இன்னும் வலிக்குது.. மனசே ஆறல! ஒரே ஆறுதல் இதுதான்.. விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து இருந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படம் கடந்த மாதம் திரைக்கு வந்திருந்தது.
நீண்ட தாமதத்திற்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்த நிலையில் பாக்ஸ் ஆபிசில் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்கள் எல்லாமே 100 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில் இந்த படம் அதை தொட முடியவில்லை.
தற்போது ஓடிடியில் LIK வெளியாகி இருக்கும் நிலையில் அதை பார்த்துவிட்டு பலரும் தனக்கு மெசேஜ் செய்வதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கிறார். நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக தியேட்டருக்கு அப்போது போகவில்லை, ஆனால் படம் சூப்பராக இருக்கிறது என ஓடிடியில் பார்க்கும்போது தெரிகிறது என பலரும் என்னிடம் சொல்கிறார்கள் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

மனசே ஆறவில்லை
இது பற்றி போட்டிருக்கும் பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது.. "சில படங்கள் நெகடிவ் விமர்சனங்களை தாண்டி ஜெயிக்கும். மற்ற படங்களுக்கு அப்படி நடப்பதில்லை. சினிமா துறையினர், ஆதிக்கம் உள்ள குரல்கள் ஆதரவு இல்லாத படங்களின் தலையெழுத்து இப்படி ஆகிறது. விமர்சனம் எழுதி தங்களது அறிவு மற்றும் ஆதிக்கத்தை காட்டுகிறார்கள். அந்த படத்திற்கு போகாதீர்கள் என சொல்லி ஒரு இயக்குனரின் கனவை நசுக்குகிறார்கள்."
"LIK படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்டை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதல் வாரத்தில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் அது அப்படியே மாறிவிட்டது எனக்கு இன்னும் அதிகம் வலிக்கிறது."
"படம் எடுப்பது கடினம், அதை ரிலீஸ் செய்வது இன்னும் கடினம். அதை எல்லாம் தாண்டி ரிலீஸ் செய்தால், இப்படி முடிவது இன்னும் வலியை கொடுக்கிறது."
"ஆம், முதலில் வந்த போது தோல்வி அடைந்த பல சிறந்த படங்கள் சினிமாவில் பல இருக்கிறது. அதை நினைக்கும்போது தான் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது."
நேற்று ஒரு பிரபல இயக்குனர் ஒருவர் என்னிடம் இதை கூறினார்.. "ஒரு படத்தோட வெற்றி, அதுக்குள்ள இருக்கிறதை விட, வெளிய தான் அதிகமா இருக்கு." எது இன்னும் என் மனதில் இருக்கிறது. இவ்வாறு விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கிறார்.