G.O.A.T திரைவிமர்சனம்
தளபதி விஜய் - வெங்கட் பிரபு - ஏஜிஎஸ் கூட்டணியில் உருவாகி இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன் என பலரும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி - மல்ட்டி ஸ்டாரர் - டீ ஏஜிங் - பல ஆண்டுகள் கழித்து யுவன் இசையில் விஜய் - விஜயகாந்த் கேமியோ என பல்வேறு எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது இருந்த நிலையில், முழு எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்துள்ளதா என்று பார்க்கலாம்.
கதைக்களம்
தளபதி விஜய் (காந்தி), பிரஷாந்த், பிரபு தேவா மற்றும் அஜ்மல் ஆகிய நால்வரும் சீக்ரெட் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தலைமை அதிகாரியாக ஜெயராம் இருக்கிறார்.
இவர்கள் இணைந்து செய்த மிஷன் ஒன்றில் மோகன் அவருடைய குடும்பமும் பாதிக்கப்பட்டு, அதில் தனது குடும்பத்தை இழக்கிறார் மோகன். மறுபுறம் தாய்லாந்துக்கு மற்றொரு மிஷன் காரணமாக செல்லும் விஜய் தனது மனைவி மற்றும் மகனையும் அங்கு அழைத்து செல்ல, பிரச்சனை ஏற்படுகிறது.
இதில் விஜய்யின் மகன் ஜீவன் இறந்துவிடுகிறான். இதன்பின் சீக்ரெட் வேலையை விட்டு வெளியேறும் விஜய்க்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதன்பின் மீண்டும் Squadல் இணையும் விஜய்க்கு என்னென்ன பிரச்சனை எல்லாம் வந்தது? இதனை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
தளபதி விஜய் பட்டையை கிளப்பியுள்ளார். தந்தை கதாபாத்திரத்திலும் மகன் கதாபாத்திரத்திலும் வேற லெவல். குறிப்பாக மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் கலாட்டா அதகளம் தான். ஆக்ஷன், எமோஷனல், நகைச்சுவை என தனக்கென உரித்தான நடிப்பில் மிரட்டியுள்ளார்.
பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். அஜ்மல், லைலா, வைபவ், ஜெயராம், பிரேம்ஜிக்கு குறைந்த காட்சிகள் என்றாலும் பக்காவாக இருந்தது. குறை என்று எதுவும் இல்லை. மீனாட்சி சவுத்ரி பெரிதும் கவரவில்லை.
வழக்கமான ரிவெஞ் ஸ்டோரி என்றாலும் தனது திரைக்கதை மற்றும் High Moments-ஐ வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார். சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் கேமியோ கைதட்டல்களை அள்ளுகிறது.
குறிப்பாக, கேப்டன் விஜயகாந்தின் இன்ட்ரோ திரையரங்கையே தெறிக்க விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது வேற லெவல். டீ ஏஜிங் மற்றும் AI தொழில்நுட்பங்கள் சில இடங்களில் பிசிறு தட்டுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இவ்வளவு மிகப்பெரிய விஷயம் செய்ததே பெரும் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்.
முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுவென செல்கிறது. குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் பல மாஸ் Moments வைத்து திரையரங்கை தெறிக்கவிட்டார் வெங்கட் பிரபு என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் ஸ்பார்க் பாடலை தவிர்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ஹீரோவாக மட்டுமின்றி முரட்டுத்தனமான வில்லனாகவும் கலக்கியுள்ளார் தளபதி விஜய். தளபதி vs இளையதளபதி வெறித்தனமாக இருந்தது. படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா, பின்னணி இசையிலும் பாடல்களிலும் வெளுத்து வாங்கி விட்டார். குறிப்பாக பின்னணி இசை மாஸ் காட்சிகளுக்கு பெரிதளவில் உதவுகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் பக்கா.
பிளஸ் பாயிண்ட்
தளபதி மற்றும் இளைய தளபதியின் நடிப்பு
மற்ற நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு
இடைவேளை காட்சி, இரண்டாம் பாதி குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள்
விஜயகாந்த் இன்ட்ரோ
டீ ஏஜிங் மற்றும் AI முயற்சி
மைனஸ் பாயிண்ட்
முதல் பாதியில் ஏற்பட்ட தொய்வு
மொத்தத்தில் தளபதி விஜய்யின் GOAT, விஜய் ரசிகர்களுக்கும் கமர்ஷியல் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
