The First Omen: திரைப்பட விமர்சனம்
சாத்தான் குழந்தையின் பிறப்பு எனும் கருத்தியலில் 1976ஆம் ஆண்டு முதல் எடுக்கப்படம் திரைப்பட வரிசை ஓமன்.
இந்த franchise-யில் அர்காஷா ஸ்டீன்வென்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தி பர்ஸ்ட் ஓமன்.
1976யில் வெளியான தி ஓமன் படத்தின் prequel (முன்கதை) ஆக வெளியாகியுள்ள இப்படம் குறித்து இங்கு காண்போம்.
கதைக்களம்
இத்தாலியின் ரோம் நகருக்கு வருகை தரும் மார்கரட் டைனோ (நெல் டைகர் பிரீ), கன்னியாஸ்திரிகள் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சேவை செய்ய ஆரம்பிக்கிறார்.
ஆனால், அங்கு நடக்கும் சில விநோத நடைமுறைகள் மார்கரட்டை திகைக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் சிறுமி ஒருவர் மூலம் சாத்தான் குழந்தை பிறக்கப் போகிறது என்ற விஷயம் மார்கரெட்டுக்கு தெரிய வருகிறது.
அதன் பின்னர் அவர் சிறுமியை காப்பாற்றி குழந்தையின் பிறப்பினை தடுத்து நிறுத்தினாரா? அவரை சுற்றி நடக்கும் மர்மங்களை எப்படி கையாண்டார் என்பதே மீதிக்கதை.
விமர்சனம்
கால காலமாக எடுக்கப்பட்டு வரும் கதை தான் என்றாலும், திரைக்கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் அர்கஷா. அவருடன் சேர்ந்து டிம் ஸ்மித், கெய்த் தாமஸும் திரைக்கதை அமைத்துள்ளனர்.
ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை முதல் பாதி, இரண்டாம் பாதி என பிரிக்க முடியாது என்பதால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களை ஈர்க்கிறது.
ஆங்காங்கே வரும் திகில் காட்சிகள் பயமுறுத்தும் வகையில் உள்ளன. அதற்கு துணையாய் மார்க் கோர்வேனின் இசை கைகொடுக்கிறது.
மார்க்கெட்டாக வரும் நெல் டைகர் நடிப்பில் மிரட்டுகிறார். படத்தில் முக்கிய கட்டத்தில் வரும் ட்விஸ்ட் மிரட்சி அளிக்கிறது.
இயக்குநர் அர்கஷா ஸ்டீவென்சனுக்கு இது முதல் படம் என்றாலும், நேர்த்தியான திரைக்கதையமைப்பில் சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார்.
வயது வந்தோருக்கான படம் தான் என்றாலும் சில காட்சிகள் இதயம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிளஸ் பாயிண்ட்
நடிகர்களின் யதார்த்த நடிப்பு
மிரட்டும் பின்னணி இசை
நேர்த்தியான திரைக்கதை
மைனஸ் பாயிண்ட்
ஓமன் திரைப்பட வரிசை குறித்து தெரிந்தவர்களுக்கு அடுத்து என்ன என்பது எளிதாக தெரிந்துவிடும்
மொத்தத்தில் மிரட்டலான காட்சிகளுடன் திகில் அனுபவத்தை பெற விரும்புவோர் கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கலாம்.
ரேட்டிங்: 3.5/5