20 Years of Venkat Prabhu: ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது.. வெங்கட் பிரபு

By Parthiban A Aug 08, 2026 12:48 AM GMT
Report

தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபு சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் நிறைவு செய்து இருப்பதை பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது..

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், ‘சென்னை 600028’ இல் ஒரு இயக்குநராக என் பயணம் தொடங்கியது.

அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய எஸ்பிபி சார் அவர்களின் ஆசிகளாலும், சகோதரர் சரண் என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும் மட்டுமே இது சாத்தியம் ஆனது.

அந்த ஒரு வாய்ப்பு என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. இன்று, என் திரைப்பயணத்தின் 20வது ஆண்டில் நுழையும் இந்த வேளையில், மறக்கமுடியாத நினைவுகளாலும் எதிர்காலம் குறித்த பேரார்வத்தாலும் என் மனம் நிரம்பி இருக்கிறது.

இந்தப் பயணத்தில், ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது என்பதை நான் நோக்கமாகவே வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் ஒரு புதிய வகை (GENRE). சில படங்கள் காலப்போக்கில் ரசிக்கப்பட்டன. சில படங்கள் எனக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன.

20 Years of Venkat Prabhu: ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது.. வெங்கட் பிரபு | Venkat Prabhu Statement On 20 Years In Cinema

தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செய்வதற்கான தைரியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது காட்டி வரும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும்தான் காரணம். என் வெற்றிகளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்; கடினமான கட்டங்களில் என் பக்கபலமாக நின்று இருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய படத்தோடு நான் வரும்போது அதே அன்போடு என்னை வரவேற்றிருக்கிறீர்கள்.

உங்களுடைய இந்த நம்பிக்கைதான் எனக்கு தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுக்கும் துணிச்சலைக் கொடுக்கிறது. அதற்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது.

பின்னோக்கிப் பார்க்கையில் என் மனதிற்குள் நன்றியுணர்வு மட்டுமே நிரம்பி இருக்கிறது! என்னை நம்பிய ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் நண்பர்களுக்கும், இந்த பயணத்தின் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும், அனைத்திற்கும் மேலாக சினிமாவைக் கொண்டாடும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இருபது ஆண்டுகளுக்கு பிறகும், இன்னும் நான் சினிமாவின் தீவிர ரசிகனாகவே உணர்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் எனக்குப் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு முன்பும் எனக்குள் இருக்கும் அந்தப் படபடப்பும் எதிர்பார்ப்பும் இன்னும் மாறவில்லை. மக்களை மகிழ்விக்கும், வியப்பில் ஆழ்த்தும், மற்றும் அவர்களோடு ஒன்றிப்போகும் கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற என் கனவு மேலும் வலுவடைந்து மட்டுமே இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதே தீவிரமான ஆர்வத்தோடு உங்களுக்கு நல்ல கதைகளை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்.

இன்னும் பல ஆண்டுகள், ஒன்றாக பயணிப்போம்!

அன்புடனும் நன்றியுடனும்,

வெங்கட் பிரபு 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US