Uyir (malayalam): திரை விமர்சனம்
ரோஷன் மேத்யூஸ், பைஜூ சந்தோஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'உயிர்' மலையாள திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
கேரளாவின் தர்மதம் காவல் நிலையத்தில் பயிற்சி அதிகாரி எஸ்.ஐ ஆக பணியாற்றுகிறார் அஜீத் (ரோஷன் மேத்யூ). கிணறு ஒன்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் மர்ம மரணம் குறித்த விசாரணையை அவர் தொடர்கிறார்.
அவருக்கு உதவியாக ஏ.எஸ்.ஐ அதிகாரி ஜாய் (பைஜூ சந்தோஷ்) இருக்க குற்றவாளியைப் பிடிக்க முயல்கிறார் அஜீத். சோபனா என இறந்த பெண்ணின் அடையாளம் தெரிய வர, அவர் தனது கணவர் ராஜூ, இரு பிள்ளைகள் ஆகியோர் சேர்ந்து நடிகர் கிச்சா சுதீப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று அஜீப்பிற்கு கிடைக்கிறது.

அதில் இருக்கும் ராஜூ என்ற நபரை அஜீப்பும், ஜாய்யும் சேர்ந்து தேட, அவரே வந்து அவர்களிடம் சிக்கிக் கொள்கிறார். ஆனால் தான் சோபனாவை கொலை செய்யவில்லை என்று தனது கதையை அவர் கூறுகிறார்.
பின்னர் அவர் கூறியவற்றை பொலிஸார் நம்பி காரியங்களை செய்கிறார்கள். இதனையடுத்து தாங்கள் பிடித்து வந்தது ராஜூ அல்ல என்று அஜீப்பிற்கு தெரிய வர பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
ஜோசப் படப் புகழ் இயக்குநரான எம்.பத்மகுமார் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளார். மலையாள கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரைப்படங்களுக்கே உரிய பாணியில் முதல் பாதி நகர்கிறது.
இரண்டாம் பாதியை திடீர் திருப்பங்களுடன் கொண்டுசென்று நிறைவாக முடித்திருக்கிறார் இயக்குநர். ராஜூ கதாபாத்திரம் உள்ளே வந்த பிறகு திரைக்கதை சுவாரஸ்யமாகிறது. வினோத் சாகர் நடித்துள்ள காட்சிகள்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. அசால்ட்டாக நடிப்பை வெளிப்படுத்தும் அவர், ஒரு சண்டைக்காட்சியில் மிரட்டியிருக்கிறார்.

ரோஷன் மேத்யூ பெரிதாக அலட்டல் இல்லாத போலிஸ் அதிகாரியாக அளவான நடிப்பை தந்திருக்கிறார். குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது தேடலில் வெளிக்காட்டும் நடிப்பு சிறப்பு. அவருக்கு உறுதுணையாக வரும் பைஜூ சந்தோஷ் எதார்த்த நடிப்பில் பின்னுகிறார்.
இவர்களைத் தாண்டி மனதில் நிற்கும் காப்பாத்திரம் சோபனா. சுருதி மேனன் அதற்கு சிறந்த தேர்வு. திரைக்கதை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ் மக்கள் என பல தளங்களில் பயணிக்கிறது. ஆகையால் சில கதாபாத்திரங்கள் தமிழர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பிரதான கதாபாத்திரங்களை நெகடிவ் ஆக சித்தரித்தது, வழக்கம்போல் இந்த மலையாளப் படத்திலும் தொடர்கிறது. ஷாஜி மாரத், நிகில் கே மேனனின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் சிறப்பு. அஜய் டேவிட்வின் கேமரா ஒர்க் பிரமாதம். மணிகண்டன் ஐயப்பாவின் இசை கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது.
க்ளாப்ஸ்
கதை
நடிகர்களின் பங்களிப்பு
பிளாஷ்பேக்
பல்ப்ஸ்
காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் காட்சிகளை இன்னும் விரிவாக காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த உயிர் கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு வித்தியாசமான தீனி.

பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri