The Paradise (தெலுங்கு): திரை விமர்சனம்
The Paradise
நானி, மோகன் பாபு, கயாடு லோஹர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள தி பாரடைஸ் திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததாக என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
ஒரு காலத்தில் தஞ்சம் தேடி செகந்திராபாத்திற்கு வந்த சவாரி இனக்குழு, சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்டு அடிமைகளானது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோதும் சவாரி மக்களுக்கு எந்தவித அடையாளமும் கிடைக்கவில்லை.
இதனால் சம்மக்கா என்ற கர்ப்பிணிப் பெண் மக்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கிறார். இது அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஷிகன்ஜா மாலிக்கிற்கு கோபத்தை ஏற்படுத்த, அவர் செய்யும் கொடூரத்தில் சம்மக்காவிற்கு பிரசவம் ஆகிறது.

பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஆண் பிள்ளை உயிர்பிழைக்க, பெண் பிள்ளை இறந்துவிடுகிறது. அதே சமயம் தனது மகன் பிறந்த செய்தி அறிந்து ஷிகன்ஜா அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். ஒருவேளை உணவிற்கு கஷ்டப்படும் சூழலில் வளரும் அந்த குழந்தையை சடையன் (நானி) என்றே அழைக்கிறார்கள்.
சடையன் சிறுவனாக இருக்கும்போது தனது அம்மா குறித்து ஒரு விஷயத்தை அறிய, அவர் மீது கோபம் கொண்டு அப்பகுதியை விட்டு ஓடிவிடுக்கிறார். எதிர்பாராத விதமாக சிறுவனாக இருக்கும்போதே சடையன் கொலை செய்ய ஜெயிலுக்கு செல்கிறார்.
14 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி வரும் சடையன், தனது அம்மாவை புரிந்துகொண்டாரா, தனது மக்களுக்கு அடையாளத்தை பெற்று தந்தாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
தெலுங்கைத் தாண்டி தமிழ் உட்பட மொழிகளில் ரசிகர்கள் விரும்பக்கூடிய நடிகராக இருப்பவர் நானி. அவரது படங்கள் வழக்கமான மாஸ் மசாலாவைத் தாண்டி ரசிக்க வைக்கும் என்ற நிலைப்பாடு உள்ளது.
அதனாலேயே தி பாரடைஸ் படத்தின் லுக் அறிமுகமானதில் இருந்தே ஒரு எதிர்பார்ப்பு கிளப்பியது. அதிலும் குறிப்பாக தசரா என்ற மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓதேலாவுடன் நானி மீண்டும் கைகோர்த்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது.

தி பாரடைஸ் என்கிற உலகத்திற்கு நம்மை கொண்டு செல்லும்படியாக அட்டகாசமான ஒபெனிங் சீன் வைத்து படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குநர். காட்சிகள் நகர நகர விஜயகாந்தின் பெரியண்ணா, கேஜிஎப், பெத்தி உள்ளிட்ட படங்களின் நியாபகம் வருகிறது. அடிமைகளாக இருக்கும் மக்களை மீட்கும் ஹீரோ என்ற மாஸ் லைனை ஓவர்டோஸ் மசாலா தூவி எடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் ஒதேலா.
குறைகள் இருந்தாலும் முதல் பாதிவரை நன்றாகவே செல்லும் திரைக்கதை இடைவேளையில் கூஸ்பம்ப் மொமெண்ட்டை தருகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் சற்று தடுமாறும் திரைக்கதை கிளைமேக்ஸ் என்ற இலக்கை அடைய நீண்ட நேரம் எடுப்பது சோர்வைத் தருகிறது.
கர்ப்பிணியை கொடுமைப்படுத்துவது, காட்சிக்கு காட்சி இரத்தம் தெறிப்பது போன்ற அதீத வன்முறைக் காட்சிகள் பெரிய உறுத்தல். அதேபோல் ஹீரோயின் தொடர்பான தேவையில்லாத கிளாமர் காட்சிகள் கதையை விட்டு விலகி செல்ல வைக்கின்றன.

இவற்றைத் தாண்டி தூக்கில் தொங்கியும் உயிர்பிழைக்கும் ஹீரோ, துப்பாக்கியால் சுடப்பட்டு அடுத்த நிமிட நிற்கும் நாய், பிறந்த குழந்தையை ஏதோ பொம்மை போல் ஒவ்வொருத்தரும் தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர்பாஸ் ரகம். இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் கண்டிப்பாக ஒரு இனத்தையும், அதன் தலைவரையும் நியாபகப்படுத்தும்.
விஷயம் தெரிந்தவர்களுக்கு அந்த காட்சிகளில் ஒரு கூஸ்பம்ப் மொமெண்ட் வரும். நானியைப் பொறுத்தவரை மிரட்டலான ஆக்டிங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஈர்க்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்யும் அவர், சண்டைக்காட்சிகளில் பொளந்துகட்டியிருக்கிறார்.
சீனியர் நடிகரான மோகன் பாபு கொடூர வில்லனாக அறிமுகமாகி காணாமல் போகிறார். இரண்டாம் பாதியில் ஒரு காட்சியில் மிரள வைக்கும் அவர், வேறெதுவும் புத்திசாலித்தனமாக செய்யாதது ஏமாற்றம். கில் படத்தில் வில்லனாக மிரட்டிய ராகவ் ஜுயல் வீணடிக்கப்பட்டிருக்கிறார்; என்றாலும் இடைவேளை காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தை தாங்கி நிற்கும் மற்றொரு தூண் நானியின் அம்மாவாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னி (மே மாதம் ஹீரோயின்). படம் முழுக்கவே அபார நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஈஸ்வரி ராவ், தணிகல பரணி ஆகியோரும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.
ஆனால் சம்பூர்னேஷ் பாபு சிறப்பாக நடித்துள்ளார். ஹீரோயின் கயாடு லோஹரின் கிளாமர் காட்சிகள் ஏற்றுக்கொள்ளமுடியாத உறுத்தல். அனிருத் ரவிச்சந்திரின் பின்னணி இசை பெரிதளவில் இல்லையென்றாலும், இரண்டு பாடல்களில் ஆட்டம்போட வைத்துவிட்டார்.
டெக்னிக்கலாக படம் பிரம்மாண்டமாக உள்ளது. செட் ஒர்க் மிரட்டல். ராம்-லட்சுமண், ரியல் சதீஸ் மற்றும் மைபம் நபகந்தா சிம்ஹாத்திரியின் சண்டைக்காட்சிகள் மாஸாக இருந்தாலும் ஓவர்டோஸாகவும் உள்ளன. நல்ல கதைக்களத்தை ரசிக்கும்படியாக கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதேலா.
லாஜிக் மீறல்களை தவிர்த்து, படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
க்ளாப்ஸ்
நானி, சோனாலி குல்கர்னி மற்றும் மோகன் பாபு எடுத்துக்கொண்ட கதைக்களம் இடைவேளை பாடல்கள்
பல்ப்ஸ்
லாஜிக் மீறல்கள் அதீத வன்முறைக் காட்சிகள் படத்தின் நீளம்
மொத்தத்தில் இந்த பாரடைஸ் சரியான வரவேற்பை பார்வையாளர்களுக்கு கொடுக்கவில்லை. மாஸ் மசாலா விரும்பிகளுக்கு ஒர்க்அவுட் ஆகலாம்.