தி ஹவுஸ்மெய்ட் (2025): திரை விமர்சனம்
சிட்னி ஸ்வீணி, பிரண்டன் ஸ்க்லேனர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள தி ஹவுஸ்மெய்ட் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.

கதைக்களம்
வீடு, வேலையில்லாததால் காரிலேயே தூங்கிக்கொண்டு கஷ்டப்படுகிறார் மில்லி கல்லோவே (சிட்னி ஸ்வீணி).
அப்போது நீனா வின்செஸ்டர், ஆண்ட்ரூ வின்செஸ்டர் தம்பதியின் வீட்டில் தங்கி வேலை செய்யும் பணி இருப்பதை அறிந்து மில்லி அங்கு செல்கிறார். பின்னர் அங்கு வேலைக்கு சேரும் மில்லி, வீட்டிற்கு வெளியே பனியை அகற்றும் பணியை செய்யும் நபரைப் பார்த்து சற்று பயப்படுகிறார்.

இங்கு எதற்கு வந்தாய் என்று அவர் கேட்டு பின், மேலே ஜன்னலில் நீனா இருப்பதைப் பார்த்து அமைதியாகிவிடுகிறார். இது மில்லிக்கு குழப்பத்தைத் தர, நீனாவின் மகள் சீசி பேசும் விதம் விசித்திரமாக தெரிகிறது.
நீனாவும் திடீரென கோபப்பட்டு கத்துகிறார். ஆனால், ஆண்ட்ரூ மட்டுமே நல்லவராக தெரிய சமாளித்து இருக்கலாம் என்று நினைக்கிறார் மில்லி. அதே சமயம் வீட்டில் உள்ள அலமாரி ஒன்றில், மனநல பிரச்சனை தொடர்பான மருந்துகள் இருப்பதை பார்க்கும் மில்லி, நீனாவின் நடவடிக்கைகளை வைத்து அவருக்கு ஏதே பிரச்சனை இருக்கிறது என நினைக்கிறார்.

இந்த சூழலில், ஒருநாள் நீனா வெளியூர் செல்ல ஆண்ட்ரூவும், மில்லியும் பார்ட்டி ஒன்றுக்கு சென்று ஒன்றாக தங்குகிறார்கள். அங்கு அவர்களுக்கு உறவு ஏற்பட பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2022யில் வெளியான தி ஹவுஸ்மெய்ட் நாவலைத் தழுவி பவுல் பெய்க் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஆரம்ப காட்சி முதலே திகில் பட பாணியில் செல்கிறது.
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஒரு திக் மொமெண்ட்டை வைத்து திடுக்கிட வைக்கிறார் இயக்குநர். அதேபோல் படத்தில் உள்ள ட்விஸ்ட்களை கணிக்க முடியாதபடி திரைக்கதையை அமைத்துள்ளார் ரெபேக்கா சொன்னென்ஷைன்.

மில்லியாக வரும் சிட்னி ஸ்வீணி, நீனாவாக நடித்திருக்கும் அமண்டா செய்பிரைட் மற்றும் ஆண்ட்ரூவாக வரும் பிரண்டன் ஸ்க்லேனர் ஆகிய மூவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். குறிப்பாக சிட்னி ஸ்வீணி கிளாமர் குயினாக பல காட்சிகளில் தோன்றுகிறார். படுக்கையறை காட்சிகளும் படத்தில் உள்ளன.
இது அடல்ட்ஸ் ஒன்லி படம் என்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது. அமண்டா செய்யும் சில விஷயங்கள் அடேங்கப்பா! என்று சொல்ல வைக்கிறது. அதேபோல் பிரண்டனும் தனது பங்குக்கு மிரட்டியிருக்கிறார்.

இவர்களைத் தாண்டி சீஸியாக வரும் சிறுமி இண்டியானா எல்லி வசன உச்சரிப்பிலேயே திகிலூட்டுகிறார். மிச்சேல் மோர்ரோனோ, எலிசபெத் பெர்கின்ஸ் உட்பட பிற நடிகர்கள் தங்களது பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.
தியோதோர் ஷாபிரோவின் பின்னணி மிரட்டலின் உச்சம். படம் முழுக்க நம்மை பரபரப்பில் வைத்துக் கொள்ள அவரது இசை உதவுகிறது. ஜான் ஸ்வார்ட்ஸ்மேனின் கேமரா சிறப்பு.

க்ளாப்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு
கதை மற்றும் திரைக்கதை
யூகிக்க முடியாத திருப்பங்கள்
பின்னணி இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த தி ஹவுஸ்மெய்ட் செய்த வேலை மிரட்டல். கண்டிப்பாக திரையரங்கில் தவறவிடக்கூடாத த்ரில்லர் படம்.

Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri