டூரிஸ்ட் ஃபேமிலி திரைவிமர்சனம்
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. குட் நைட், லவ்வர் போன்ற தரமான திரைப்படங்களை தயாரிக்க மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளிவந்ததில் இருந்தே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. கண்டிப்பாக இது பந்தயம் அடிக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். மாபெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா வாங்க பார்க்கலாம்.
கதைக்களம்
இலங்கையில் பொருளாதார கஷ்டம் காரணமாக சசிகுமார், சிம்ரன் தங்களது குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு வந்தடைக்கிறார்கள். ராமேஸ்வரம் வரும் சசிகுமாரின் குடும்பம் கடற்கரையில் தமிழக காவல் துறையினரிடம் சிக்கி கொள்கிறார்கள்.
ஆனால், போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரமேஷ் திலக் இவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு விட்டுவிடுகிறார். பின் சிம்ரனின் அண்ணனாக வரும் யோகி பாபுவின் உதவியோடு, சென்னை வருகிறார்கள். அங்கு ஒரு காலனியில் அவர்கள் தங்க இடமும், அவர்களுக்கான வசதிகளையும் யோகி பாபு செய்து கொடுக்கிறார்.
சசிகுமார் தனக்கென்று ஒரு வேலையை தேடி கொள்கிறார். அந்த காலனியில் உள்ள அனைவருடனும் அன்னியோன்யமாக பழகி நல் உறவை ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்படுகிறது. இதற்கான காரணம் யாரென்று தெரியாமல் இருக்கும் நிலையில், இலங்கையில் இருந்து வந்த சசிகுமாரின் குடும்பம் தான் காரணம் என போலீஸ் நினைக்கிறார்கள். அந்த குடும்பத்தை பிடிக்க தீவிரமாக இறங்குகிறார்கள்.
இலங்கையில் இருந்து பல கஷ்டங்களை கண்ணீருடன் சுமந்து வந்து, சென்னையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் இந்த குடும்பத்திற்கு இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதையாகும்.
படத்தை பற்றிய அலசல்
சசிகுமார், சிம்ரன் முதல் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர், நடிகையும் சிறப்பாக தங்களது கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதாநாயகனான சசிகுமார் இலங்கையில் இருந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து எப்படி வாழப்போகிறோம் என்கிற தவிப்பு ஒரு பக்கம். அப்படியே என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என பெறுப்புடன் உள்ள கணவராகவும், நல்ல தந்தையாகவும் திரையில் தெரிகிறார்.
கதாநாயகி சிம்ரன் குடும்ப தலைவியாக தனது குடும்பத்தின் ஆணிவேராக தன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சசிகுமார் - சிம்ரனின் மகன்களாக நடித்த மிதுன் மற்றும் கமலேஷ் இருவரின் நடிப்பு சிறப்பு. குறிப்பாக குட்டி பையன் கமலேஷ் நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான் என்று தான் சொல்லவேண்டும்.
அதே போல் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகி பாபு, பகவதி, சுதர்ஷன், ரமேஷ் திலக் என அனைவரும் தங்களது நடிப்பின் மூலம் படத்தை கலர்புல்லாக ஆக்கிவிட்டனர்.
இது இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் அறிமுக இயக்கம் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. எதார்த்தமான இயக்கம், மனிதத்தை பேசும் திரைக்கதை, மனதை தொடும் காட்சிகள், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் நம் அனைவரையும் அழகாக பயணத்திற்கு அழைத்து செல்கிறார்.
முதல் காட்சியில் இருந்தே படம் விறுவிறுப்பாக துவங்குகிறது. எங்கையாவது தொய்வு ஏற்படும், மைனஸ் பாயிண்ட்டாக அதை கூறிவிடலாம் என பார்த்தால், அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.
இலங்கையில் இருந்து பல கஷ்டங்களை சுமந்துகொண்டு இங்கு வரும் பலரையும் அகதிகள் என குறிப்பிடுகிறார்கள். ஆனால், நாம் எந்த நாட்டிற்கு புலம் பெயர்ந்தாலும், அங்கு அன்பால் மனிதர்களை சம்பாதித்து விட்டால் நாம் அகதி இல்லை என்ற அழகிய மனிதநேயம் பற்றி இப்படம் பேசியுள்ளது. அது நம் மனதை தொடுகிறது. அதை இப்படத்தில் கூறியதற்கு இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
ஷான் ரோல்டன் பாடல்கள் படத்துடன் இணைந்து மனதை தொடுகிறது. அதே போல் ஒவ்வொரு காட்சி அமைப்பிற்கும் சான் ரோல்டன் அமைந்துள்ள பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிக அழகு.
பிளஸ் பாயிண்ட்
சசிகுமார், சிம்ரன் நடிப்பு
அனைத்து நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
மனித நேயம் பற்றி பேசிய அழகான திரைக்கதை
ஷான் ரோல்டன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை
அபிஷன் ஜீவிந்த் இயக்கம்
மைனஸ் பாயிண்ட்
எதுவும் இல்லை
மனிதர்கள் மனிதநேயத்துடன் இருந்தால் யாரும் இவ்வுலகில் அகதி இல்லை. அதை பேசிய டூரிஸ்ட் ஃபேமிலி அனைவரும் பார்க்க வேண்டிய தரமான படைப்பாகும்.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
