Tu Meri Main Tera Main Tera Tu Meri திரைவிமர்சனம்
கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே நடிப்பில் வெளியாகியுள்ள Tu Meri Main Tera Main Tera Tu Meri இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.
கதைக்களம்
அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் ரெஹான் மெஹ்ரா (கார்த்திக் ஆர்யன்).
அவர் அம்மாவிடம் கூறிவிட்டு குரோஷியா நாட்டிற்கு சுற்றுலா செல்கிறார். அப்போது விமான நிலையத்தில் ரூமியை (அனன்யா பாண்டே) சந்திக்கிறார் ரெஹான்.
தன் அப்பாவை (ஜாக்கி ஷெராப்) கவனித்துக் கொள்ளுமாறு சகோதரியிடம் கூறிவிட்டு அவரும் குரோஷியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளார். இருவரும் ஒரு புத்தகத்தினால் அறிமுகமாகி ஒரே குரோஷியா சென்றதும் படகில் உள்ள அறையில், ஒன்றாக தங்கும் சூழ்நிலை உருவாகிறது. ஆனாலும் இருவரும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கும்போது ரூமியின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அதன் காரணமாக ரெஹானிடம் உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது; எனக்கு அப்பாதான் முக்கியம் என்று கூறி இந்தியா செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து ரெஹான் எப்படி அவரது மனதை மாற்றி திருமணம் செய்தார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
அப்பா மீது அதீத அன்பு கொண்ட பெண்ணும், அம்மா மீது அதீத அன்பு கொண்ட ஆணும் காதலித்து எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்ற பழைய கதைதான்.
ஆனால், இன்றைய தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ளும் மற்றும் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சமீர் வித்வான்ஸ்.
ஆரம்பத்தில் Gen Z கிட்ஸ் வாழ்க்கையை காட்டுவது போல் கதை நகர்ந்தாலும், உன் அம்மாவுக்காக உன் கனவை தியாகம் செய்தாயா என்று அனன்யா கேட்கும் இடத்தில் படம் நிமிர வைக்கிறது.
அதன் பிறகு எமோஷனல், காமெடி டிராமாவாக கதை சுவாரஸ்யமாக செல்கிறது. ரூமி கதா பாத்திரத்தில் அனன்யா நல்ல நடிப்பை தந்துள்ளார்.
தனது அப்பாவை தவறாக பேசும்போது அவர் கோபப்படும் இடத்தில் எதார்த்த நடிப்பை காட்டுகிறார்.
அதே சமயம் முதல் பாதியில் பாடல்களில் தாராளமாக கிளாமர் காட்டுகிறார்.
ரெஹான் என்ற கதாபாத்திரத்திற்கு கார்த்திக் ஆர்யன் அப்படியே பொருந்தி போகிறார். துடுக்கான இலைஞாகவும், அம்மாவை நேசிக்கும் நல்ல மகனுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.
அடிக்கடி சிக்ஸ் பேக்ஸை காட்டும் கார்திக்கிற்கு இயக்குநர் ஒரு சண்டைக்காட்சி வைத்திருக்கலாம். ஆனால் அவரோ அதை வைத்து பெண் கதாபாத்திரங்கள் ஈர்க்கப்படுவது போல் காட்டுவது உறுத்தல்.
அனன்யாவின் அப்பாவாக ஜாக்கி ஷெராப் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அவருக்கு இணையாக நீனா குப்தா பெண்ணின் மனது பெண்ணுகுத்தான் புரியும் என பேசி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், ஜாக்கி ஷெராப் சாக வேண்டும் என்று கூறுவது எல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
விஷால் - சேகரின் பாடல்கள் ஓகே ரகம். ஹிதேஷ் சோனிக்கின் பின்னணி இசை கதைக்கு வலுசேர்க்கிறது.
மணன் மேத்தாவின் படத்தொகுப்பும், அனில் மேத்தாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்துள்ளன.
திருப்திகரமான கிளைமேக்ஸ் வைத்து ஹேப்பி என்டிங் ஆக படத்தை முடித்துள்ளார் இயக்குநர் சமீர். பெற்றோரை விட தனது மகிழ்ச்சிதான் முக்கியம் என்றும் கூறும் இன்றைய தலைமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
க்ளாப்ஸ்
திரைக்கதை
வசனங்கள்
கிளைமேக்ஸ்
மேக்கிங்
பல்ப்ஸ்
பாடல்களில் கிளாமர்
தன் பாலின ஈர்ப்பாளரை வைத்து காமெடி செய்தது
ஆணின் உடலைப் பார்த்து வயதான பெண் கிளர்ச்சி கொள்வது போன்ற காட்சி
மொத்தத்தில் இந்த படம் இளைய தலைமுறையினர் தவற விடக்கூடாத லவ் ஸ்டோரி. காதலர்கள் கொண்டாடலாம்.
ரேட்டிங்: 3/5