கல்கி 2 படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டது ஏன்? காரணம் இதுதானா?
படத்திலிருந்து நீக்கப்பட்ட தீபிகா
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன் என பலரும் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கல்கி 2 படத்திலிருந்து நடிகை தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பில், "நீண்ட ஆலோசனைக்கு பின், தீபிகாவும் கல்கி 2898 AD படக்குழுவும் வெவ்வேறு பாதையில் செல்ல முடிவு செய்திருக்கிறோம். இதனால் இரண்டாம் பாகத்தில் தீபிகா இடம்பெறமாட்டார். கல்கி 2898 AD படத்தில் நடிக்க அர்ப்பணிப்பும் சில விஷயங்களும் தேவைப்படுகின்றன. அவருடைய எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்கள்" என வைஜெந்தி மூவிஸ் தெரிவித்திருந்தனர்.
இதுதான் காரணமா?
இந்நிலையில், கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து தீபிகா நீக்கப்பட்ட காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகாவின் கதாபாத்திரம் சுருக்கப்பட்டு கவுரவ வேடம் போல் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி குறைவான வேலை நேரம், 25 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என தீபிகா கேட்டதாகவும் மற்றும் அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் விஷயத்திலும் தயாரிப்பு தரப்புக்கும் தீபிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுதான் தீபிகாவை படத்திலிருந்து நீக்க காரணம் என்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.