தண்டகாரண்யம் திரை விமர்சனம்
தண்டகாரண்யம்
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் வெளியாகியுள்ள தண்டகாரண்யம் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.
கதைக்களம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பய்யூர் என்ற மலைகிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் (தினேஷ்). இவர் தனது தம்பி முருகனை (கலையரசன்) வனசரக அதிகாரியாக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
முருகன் 7 ஆண்டுகளாக தற்காலிக ரேஞ்சராக வேலைபார்த்து வர உயரதிகாரி அருள்தாஸுடன் மோதல் ஏற்படுகிறது. இதன் விளைவாக பணி நிரந்தரத்திற்காக அவர் காத்திருந்தது நொறுங்கிப் போகிறது.
பின்னர் ராணுவ பட்டாலியனில் சேர ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்திற்கு செல்கிறார் முருகன். அங்கு ஷபீர், பால சரவணன் ஆகியோருடன் கடுமையான பயிற்சிகளை எடுக்கிறார். ஆனால் ஷபீர் அடிக்கடி அவர்களை வம்பிழுகிறார். அதே சமயம் ஊரில் பணக்காரராக இருக்கும் முத்துக்குமார் உடன் சடையனுக்கு ஏலம் எடுப்பது தொடர்பாக மோதல் ஏற்படுகிறது.
அதனைத் தொடர்ந்து முத்துக்குமாரை தம்பிக்காக ஜெயிலுக்கு அனுப்புகிறார் சடையன். முருகனுக்கு வேலை கிடைத்ததா? முத்துகுமார், சடையன் இருவருக்குமான பகை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2008யில் இந்த கதையில் நடப்பதுபோல் ஆரம்பிக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநார் அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். முருகனாக கலையரசன் வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம். அந்தளவிற்கு நடிப்பை தந்திருக்கிறார்.
அதேபோல் தினேஷும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், அருள்தாஸ் ஆகியோரும் நல்ல கதாபாத்திரமாகவே மிளிர்கின்றனர். இவர்களைத் தாண்டி பார்வையிலேயே பயமுறுத்துகிறார் யுவன் மயில்சாமி. உஸ்தாத் என்ற கதாபாத்திரத்தில் மிடுக்கான அதிகாரியாக அடக்குமுறை செய்கிறார்.
பயிற்சி மையத்தில் ஆரம்பிக்கும் கதை பின்னர் பிளாஷ்பேக்கில் மலைவாழ் மக்களில் ஒருவர் அதிகாரியாக போராடுவதை காட்டுகிறது. அதில் நடக்கும் அரசியல், கடத்தல் என பல விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும், பிரதீப்பின் கேமராவும் அதற்கு வலுசேர்க்கின்றன. இடைவேளைக்கு பிறகு கலையரசனுக்கு தெரிய வரும் உண்மை யூகிக்கக் கூடியதாக இருந்தாலும் நல்ல எமோஷனல் டச். "ஓ பிரியா பிரியா.." பாடலுக்காகவே கதாநாயகி வின்சு சாமை ரசிக்கலாம். அதையும் தாண்டி காதல் வசனம் மட்டுமின்றி, ஒரு காட்சியில் ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார்.
வட மாநிலத்தில் ஒரு முக்கிய சம்பவத்தை கையில் எடுத்த இயக்குநர், அதனுடனே திரைக்கதையை கொண்டு செல்லாமல், இன்னொரு ஹீரோவுக்கான முக்கியத்துவத்தையும் தர வேண்டும் என்பதற்காகவே தினேஷ் கதாபாத்திரத்தின் ட்ராவல் இருக்கிறது. இது இரண்டு படங்களை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.
கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று எளிதில் யூகித்து விடலாம். எனினும் பல காட்சிகள் அழுத்தமாக அமைத்துள்ளன.
க்ளாப்ஸ்
அழுத்தமான கதை நடிகர்களின் நடிப்பு யதார்த்த காட்சிகள் இசை
பல்ப்ஸ்
யூகிக்கக் கூடிய திரைக்கதை
மொத்தத்தில் விசாரணை, விடுதலை மாதிரியான படங்களின் வரிசையில் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறது இந்த தாண்டகாரண்யம்.