விருஷபா திரை விமர்சனம்
விருஷபா திரை விமர்சனம்
மோகன்லால், ராகினி திவேதி நடிப்பில் மலையாளம், தெலுங்கு மொழி படமாக வெளியாகியுள்ள விருஷபா திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்
திரிலிங்க சாம்ராஜ்ஜியத்தின் அரசனான விஜயேந்திர விருஷபா (மோகன் லால்) ஸ்படிக லிங்கத்தை பாதுகாத்து வருகிறார். அதனை கொள்ளையடிக்க வரும் கும்பலுடன் சண்டையிடும் விருஷபா, அதன் தலைவனை கொல்ல அம்புகளை எய்கிறார்.
அதில் ஒரு அம்பு குழந்தை ஒன்றின் கழுத்தில் பாய, அது பரிதாபமாக இறந்துபோகிறது. இதனால் அந்த குழந்தையின் தாய் விருஷபாவிற்கு ஒரு சாபம் விடுகிறார். இது நடந்து நூற்றாண்டுகள் கடந்து இன்று மும்பையில் பெரிய பிஸினஸ்மேனாக இருக்கிறார் ஆதி தேவ் வர்மா.

அவரது மகன் தொழில் எதிரிகளை சமாளிக்கிறார். அதே சமயம் அப்பா மீது பாசமாக இருக்கிறார். ஆதி தேவ் வர்மாவும் (மோகன் லால்) மகன் மேல் பாசமாக இருக்க, அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது.
அதில் விருஷபாவின் அரசு குறித்து எல்லாம் தெரிய பயப்படுகிறார். இதனை அறியும் அவரது மகன், அப்பாவின் பிரச்சனையை சரி செய்ய கிளம்புகிறார். மும்பை பிஸினஸ்மேன் ஆதிக்கும், அரசன் விருஷபாவிற்கும் என்ன தொடர்பு? அந்த சாபம் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
முன் ஜென்மத்தில் கொடுக்கப்பட்ட சாபம் அடுத்த ஜென்மத்தில் தொடர்வதுதான் கதை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ராஜமௌலியின் மகதீரா படத்தின் கதையைப் போல் இப்படத்தை இயக்கியுள்ளார் கன்னட இயக்குநர் நந்தா கிஷோர்.
மோகன் லால் விருஷபா அரசனாகவும், ஆதி தேவ்வாகவும் மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார். நடிப்பை விட ஆக்ஷனில் பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சி அட்டகாசம்.

அவரது மகனாக நடித்திருக்கும் சமர்ஜித் லங்கேஷ் ஆவேசமான காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் கதைக்களம் என்றாலும் அதில் அழுத்தம் இல்லை.
அதற்கு காரணம் இது எந்த மொழிப்படம் என்று குழம்ப வைக்கும் வகையில் இருக்கும் மேக்கிங்தான். படத்தின் ஆரம்பத்திலேயே ஸ்படிக லிங்கத்தின் வரலாறு குறித்து வேகமாக சொல்லப்படுகிறது. அப்போதே இது மலையாள படம்தானா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் காட்சிகள் நகர்வது தெலுங்கு படங்களின் திரைக்கதைப்போல் உள்ளது.
கதாபாத்திரங்கள் மலையாளத்தில் பேசுகிறார்கள்; ஆனால் அந்த உச்சரிப்பும் எதுவும் மலையாளம் போல் இல்லை (மோகன் லாலைத் தவிர). அதாவது ஒரு தெலுங்கு படத்தை மலையாளத்தில் டப் செய்து இருப்பதுபோல்தான் படமே உறுத்தலாக இருக்கிறது.
கேமரா ஒர்க், மேக்கிங் இந்தி சீரியல் போல்தான் உள்ளன. காட்சிகள் தெலுங்கு மசாலா படத்தைப் போல் உடனுடனே நகர்கின்றன. இது படமா சீரியலா என்றே கேட்க தோன்றுகிறது. அதிலும் கொஞ்சம் கூட லாஜிக் என்பதே இல்லை என்பது மற்றொரு சோதனை.

ஹீரோயின் நயன் சாரிகா காதல் இல்லை என்று கூறி சமர்ஜித்திடம் கோபித்துக் கொண்டு செல்கிறார்.
அடுத்த காட்சியிலேயே அவரை காதலிக்கிறார். இடையில் எந்த உணர்ச்சிப்பூர்வமான வசனமோ, காட்சியோ இல்லை. அரசர் காலத்தை காட்டும் காட்சிகளில் கிராஃபிக்ஸ் பல் இளிக்கிறது.
மோகன் லாலை தவிர பல கதாபாத்திரங்களுக்கு டப்பிங் சின்க் ஆகவில்லை. காட்சிகள் உடனுடனே ஜம்ப் ஆகின்றன. அந்த அளவிற்கு எடிட்டிங்கும் சொதப்பலாக உள்ளது.
சாம் சி.எஸ் தனது பின்னணி இசையை நன்றாக கொடுத்திருந்தாலும், படம் முழுக்க இசைக்கப்படுவது சீரியல் உணர்வைத்தான் தருகிறது. இது மலையாளப்படம் என்பதற்கு மோகன் லால் மட்டுமே சான்று. ஏனென்றால் தெலுங்கு, கன்னட நடிகர்களே படத்தில் உள்ளனர்.
2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஸ்கேம் இப்படம் என்று கூறலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பாலகிருஷ்ணாவுக்கு எழுதிய கதையை மோகன் லாலை வைத்து எடுத்திருக்கிறார்கள்.
அவரே இப்போது லாஜிக் மீறல்களை குறைத்து (அகண்டா2 தவிர) படம் பண்ண ஆரம்பித்துவிட்டார் என்பது துணுக்கு தகவல்.
க்ளாப்ஸ்
மோகன் லால் நடிப்பு சண்டைக்காட்சிகள் பின்னணி இசை
பல்ப்ஸ்
படமே மிஸ்டேக் என்று கூறலாம் லாஜிக் மீறல்கள் கன்னடத்தையும், தெலுங்கையும் கலந்து மலையாள டப்பிங் செய்திருப்பது மோகன் லால் படம் என்று நம்பி செல்பவர்களுக்கு சோதனை தந்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த விருஷபா ஆள விடுய்யா யெப்பா.
ரேட்டிங்: 1.75/5
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri