The Crow : திரை விமர்சனம்
ரூபர்ட் சாண்டர்ஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள The Crow கோதிக் சூப்பர்ஹீரோ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
வின்சென்ட் ரோக் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தனது நித்திய ஜீவனுக்கு ஈடாக அப்பாவிகளின் ஆத்மாக்களை நரகத்திற்கு அனுப்ப சாத்தனிடம் ஒப்பந்தம் செய்கிறார்.
அதன்படி பலரின் ஆத்மாக்களை நரகத்திற்கு அனுப்பும் ரோக், நிகழ் காலத்தில் ஷெல்லியின் தோழி ஸடியின் காதில் மந்திரங்களை கிசுகிசுக்க, அதனைக் கேட்டு அவள் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார்.
மறுபுறம் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் ஷெல்லியை, ரோக்கின் ஆட்கள் ஒரு காரணத்திற்காக தேடி வரும்போது, எரிக் அவரை காப்பாற்றி அவருடன் தப்பிச் செல்கிறார். பின்னர் இருவரும் காதலில் விழுந்து மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்க வேளையில் கொல்லப்படுகின்றனர்.
அதன் பின் நரகம் போன்ற ஒரு இடத்தில் கண் விழிக்கும் எரிக், மீண்டும் நிஜ உலகிற்கு சென்று தனது காதலியை எப்படி மீண்டும் உயிருடன் கொண்டு வந்தார்? ரோக்கிற்கு ஷெல்லியுடன் என்ன பிரச்சனை என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
The Crow பட வரிசையில் 1994ஆம் ஆண்டு வெளியான படத்திற்கு பிறகு இப்படம் வெளியாகியுள்ளது. ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் நடிப்பில் வெளியான கோஸ்ட் இன் தி ஷெல் படத்தை இயக்கிய ரூபர்ட் சாண்டர்ஸ்தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
டேனி ஹஸ்டன் வின்சென்ட் ரோக் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அவர் தனது முகபாவனைகளிலேயே கதிகலங்க வைக்கிறார். எரிக்காக வரும் பில் ஸ்கார்ஸ்கார்ட், ஷெல்லியாக நடித்திருக்கும் ட்விக்ஸ் இருவரின் காதல் காட்சிகள், அதில் அவர்கள் காட்டும் நெருக்கம் நல்ல ரொமாண்டிக் வெர்சன்.
ட்விக்ஸ் நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். பில் ஆக்ஷ்ன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸிற்கு முன்பு வரும் சண்டைக்காட்சி சிலிர்க்க வைக்கிறது.
ஸாக் பெய்லின், வில்லியம் ஸ்னேய்டரின் திரைக்கதை மிதமான வேகத்தில் பயணித்தாலும் தொய்வை தரவில்லை. ஸ்டீவ் அனீஸின் கேமரா ஒர்க் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. வோல்கரின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது.
எரிக் தனக்கு கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி நிஜ உலகில் பலரை கொல்லும் காட்சிகள் ரணகளம். அதீத வன்முறை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்காக கண்டிப்பாக குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் அல்ல.
க்ளாப்ஸ்
கதை மற்றும் திரைக்கதை
சண்டைக் காட்சிகள்
பின்னணி இசை
பல்ப்ஸ்
முடிவு தெரிந்த பின்னும் நீளும் கிளைமேக்ஸ்