வாத்தி திரை விமர்சனம்
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாத்தி. நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
முதல் முறையாக வாத்தியார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்ததே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாடக்கியது. அதை தாண்டி இப்படத்தின் வா வாத்தி பாடல், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இப்படத்தின் மீது இன்னும் அந்த எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அப்படி ரசிகர்கள் இப்படத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்தாரா வாத்தி? வாங்க பார்க்கலாம்.
கதைக்களம்
90களில் அரசாங்க பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் அதிக ஆதிக்கத்தை மக்கள் மத்தியில் செலுத்தி வருகிறது. அரசாங்க பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சமுத்திரக்கனியின் தனியார் பள்ளியில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனுஷ் {பாலமுருகன்} சோழவரம் எனும் ஊரில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கு ஆசிரியராக சமுத்திரக்கனியால் {திருப்பதி} அனுப்பிவிடப்படுகிறார்.
தனுஷ் மட்டுமின்றி பல தனியார் பள்ளிகளில் இருந்து பல ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசாங்க பள்ளிகளுக்கு ஆசிரியராக செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் துணை ஆசிரியராக பணியாற்றுபவர்கள் என்பதால், இவர்களால் அரசாங்க பள்ளிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் வராது என்று எண்ணத்தில் சமுத்திரக்கனி இதை செய்கிறார்.
சோழவரம் அரசாங்க பள்ளியில் கணக்கு வாத்தியாராக பணியாற்ற வரும் தனுஷ் அங்கு கதாநாயகி சம்யுக்தாவை {மீனாட்சி} சந்திக்கிறார். சம்யுக்தாவை சந்தித்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு செல்லும் தனுஷுக்கு அங்கு பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது. ஊரில் உள்ள மாணவர்கள் பலர் பத்தாம் வகுப்பு படித்துமுடித்தபின் கூலி தொழில் செய்து வருகிறார்கள்.
11வது மற்றும் 12வது படிக்கவேண்டிய மாணவர்களை காசுக்காக அவர்களுடைய பெற்றோர்களே இப்படி செய்வதை பார்த்து அதிர்ச்சியடையும் தனுஷ் இதை உடனடியாக மாற்ற முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் வெற்றிபெறும் தனுஷ், அந்த மாணவர்களை நன்றாக படிக்கவைத்து பரீட்சையில் சிறந்த மதிப்பெண்களை எடுக்க வைக்கிறார்.
இதன்பின் சோழவரம் ஊருக்கு வரும் சமுத்திரக்கனி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். கல்வியை தன்னுடைய தனியார் பள்ளியின் மூலம் வியாபாரமாக நான் செய்து வருகிறாறேன், நீ அரசாங்க மாணவர்களை சிறந்த மணிப்பெண்கள் எடுக்கவைத்து என்னுடைய வியாபாரத்தை அழிக்க நினைக்கிறாயா என்று தனுஷை எச்சரிக்கிறார் சமுத்திரகனி.
ஆனாலும், இதற்கெல்லாம் அச்சப்படாத தனுஷ் அந்த மாணவர்கள் அனைவரையும் நன்றாக படிக்கவைப்பேன் என்று சமுத்திரக்கனியிடம் சவால் விடுகிறார். இந்த சவாலில் தனுஷ் வெற்றிபெற்றாரா? இல்லையா? சமுத்திரக்கனியின் சூழ்ச்சியில் தனுஷுக்கு என்னவெல்லாம் நடந்தது? என்பது தான் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
தனுஷ் வழக்கம் போல் தன்னுடைய நடிப்பினால் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். மாணவர்களை எப்படியாவது படிக்கவைத்து விட வேண்டும், படிப்பு தான் மரியாதையை தேடி தரும் என்று போராடும் தனுஷின் நடிப்புக்கு தனி பாராட்டு.
கதநாயகியாக தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே மனதை கவர்ந்துள்ளார் சம்யுக்தா மேனன். வில்லனாக வரும் சமுத்திரக்கனி தனது வசனங்கள் மூலமாக மிரட்டுகிறார். குறிப்பாக 'கல்வியில் கிடைக்கும் பணம் அரசியலில் கிடைக்காது' என்று அவர் கூறும் வசனம் அவருடைய வில்லத்தமான கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டுகிறது.
துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ள சாய் குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கச்சிதமாக அவரவர் ரோலில் பொருந்தியுள்ளனர்.
இயக்குனர் வெங்கி அட்லூரி எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவையானது. அரசாங்க பள்ளிகளை தவிர்த்துவிட்டு, தனியார் பள்ளியில் படித்தால் தான், தன்னுடைய பிள்ளை நல்ல மதிப்பெண்களை எடுத்து வருங்காலத்தில் நல்ல நிலைமையில் இருக்கமுடியும் என்று நினைக்கும் பெற்றோர்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எடுத்துகாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி கல்வியை விற்காதீர்கள், அதை இலவசமாக கொடுங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், சாதி குறித்து படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் அழகாக கையாண்டுள்ளார்.
நல்ல கருத்துகளை முன் வைத்தாலும் சற்று திரைக்கதையில் சொதப்பியுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். படத்தின் நீளம் பெரிதாக இல்லை என்றாலும், படம் கொஞ்சம் மெதுவாக செல்வதை உணரமுடிகிறது. இதுவே இப்படத்தின் பெரிய மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது.
ஜி.வி. பிரகாஷின் வா வாத்தி பாடல் விசில் சத்தத்தை சொந்தமாக்குகிறது. ஆனால், மற்ற பாடல்கள் மனதை தொடவில்லை. பாடல்களை விட ஜி.வி-யின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள Rap பிரமாதம். யுவராஜின் ஒளிப்பதிவு அழகு. சண்டை காட்சிகளை இன்னும் கூட சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். நவீன் எடிட்டிங் ஓகே.
பிளஸ் பாயிண்ட்
தனுஷ் நடிப்பு
சமுத்திரக்கனி நடிப்பு, ஜி.வி-யின் பின்னணி இசை
இயக்கம், கதைக்களம்
சொல்லவந்த கருத்து
மைனஸ் பாயிண்ட்
மெதுவாக செல்லும் திரைக்கதை
சண்டை காட்சிகள்