The Fantastic Four: First Steps திரை விமர்சனம்
மார்வல் எண்ட் கேம் முடிந்ததில் இருந்தே மற்றொரு யுனிவர்ஸை உருவாக்க படாதபாடு பட்டு வருகிறது, வரிசையாக தோல்வி வர, இந்த The Fantastic Four: First Steps அத்தகைய ஆசையை மார்வல்ஸுக்கு நிறைவேற்றியதா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே பெண்டாஸ்டிக் டீம் ஒரு பேட்டி கொடுப்பது போல் தொடங்குகிறது, மக்கள் அனைவரும் இவர்களை தேவ தூதர்கள் போல் கொண்டாடுகின்றனர், இவர்கள் தான் நம்மை காப்பாற்றும் தேவர்கள் என்பது போல் கொண்டாடி வருகின்றனர்.
அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஷால பெல் என்கிற ஒரு ஸ்டில் பெண் வருகிறார், அவர் இந்த உலகத்தையே அழிக்க Galactus வருகிறார் என எச்சரித்து செல்கிறார். அவரை பின் தொடர்ந்து பெண்டாஸ்டிக் 4 டீம் ரீட், சூசு, பென், ஜானி ஆகிய செல்கின்றனர்.
இதில் ரீட், சுசு தம்பதியினர், சுசு கர்ப்பமாக உள்ளார். ஸ்டில் பெண்ணை பின் தொடர்ந்து செல்ல, அங்கு Galactus-வுடன் ஒரு பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
Galactus, சுசு-விற்கு பிறக்கும் குழந்தை எனக்கு வேண்டும், கொடுத்தால் உங்கள் உலகை விடுகிறேன் என சொல்ல, உலகத்தை காப்பாற்ற குழந்தையை கொடுத்தார்களா, இல்லை வேறு வழியில் Galactus-யை அழித்து உலகத்தை காப்பாற்றினார்களா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
முதலில் யார் இந்த பெண்டாஸ்டிக் 4, இதற்கு முன்பு வந்த பாகங்களில் இவர்களுக்கு என்ன ஆனது என்பதன் விளக்கம் இருக்கும், இதில் அதை ஒரு உரையாடலாகவே கடந்து செல்கின்றனர். ஸ்பேஸ்-ல் காஸ்மிக் ரேஸ் தாக்கி இவர்களுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது.
சூப்பர் ஹீரோ படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் தான், உலகம் அழிகிறது அதை காப்பாற்ற வேண்டும், இதுவும் விதி விலக்கல்ல.
ஆனால், இதில் கொஞ்சம் சயின்ஸ் ஆழமாகவே சென்றுள்ளனர், அதனாலேயே இப்படம் ரசிக்க வைக்கிறது, ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
அதிலும் Galactus தேடி செல்லும் காட்சியில் ஒளியை விட வேகமாக செல்வது, அங்கிருந்து ப்ளாக் ஹோல் உள்ளே இழுப்பது, அங்கிருந்து எஸ்கேப் ஆக செய்யும் விஷயம் என எதோ சூப்பர் ஹீரோ படம் தாண்டி இண்டர்ஸ்டெல்லர் வந்துவிட்டோமோ என்று ஆகிறது.
படம் வெறுமென ஒரு உலகத்தை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ என்றில்லாமல் எமோஷ்னல் காட்சிகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர், குறிப்பாக சுசு தன் குழந்தையை காப்பாற்ற வான் அளவு உயர்ந்து நிற்கும் Galactus-யை தடுத்து நிறுத்த தன் உயிரையே கொடுக்கும் நிலைக்கு போராடும் இடமெல்லாம் எல்லா ஊரிலும் அம்மா செண்டிமெண்ட் ஒர்க் ஆகும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
படத்தில் பல நிறைகள் இருந்தாலும் டெக்னிக்கலாக இப்படத்தின் ஒளிப்பதிவு அதிக வெளிச்சம், பல இடங்களில் கண் கூசுகிறது, இசை ரசிக்க வைக்கிறது.
க்ளாப்ஸ்
சண்டைக்காட்சிகள் அதற்கு தானே வந்தோம், அதை நிறைவாக செய்துள்ளனர்.
எமோஷ்னல் காட்சிகள்.
போஸ்ட் கிரிடிட்ஸ் மார்வல் ரசிகர்களுக்கு செம விருந்து, சர்ப்ரைஸ் எண்ட்ரி.
பல்ப்ஸ்
டெக்னிக்கலாக படம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.
முக்கியமாக சிஜி ஒர்க் இன்னும் பெட்டராக இருந்துருக்கலாம்.
டெம்ப்ளேட் திரைக்கதை.