Tillu Square திரை விமர்சனம்
Tillu Square திரை விமர்சனம்
2022யில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டிஜே தில்லு படத்தின் தொடர்ச்சியாக மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள படம் தில்லு 2.
இப்படத்தின் டிரைலரில் அனுபமா பரமேஸ்வரன் முத்தக்காட்சியில் நடித்திருந்தது வைரலானதால் படத்தின் வெளியீட்டுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் எகிறியது.
சித்து ஜோன்னலகத்தா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மாலிக் ராம் இயக்கியிருக்கும் தில்லு 2 படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஹீரோவான தில்லு (சித்து) Pub ஒன்றில் லில்லியை (அனுபமா) சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவரும் நெருக்கமாகி இருவரும் ஹோட்டல் அறைக்கு செல்கின்றனர். மறுநாள் தில்லு எழுந்து பார்க்கும்போது லில்லி அங்கு இல்லை.
ஒரு மாதம் அவரை தில்லு தேடி அலைய, லில்லியே தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தந்தையுடன் வந்து திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார். இருவரும் திருமணத்திற்கு தயாராகும் வேளையில் முந்தைய பாகத்தில் தில்லு பிரச்சனைக்குள் சிக்கிய கதாபாத்திரம் மீண்டும் வருகிறது.
அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது தில்லுவுக்கு மிகப்பெரிய ஷாக். தன்னை சுற்றி என்ன நடக்கிறது? கடந்த ஆண்டு செய்த குற்றத்தில் மீண்டும் சிக்கிவிடுவோமோ? என பல கேள்விகள் தில்லுவுக்கு ஏழ, அந்த பிரச்சனைகளில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே மீதிக்கதை.
படத்தைப் பற்றிய அலசல்
டிஜே தில்லு பாகத்தில் வந்த கதாபாத்திரங்கள் பல மீண்டும் தில்லு வாழ்க்கைக்குள் நுழைவதால், முதல் பாகத்தைப் பார்த்தவர்களுக்கு படம் எளிதாக கனெக்ட் ஆகும். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வருகையையும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடுகின்றனர்.
சீரியஸான கதையை இயக்குனர் காமெடியாக கொண்டு செல்கிறார். அதற்கு ஏற்றது போல் தில்லு ஜாலியாக பேசும் வசனங்கள் திரையரங்கில் சிரிப்பலையை உண்டாக்குகிறது.
அனுபமாவின் கதாபாத்திரம் மாடல் பெண்ணாக இருந்து எதிர்பாராத ஒரு கேரக்டராக மாறும் அந்த இடத்தில ''ரா ரா..'' பாடல் இடம்பெற்ற விதம் தெறிக்கிறது. அத்துடன் கிளாமராகவும் வரும் அனுபமா 3 , 4 முத்தக்காட்சிகளில் நடித்து இளம் பார்வையாளர்களை அலறவிடுகிறார்.
பீம்சின் பின்னணி இசை சரியான தரப்பில் இருக்க, ராம் மிரியாலா, அச்சுவின் பாடல்களும் துள்ளல் ரகத்தில் உள்ளன. இடைவேளையில் தொடங்கும் பரபரப்பினை இறுதிக்காட்சி வரை தக்கவைப்பதில் இயக்குனர் ஜெயிக்கிறார்.
கிளைமேக்சில் வரும் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் அருமை. அதிலும் குறிப்பாக தில்லு கடைசியாக பேசும் ஒரு வசனம் கைதட்டலை அள்ளுகிறது. ஆனாலும், முதல் பாகத்தை பார்த்து விட்டு இப்படத்திற்கு சென்றால் என்டர்டைன்மென்ட் கேரண்டி.
க்ளாப்ஸ்
சித்துவின் காமெடியான நடிப்பு, அனுபமாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தொய்வில்லாத திரைக்கதை கிளைமேக்ஸ் டிவிஸ்ட்
பல்ப்ஸ்
முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தும். ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்
மொத்தத்தில் கலர்புல்லான, ஜாலியான ஒரு ரைடாக அமைந்துள்ளது தில்லு 2 எனும் தில்லு ஸ்கொயர்.