The Vvaan: Force of the Forrest திரை விமர்சனம்
தமன்னா, சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகியுள்ள The Vvaan: Force of the Forrest இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
தேவஞ்சல் என்ற கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வன் தேவி கோயில் உள்ளது. அதன் நுழைவு வாயிலில் இரவில் யாரும் செல்லக்கூடாது; மீறி சென்றால் அவர்கள் உயிருடன் திரும்ப முடியாது என்ற நம்பிக்கை உள்ளது.
அதனால் மக்கள் பகலில் அந்த கோயிலுக்கு சென்று வன் தேவியை வழிபடுகிறார்கள்; மாலையானவுடன் வேகமாக கிளம்பிவிடுகிறார்கள். இந்த சூழலில், மும்பையில் திருமாணமாகி குழந்தை இல்லாத சோகத்தில் இருக்கும் ரிஷி (சித்தார்த் மல்ஹோத்ரா), மம்தா (தமன்னா) தம்பதி தேவஞ்சலுக்கு வருகின்றனர்.

அங்குள்ள தனது அண்ணன் ஷஷி வீட்டில் ரிஷி தங்குகிறார். சத் பூஜைக்காக மம்தா காத்திருக்க, தீபக் என்ற நபர் வன் தேவி கோயில் இருக்கும் காட்டுப்பகுதி வழியாக ரோடு போட வேண்டும் என்று ஊர் மக்களை கூட்டி பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால், கோயில் ஐதீகத்தை மதிக்க வேண்டுமென கூறி ஊர் பெரியவர்கள் மறுக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கை இல்லாத ரிஷி தீபக்கிற்கு ஆதரவு அளிக்கிறார். நிலைமை இப்படி இருக்க இரவில் வன் தேவி கோயிலுக்கு செல்லும் நிலை ரிஷிக்கு ஏற்படுகிறது. அவர் அங்கு சென்ற பின் என்னவெல்லாம் நடந்தது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
குல தெய்வம் கதைக்களத்தை எலைட் குழுவினர் படமாக எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்தப்படம் வந்துள்ளது. காந்தாரா பட சாயலில் எடுக்க வேண்டும் நினைத்த இயக்குநர் தீபக் குமார் மிஸ்ரா, அதற்காக கொஞ்சம் கூட மெனக்கெடவில்லை என்பது நன்றாக தெரிகிறது.

முதல் 40 நிமிடங்கள் கதைக்குள்ளேயே செல்லாமல் மிகவும் சோதிக்கிறார்கள். அதிலும், தமன்னாவை வைத்து ப்ரமோட் செய்த பாடல் வரும் இடம் மிகவும் அபத்தம். அதன் பின்னர் இடைவேளையில்தான் கதையே ஆரம்பிக்கிறது. அதுவரை மனீஷ் பால் செய்யும் க்ரின்ச் காமெடியை எல்லாம் சகிக்க வேண்டியுள்ளது.
சரி, இரண்டாம் பாதியிலாவது படம் வேகமெடுக்கும் என்று பார்த்தல், இழுயோ இழுவையாக செல்கிறது திரைக்கதை. தமன்னா எதோ ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல ஆங்காங்கே காட்டுகிறார்கள். சித்தார்த் மல்ஹோத்ராவை பூஸ்ட் செய்ய வேண்டுமென்றே சண்டைக்காட்சிகள், கிளைமேக்ஸ் எல்லாம் வைக்கப்பட்டுள்ளன.

அனுப் சோனியின் வீடு எல்லா வசதியும் இருப்பதுபோல் உள்ளது; ஆனாலும் விறகு அடுப்பில் சமைக்கிறார்கள். அதிலும் எண்ணெய், கிரீம் போன்ற பிராண்டுகளை விளம்பரப்படுத்த க்ளோஸப் ஷாட் வேறு வைக்கிறார்கள். எங்கெங்கோ திரைக்கதையை கொண்டு சென்று ஒருவழியாக படத்தை முடிக்கிறார்கள்.
இரண்டே கால் மணிநேர படம் 4 மணிநேரம் ஓடுவதுபோல் உணரவைக்கிறது. பாடல்கள், பின்னணி இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவு ஓகே ரகம். அருணாப் குமாரின் திரைக்கதை சோர்வு.

க்ளாப்ஸ்
- சித்தார்த் மல்ஹோத்ரா
- இரண்டாம் பாதி ட்விஸ்ட்
பல்ப்ஸ்
- பொறுமையை சோதிக்கும் திரைக்கதை
- அப்பட்டமாக தெரியும் செட்
- எரிச்சலூட்டும் காமெடி
- லாஜிக்கே இல்லாத தீயசக்தி போர்ஷன்
மொத்தத்தில் இந்த Vvaan திரைப்படம் படுமோசமான அனுபவம்.

பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan