது போல் சலிப்பு ஏற்பட்டாலும், நகைச்சுவை நம்மை தேற்றிவிடுகிறது. அதுவே படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.
அதே போல் சில காட்சிகள் நம்முடன் கனெக்ட் ஆகவில்லை. அதற்கு காரணம் பின்னணி இசையாக கூட இருக்கலாம். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பெரிதாக படத்திற்கு உதவவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய பின்னணி இசை நன்றாக இருந்தாலும், அது இந்த படத்திற்கு செட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொட்டல முட்டாயே பாடலை தவிர்த்து வேறு எந்த பாடலும் மனதிலும் பதியவில்லை. ஆனால், பொட்டல முட்டாயே பாடலை கம்போஸ் செய்த விதம் சூப்பர்.
இயக்குநர் பாண்டிராஜ் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான, வலுவான வெயிட்டேஜ் கொடுத்துள்ளார். அதனை ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகளும் சிறப்பாக எடுத்து செய்துள்ளனர். அதே போல் திரைக்கதையை வடிவமைத்த விதமும் ரசிக்க வைக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டைக்கு விவாகரத்து முடிவு அல்ல, அதை தாண்டியும் உறவு உள்ளது என்பதை இப்படத்தில் கூறியுள்ளார். அதனை அழகான காட்சிகளோடு திரையில் வழங்கிய விதம் சிறப்பு.
கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை என்றால், அது அவர்களுடைய வாழ்க்கை அவர்களே பார்த்து கொள்வார்கள், சொந்தக்காரர்கள் யாரும் இடையில் வராமல் இருந்தாலே போதும் என கூறிய கருத்து படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. விஜய் சேதுபதியின் வீடு மற்றும் ஹோட்டல், நித்யா மேனனின் வீடு, பாண்டி முனீஸ்வரர் கோவில் என அனைத்தையும் மிகவும் அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் எம். சுகுமார். அதே போல் எடிட்டிங் படத்திற்கு மிகவும் அளவில் உதவியுள்ளது. மற்ற டெக்னீகளான விஷயங்களிலும் பெரிதாக எதுவும் குறையில்லை.
பிளஸ் பாயிண்ட்
விஜய் சேதுபதி, நித்யா மேனன், தீபா, செம்பன் வினோத், யோகி பாபு
மற்ற நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
திரைக்கதை, ஒளிப்பதிவு
நகைச்சுவை காட்சிகள்
எடிட்டிங்
மைனஸ் பாயிண்ட்
சில இடங்களில் ஏற்படும் சலிப்பு
கதைக்கு செட் ஆகாத சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை