தி கேர்ள்ப்ரெண்ட்: திரை விமர்சனம்
ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள தி கேர்ள்ப்ரெண்ட் தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.

கதைக்களம்
பூமாதேவி (ராஷ்மிகா மந்தனா) கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலை பாடப்பிரிவில் சேருகிறார். அங்கு அவருக்கு இரண்டு நண்பர்கள் கிடைக்க, கணினி பிரிவில் சேரும் மாணவன் விக்ரம் ரேகிங்கில் ஈடுபடுத்தப்படும்போது டான்ஸ் ஆடி அசத்துகிறார்.
அவரது ஆட்டத்தை பார்க்கும் துர்காவிற்கு (அனு இம்மானுவேல்) விக்ரம் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். ஆனால், துர்கா காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும்போது அதனை வேண்டுமென்றே தவிர்க்கிறார் விக்ரம். இந்த சூழலில் பூமாவும், விக்ரமும் ஒரு விபத்தில் சந்திக்கின்றனர்.

அதன் பின்னர் இருவரும் பழக ஆரம்பிக்க ஒருநாள் பூமாவுக்கு முத்தமிட்டதை கல்லூரி முழுக்க கூறி, நாங்கள் காதலிக்கிறோம் என்று அறிவிக்கிறார் விக்ரம். அதனால் பலரும் பூமாவுக்கு வாழ்த்து கூற குழப்பத்திலேயே விக்ரமை காதலிக்க தொடங்குகிறார் பூமா. இதற்கிடையில் உங்கள் காதல் முறிய நான் காத்திருக்கிறேன் என்று விக்ரமிடம் துர்கா கூறுகிறார்.
பூமாவை காதலிப்பதாக கூறி விக்ரம் அவரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார். அதனை ஒருநாள் உணரும் பூமா இனி நம் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயப்பட, அதன் பின்னர் என்ன ஆனது? பூமா டாக்சிக் காதலில் இருந்து வெளியேறினாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
தாமா படத்தில் வேம்பையர் ஆக மிரட்டிய ராஷ்மிகா மந்தானா, இப்படத்தில் பூமா கதாபாத்திரத்தில் அமைதியான பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார். படம் முழுக்க குழப்பமான மனநிலையில் இருக்கும் கல்லூரி பெண்ணை அப்படியே பிரதிபலிக்கிறார்.
ஆங்கில இலக்கிய படிப்பை தேர்ந்தெடுத்ததற்கு அவர் கூறும் விளக்கம் ஒரு கவிதை. உடைந்து அழும் காட்சியிலும், அப்பாவிடம் கெஞ்சும் காட்சியிலும் மிரட்டும் ராஷ்மிகா, கிளைமேக்ஸ் காட்டும் சேஞ்ச் ஓவர் சிறப்பு. கன்னட நடிகரான தீக்ஷித் ஷெட்டி விக்ரம் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டியைதான் பிரதிபலித்துள்ளார். என்றாலும் அவரின் நடிப்பு அருமை.

ரஷ்மிகாவிடம் கோபத்தை காட்டும் இடங்களில் வில்லத்தனத்தை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம் இது. மன்மதடு-2 படத்தின் தோல்விக்கு பிறகு இப்படத்தில் திரைக்கதையில் நன்றாக வேலை பார்த்துள்ளார் ராகுல் ரவீந்திரன். இயக்கம் மட்டுமின்றி HOD கதாபாத்திரத்திலும் நல்ல நடிப்பையும் தந்துள்ளார்.
டாக்சிக் காதலில் சிக்கிய கல்லூரி பெண் எந்த மாதிரியான உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்வாள் என்பதை அருமையாக காட்டிய விதத்திற்காக இயக்குநரை பாராட்டலாம். ஆனால் படத்தில் கல்லூரியை காட்டிய விதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. உதாரணமாக மாணவர் விடுதியில் ஹீரோயின் தங்குகிறார்.

அதேபோல் ஹீரோயின் ஹீரோவின் விடுதி அறையிலேயே குடியிருந்து பணிவிடை செய்கிறார். செக்யூரிட்டி என்பவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மேலும், கல்லூரியில் பேராசிரியர்கள் என்று 2 பேரை மட்டுமே காட்டுகிறார்கள். அதில் ஒருவர் HOD ஆக வரும் ராகுல் ரவீந்திரன்.
ஒரு HOD ஆக இருக்கும் அவருக்கு இதுதான் எங்கள் ஹாஸ்டல் என்று ராஷ்மிகா காட்டுகிறார். அதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரி கேம்பஸில் பக்கத்துக்கு கட்டிடமாகத்தான் விடுதி உள்ளது. ஹீரோ தீக்ஷித் தனது இஷ்டத்திற்கு அலப்பறை செய்கிறார். ஆனால் அது எதுவுமே கல்லூரி நிர்வாகத்தின் காதுக்கு வந்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது போன்ற பல லாஜிக் குறைகள்.

க்ளாப்ஸ்
ராஷ்மிகா, தீக்ஷித் நடிப்பு
டாக்சிக் காதலை காட்டிய விதம்
இசை
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
லாஹிக் மீறல்கள்
மொத்தத்தில் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு இந்த கேர்ள்பிரண்ட் நல்ல யோசனை கொடுத்துள்ளார். கண்டிப்பாக மாணவர்களும், பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்.
