தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ் திரை விமர்சனம்
கான்ஜூரிங் படவரிசையின் கடைசி பாகமாக வெளியாகியுள்ள "தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்" திரைப்படம் நம்மை மிரட்டியதா என்று பார்ப்போமா.
கதைக்களம்
1964யில் ஆவிகளை விரட்டும் எட் வாரென், லொரைன் வாரென் தம்பதி ஒரு வீட்டில் அமானுஷ்யம் நடப்பதாக அறிந்து அங்கே செல்கின்றனர். அந்த வீட்டில் இருக்கும் ஆவி இருப்பதாக கூற, கர்ப்பிணியாக உள்ள லொரைன் ஆள் உயர கண்ணாடியிடம் செல்கிறார்.
அவர் அதனை தொடும்போது விரிசல் ஏற்பட்டு ஆவி இருப்பதை உணர, பின்னர் பிரசவ வலி ஏற்படுகிறது. மருத்துவமனையில் அவரது பிரசவத்தின்போது சில விஷயங்கள் தப்பாக நடக்க குழந்தை இறந்து பிறக்கிறது. ஆனால் என் குழந்தையை எனக்கு கொடுத்துவிடு என லொரைன் கதறி அழ, பிறந்த குழந்தை உயிருடன் வந்துவிடுகிறது.
இது நடந்து சில ஆண்டுகள் கழித்து பென்சில்வெனியாவில் உள்ள ஜானெட், ஜேக் குடும்பம் அமானுஷ்ய விஷங்களால் பாதிக்கப்படுகிறது. ஆவிகளை விரட்டும் வேலையில் இருந்து விலகி இருக்கும் எட், லொரைன் தம்பதி அவர்களுக்கு உதவிட மறுக்கிறார்கள். அதனால் அங்கு பிரச்சனை இன்னும் பெரிதாகிறது.
1964யில் லொரைன் பார்த்த ஆள் உயர கண்ணாடி ஜானெட் வீட்டிற்கு வந்த பின்னர்தான் எல்லாம் தப்பாக நடக்கிறது. அதே சமயம் எட்டின் மகள் ஜூடியை ஒரு ஆவி அவ்வப்போது பயமுறுத்துகிறது. அவள் அதனை தாய் லொரைனிடம் கூறாமல் பலமுறை மறைக்கிறார். இதனையடுத்து ஜானெட் குடும்பத்தை எட், லொரைன் காப்பாற்றினார்களா? ஜூடியை பயமுறுத்தும் ஆவி ஏன் அதை செய்கிறது என்பதற்கான விடையே மீதிக்கதை.
டம் பற்றிய அலசல்
உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதாக இயக்குநர் மைக்கேல் சாவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை திகில் மோடிற்குள் கொண்டு செல்கின்றனர்.
படத்தின் பல இடங்களில் திக்கென தெறிக்கவிடும் ஸ்கேரி மொமெண்ட்ஸ் உள்ளன. குறிப்பாக ட்ரைலரில் வந்த கண்ணாடி அறை காட்சி திகிலின் உச்சம் என்று கூறலாம். ஜானெட் குடும்பத்தில் ஆவிகள் அட்டகாசம் செய்ய, மறுபுறம் எட் மற்றும் அவரது குடும்பத்தினர் நிம்மதியான வாழ்க்கையை நடத்துவது கான்ஜூரிங் படமா இது என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஜூடி தனது காதலரை அறிமுகப்படுவது, டோனி என்ற அந்த நபர் போலீஸ் வேலையை விட்டுவிட்டு திருமணம் செய்ய பெண் கேட்பது என பேமிலி டிராமாவாக பாதி படம் நகர்கிறது. அனபெல்லா வரும் சீன்கள் திகில் மொமெண்ட்தான் என்றாலும் இன்னும் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்.
நம்மை 1986ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்லும் வகையில் மேக்கிங் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை மற்றும் சவுண்ட் மிக்ஸிங், எபெக்ட்ஸ் ஆகியவை திகில் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன. திரைக்கதையில் வேகம் குறைவாக இருந்தாலும் கான்ஜூரிங் ரசிகர்களுக்கு ஏற்றற்போல் பல காட்சிகள் அமைக்கப்படுள்ளன.
க்ளாப்ஸ்
திகிலூட்டும் காட்சிகள்
பின்னணி இசை
பல்ப்ஸ்
சுவாரஸ்யம் குறைவான திரைக்கதை