மயங்கி விழுந்த மகா.. அதிர்ச்சியில் உறைந்த திவ்யா, திரு - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். நேற்றைய எபிசோடில், திரு மற்றும் திவ்யாவின் ஃப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டில் டெடி பியர் வேஷம் அணிந்து மகா கலந்து கொண்டிருந்த நிலையில், இன்று நடக்கவிருக்கும் பரபரப்பான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

போட்டோஷூட்டின் போது திவ்யா, டெடி பியரை பயன்படுத்தி திருவிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள். அதன்பின் திருவுக்கு முத்தமிட முயற்சிக்க, அவன் அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான். உடனே திவ்யா, "டெடி... அவனை பிடி" என்று சொல்ல, டெடி வேஷத்தில் இருக்கும் மகா திருவை கட்டிப்பிடிக்கிறாள். இதனைத் தொடர்ந்து திவ்யா ஓடி வந்து திருவுக்கு முத்தமிடுகிறாள். இந்த காட்சிகளை பார்த்த மகா உள்ளுக்குள் மிகவும் வேதனையடைகிறாள்.

போட்டோஷூட் முடிந்த பிறகு திரு மற்றும் திவ்யா சாப்பிடச் செல்ல, டெடி பியர் உடைக்குள் இருந்த மகா திடீரென மயங்கி விழுகிறாள். இதைப் பார்த்த போட்டோகிராபர் பதற்றத்தில் கத்த, சத்தம் கேட்டு திருவும் திவ்யாவும் அங்கு ஓடி வருகின்றனர். அவர்கள் டெடி பியரின் முகமூடியை அகற்றியபோது, அதன் உள்ளே மகா இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பின்னர் திவ்யா, "எதற்காக இப்படி செய்தாய்?" என்று மகாவிடம் கேட்க, "போட்டோஷூட் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேஷம் போட்டேன்" என்று மகா கூறுகிறாள். இதனால் மனமுடைந்த திவ்யா, மகாவை கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்படுகிறாள்.

இதனைத் தொடர்ந்து, அம்பிகா கூறிய ஆசாரியைத் தேடி மகா செல்ல, கௌதம் அவளைப் பின்தொடர்கிறான். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை அறிய, திருமாங்கல்யம் சீரியலை இன்று இரவு 7:30 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.