வரவு (மலையாளம்): திரை விமர்சனம்
வரவு திரை விமர்சனம்
ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் அசோகன், சானியா ஐயப்பன் நடிப்பில் வெளியாகியுள்ள வரவு மலையாள திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
பால்சன் (ஜோஜு ஜார்ஜ்) 10 நாட்கள் பரோலில் தனது சொந்த ஊருக்கு வருகிறார். வரும் வழியிலேயே ஒரு கும்பல் அவரை தாக்க அவர்களை பொளந்துகட்டுகிறார்.
பின்னர் அவரது நண்பரின் ஓட்டலுக்கு வரும் ஒரு சிலர் குறித்து தகவல் தெரிய வர, அங்கு வரும் பால்சன் அவர்களை அடித்து ஓடவிட்டு பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கைப்பற்றுகிறார்.
இதற்கிடையில் சிதைந்து போன தனது குடும்பத்தை நினைத்து கவலைப்படும் பால்சன், 4 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன தனது தம்பி வில்லியம்ஸ் குறித்து போலீசில் புகார் அளிக்கிறார். ஆனால், சிலரை கொலை செய்யும் பால்சன், தன் தம்பி வில்லியம்ஸ்தான் (அர்ஜுன் அசோகன்) கொன்றதாக சித்தரிக்கிறார்.
அவர் ஏன் இப்படி செய்கிறார்? காணாமல்போன வில்லியம்ஸ் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குநரும், தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான ஷாஜி கைலாஷ் இப்படத்தை கொடுத்துள்ளார்.
வழக்கமான பழிவாங்கல் கதையை ஆக்ஷன் பேக் ஆக கொடுக்க முயற்சித்துள்ளார். அதற்கு ஏற்ப 10 பேரை அடித்தாலும் நம்பக்கூடிய ஆளான ஜோஜு ஜார்ஜை நாயகனாக தேர்வு செய்துள்ளார். அவரும் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் பொறிபறக்க பட்டையைக் கிளப்பியுள்ளார்.

ஆனால், 90களின் திரைக்கதையை கொண்டு வந்ததுதான் படத்தின் மிகப்பெரிய சொதப்பல். எங்குமே பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள், எளிதில் யூகிக்கக்கூடிய ட்விஸ்ட்கள் என படம் நகர்வதுடன், லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவதால் பெரும் சோதனைதான் பார்வையாளர்களுக்கு. சுகன்யாவுக்கு இருந்த அளவிற்கு கூட அர்ஜுன் அசோகன், சானியா ஐயப்பன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
அதே சமயம் வில்லனாக முரளி கோபி மிரட்டியிருக்கிறார். வசன உச்சரிப்பு, கோபத்தை முகத்தில் காட்டுவது என அபார நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடவுள் முருகன் குறித்த விஷயங்கள் திரையுலகை ஆக்கிரமித்துள்ள சூழலில், முருகன் பாடலுடன் படம் தொடங்குகிறது.
ஆனால் அதற்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாபுராஜுக்கு பதிலாக அவரது நிஜ மனைவியான வாணி விஸ்வநாத் போலீசாக வருவது நல்ல ஐடியாவாக இருந்தாலும், இன்றைய சூழலுக்கு ஏற்ப திரைக்கதை அமைப்பதிலும் ஏ.கே.சஜன் மற்றும் ஷாஜி கைலாஷ் மெனக்கெட்டிருக்கலாம்.
சாம் சி.எஸ்-யின் இசை, எஸ்.சரவணனின் ஒளிப்பதிவு, ஷமீர் முகமதுவின் படத்தொகுப்பு ஆகியவை சிறப்பாக உள்ளன. ஸ்டண்ட் சில்வா, அன்பறிவ் ஆகியோரின் சண்டைக்காட்சிகள் மிரட்டல்.

க்ளாப்ஸ்
ஜோஜு ஜார்ஜ், முரளி கோபியின் நடிப்பு சண்டைக்காட்சிகள் ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
பலவீனமான திரைக்கதை யூகிக்கக்கூடிய காட்சிகள் கனெக்ட் ஆகாத சென்டிமென்ட்
மொத்தத்தில் இந்த 'வரவு' திரைக்கு 'வராமலேயே' இருந்திருக்கலாம் என்றுதான் தோன்ற வைத்துள்ளது. சண்டைக்காட்சிகள் மட்டுமே பார்த்தால் போதும் என்பவர்கள் பார்க்கலாம்.
ரேட்டிங்: 2/5
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri