Varshangalkku Shesham திரை விமர்சனம்
மலையாள சினிமா கடந்த சில வருடங்களாக ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்திலும் தனித்துவமாக பயனித்து வருகின்றது.
படத்தில் யார் பெரிய நடிகர்கள் என்றில்லாமல் கதை நன்றாக இருந்தால் போதும் வசூல் கொட்டும் என்று மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்ய, இந்த வாரம் வந்துள்ள வினித் ஸ்ரீனிவாசனின் Varshangalkku Shesham அந்த லிஸ்டில் இணைந்ததா பார்ப்போம்.
கதைக்களம்
கேரளாவில் கலை மீது மிகவும் ஆர்வமுள்ள வேணு(தயன் ஸ்ரீனிவாசன்), முரளி(ப்ரனவ் மோகன்லால்) இருவரும் எப்படியாவது மெட்ராஸ் வந்து மிகப்பெரிய சினிமா பிரபலம் ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அவர்கள் ஆசைப்படியே இருவரும் மெட்ராஸ் ஒரு கட்டத்தில் வருகின்றனர். அப்போது முரளி பெரிய இசையமைப்பாளர் ஆகவேண்டும், வேணு பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என அந்தந்த துறைகளில் கிடைக்கும் வேலையெல்லாம் செய்து வருகின்றனர்.
முரளி மூலம் ஒரு முறை வேணுவிற்கு ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்க, வேணு சொன்ன கதை பிடித்து அவர் இயக்குனராக கமிட் செய்கின்றனர், முதல் படத்திற்கு நீ தான் இசையமைக்க வேண்டும் என வேணு முரளியிடம் கேட்க, முரளி பெரிய இசையமைப்பாளரை கமிட் செய் என சொல்கிறார்.
அதே நேரத்தில் அந்த இசையமைப்பாளருக்கு தன் நண்பனுக்காக தான் இசையமைத்த பாடல் ஒன்றை முரளி கொடுக்க, பிறகு என்ன அந்த பாடல் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்து, படமும் ஹிட் அடித்து பேர், புகழ் வேணுவிற்கும் அந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்கிறது.
ஆனால், முரளி தனக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எப்போதும் குடித்துக்கொண்டு வாழ்க்கையை தொலைக்க, ஒரு புறம் வேணு உச்சத்தை நோக்கி செல்ல, இந்த இரண்டு நண்பர்களின் உணர்ச்சி போராட்டமே மீதிப்பயணம்.
படத்தை பற்றிய அலசல்
தயன் ஸ்ரீனிவாசன் அவரின் கெரியர் பெஸ்ட் படமாக இது அமைந்துள்ளது. இனியும் அவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் அமையுமா என்றால் கேள்விக்குறி தான், முதலில் மிக வெகுளியாக முரளியிடம் அறிமுகமாகி, மெட்ராஸ் வந்து கிடைக்கிற வேலையெல்லாம் செய்து, பிறகு தன்னை தூக்கிவிட்ட நண்பன் இப்படி குடியால் வாழ்க்கையை தொலைக்கிறானே என்ற ஏக்கத்துடனும், அவரை தேடி அலையும் பரிதவிப்பிலும் தன்னுடைய பெஸ்ட்-யை கொடுத்துள்ளார்.
அதேபோல் ப்ரனவ் மோகன்லால்-ம் காதலியை இழந்து தேவதாஸ் ஆவார்கள், ஆனால், காதலி, நண்பன், கனவு என அனைத்தையும் இழந்து ஒரு தேவதாஸ் போல் வாழும் இவரின் நடிப்பும் மிக அற்புதம், அதிலும் நடு இரவு வேணு வீட்டை தட்டி உன் அடுத்த படத்திற்கு நான் தான் இசையமைப்பாளர் என குடிபோதையில் உரிமையுடன் சண்டைபோடும் காட்சி சிறப்பு, பல இடங்களில் தன் அப்பா மோகன்லால் மேனரிசம், வாய்ஸ் வருவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தில் இவர்கள் இரண்டு பேரை தவிர, மெட்ராஸில் சினிமாகாரர்களுக்கு வாடகைக்கு விடும் ஒய் ஜி மகேந்திரன், அந்த மேன்ஷனில் தங்கியிருப்பவர்கள் என அனைவரின் நடிப்பும் யாதார்த்தம், அதிலும் இவர்கள் ரூமி-ற்கு பக்கத்தில் தான் ரஜினியும் ரூம் எடுத்து தங்கியுள்ளார் என்று காட்டிய விதம் செம நாஸ்டாலஜியா.
முதல் பாதி படம் முழுவதும் எமோஷ்னல் எமோஷ்னல் என்று செல்ல, அட அப்போ செகண்ட் ஆப் அழுக வைத்து விடுவார்கள் என்று நினைத்தால், அப்படியே ட்ராக் மாறி காமெடிக்கு பஞ்சமில்லாமல் இரண்டாம் பாதி நகர, நம்மையும் கட்டிப்போடுகிறார் இயக்குனர், அதிலும் வேணு எடுக்கும் படத்தின் ஹீரோவாக வரும் நிதின் மோலி அதாங்க நம்ம நிவின் பாலி தான், உண்மையாகவே பல வருடம் கழித்து செம கம் பேக் அவருக்கு.
அதிலும் படத்திலேயே கடைசி 6 படங்கள் தோல்வி, ப்ரியானி சாப்பிட்டு உடல் எடை கூடி விட்டது, அதற்கு பாடி ஷேமிங் செய்வீர்களா என்று நிவின் பாலி பொங்கும் இடம், தனக்கு ரியல் லைப்-ல் நடந்ததற்கு படம் மூலம் செம பதிலடி கொடுத்து ஒரு வழியாக நாம் பார்த்து ரசித்த நிவின் பாலியை திரையில் கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன்.
Amrit Ramnath-ன் இசையில் அனைத்து பாடல்களும் அவ்ளோ ரம்மியமாக உள்ளது, ஒரு பாடலால் தான் இரு நண்பர்களின் வாழ்க்கையும் மாறுகிறது என்பதே கதை, அதற்கு பாடல் எவ்ளோ முக்கியம் என்பதை உணர்ந்து அசத்தியுள்ளார், Viswajith ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான 80-களின் சென்னையை மிக அழகாக காட்டியுள்ளது.
க்ளாப்ஸ்
படத்தின் நடித்த நடிகர்களின் நடிப்பு, முக்கியமாக தயன், ப்ரனவ் சம்மந்தமான எமோஷ்னல் காட்சிகள்.
ஒளிப்பதிவு, இசை போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
நிவின் பாலி வரும் காட்சிகள்.
பல்ப்ஸ்
படம் மிகவும் மெதுவாக நகர்வது சிலருக்கு பொறுமையை சோதிக்கலாம். மேலும், ஊரே பரபரப்பாக இருக்கும் நிவின் பாலி விஷயம், ஒன்றுமே தெரியாதது போல் வேணுவிடம் கதை கேட்டு வரும் வினித் ஸ்ரீனிவாசன் அந்த இடம் நம்பும்படி இல்லை.
மொத்தத்தில் அடிதடி, சண்டை, சச்சரவு மத்தியில் ஒரு அழகான இரண்டு நண்பர்களின் பயணத்தில் கண்டிப்பாக எல்லோரும் பங்கெடுக்க வேண்டும்.
Ratings - 3.25/5