தண்டேல் திரை விமர்சனம்
தண்டேல்
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் ஏற்கனவே வந்த லவ் ஸ்டோரி படம் பிரமாண்ட ஹிட் அடிக்க மீண்டும் இதே ஜோடி தண்டேல் படத்தில் இணைய பழைய மேஜிக் இதிலும் இருந்ததா, பார்ப்போம்.
கதைக்களம்
சாய் பல்லவி, நாக சைதன்யா இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இதில் நாக சைதன்யா தண்டேல்(தலைவன்) ஆக பொறுப்பேற்று 9 மாதம் குஜராத் தாண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க போக மீதம் 3 மாதம் ஊருக்கு வருகிறார்.
இதில் ஒரு முறை சாய் பல்லவி எவ்வளவு சொல்லியும் நாக சைதன்யா கடலுக்கு மீன் பிடிக்க செல்ல, அப்போது பெரும் புயல் உண்டாகிறது.
அந்த புயலில் ஒருவரை காப்பாற்ற நாக சைதன்யா செல்ல, தெரியாமல் படகு பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல, அனைவரையும் பாகிஸ்தான் அரசாங்கம் கைது செய்கிறது.
பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நாக சைதன்யா தப்பித்து இந்தியா வந்து சாய் பல்லவியை கரம் பிடித்தாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
நாக சைதன்யா ஒரு சில தோல்விக்கு பிறகு செம கம்பேக் ஆக அமைந்துள்ளது இந்த தண்டேல் படம்.
மீனவ தலைவனாக கலக்கியுள்ளார். சாய் பல்லவியுடன் ரொமான்ஸ், தன் நண்பனுக்காக இறங்கி சண்டை போடுவது, பாகிஸ்தான் சிறைச்சாலையில் தேசிய கொடிக்காக காவலாளிகளிடம் போராடும் இடம் என கமர்ஷியல் மாஸ் ஹீரோவாக ஜொலித்துள்ளார்.
சாய் பல்லவி வழக்கம் போல் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தாலும், சமீபத்தில் எல்லோரும் பார்த்த அமரன் படத்தையும் நியாபகப்படுத்துகிறார். தன் காதலனுக்காக அவர் ஏங்கும் இடமெல்லாம் சிறப்பாக நடித்துள்ளார்.
தன் பேச்சை கேட்காத காதலன் பாகிஸ்தான் சிறைச்சாலையில் இருக்கும் போது கூட கோவத்தில் பேசாமல் இருப்பது என பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார். படத்தின் முதல் பாதி காதல், ஆட்டம், பாட்டம் என செல்ல, இரண்டாம் பாதியில் பாகிஸ்தான் இந்தியா என கதை செல்ல, அப்படியே நம் ரோஜா படத்தை வேறு ஒரு வெர்சனில் பார்த்தது போல் உள்ளது.
அதிலும் சிறைச்சாலையில் வரும் தேசியகொடி காட்சி அப்படியே ரோஜா-வை தான் நியாபக்கப்படுத்துகிறது. அமரன் உண்மை கதை என்றாலும் சினிமாவிற்கான மாற்றம் பெரிதும் படத்தை தொந்தரவு செய்யவில்லை.
ஆனால், இது உண்மை கதை என்று சொல்லப்பட்டாலும், ஆந்திரா மசாலாவை அள்ளி தூவியுள்ளனர். பாகிஸ்தான் கலவரத்திலேயே தப்பித்து மீண்டும் சிறைச்சாலைக்கு நாக சைதன்யா வருவது எல்லாம் எல்லை மீறிய லாஜிக் மீறலாக தான் உள்ளது.
டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது, அதிலும் தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசை, பாடல்கள் அசத்தல். ஒளிப்பதிவும் சூப்பர்.
க்ளாப்ஸ்
நாக சைதன்யா, சாய் பல்லவி காதல் காட்சிகள். படத்தின் முதல் பாதி. பாடல்கள், பின்னணி இசை. கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி பாகிஸ்தான் காட்சிகள் பெரும் ஹீரோயிசமாக காட்டியது கொஞ்சம் யதார்த்ததை தாண்டுகிறது.
மொத்தத்தில் இந்த தண்டேல் சத்யா, ராஜு காதல் போராட்டம் நம்மையும் கலங்க வைத்த வெற்றியடைய வைக்கிறது.