With Love திரை விமர்சனம்
With Love திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்கள் எல்லாம் ஹீரோக்களாக ஆகி வரும் நிலையில், லவ் டுடே மூலம் ஹீரோவாகி வெற்றிபவனி வரும் ப்ரதீப்பை தொடர்ந்து, டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன், அனஸ்வரா நடிப்பில் மதன் இயக்கத்தில் வெளிவந்துள்ள வித் லவ் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
அபிஷன் தன் அக்கா சொன்ன பொண்ணை பார்த்து தனக்கு செட் ஆவாரா என்று பார்க்க செல்கிறார்.
சென்ற இடத்தில் ஒரு குளறுபடி நடந்து அவர் பார்க்க வந்த பெண் அனஸ்வரா என்று தெரிந்துக்கொள்கிறார். பிறகு அபிஷன்-அனஸ்வரா இருவரும் மனம் விட்டு பேச, அதில் தான் தெரிகிறது, அபிஷன், அனஸ்வராவின் ஸ்கூல் சீனியர் என்று, அதோடு அபிஷன் ஸ்கூலில் அனிஷா என்ற பெண்ணை காதலித்து ப்ரேக் அப் ஆன கதையை சொல்கிறார்.

அதை தொடர்ந்து அனஸ்வரா ஸ்கூலில் பாலாஜி என்ற பையனை காதலித்து அவனிடன் காதலை சொல்ல முடியாத கதையை சொல்கிறார், இவர்கள் இருவர் காதலும் தோல்வியில் முடிய, பிறகு இவர்கள் ஒரு முடிவு எடுக்கிறார்கள்.
நாம் இருவரும் நம் எக்ஸ்-யை சந்தித்து காதலை சொல்ல வேண்டும், பிறகு தான் நம் திருமணம், அதுவும் பிடித்தால்? என்று முடிவெடுக்க, அதன் பிறகு என்ன ஆனது என்ற கலாட்டா தான் இந்த வித் லவ்.
படத்தை பற்றிய அலசல்
அபிஷன் இயக்குனராக களம் இறங்கி சிக்ஸர் அடித்தது போல் தற்போது ஹீரோவாகவும் தூள் கிளப்பியுள்ளார், அதிலும் காதல் தோல்வியில் அவர் அழும் இடம், காதலிகாக காத்திருந்து அவர் முன்பு பெர்ப்பாமன்ஸ் செய்வது என சின்ன சின்ன ரியாக்ஸனில் ஸ்கோர் செய்கிறார்.

கொஞ்சம் ப்ரதீப் சாயல் தெரிகிறது என்றாலும், அபிஷன் கொஞ்சம் அளவான நடிப்பால் தனித்தும் தெரிகிறார். அனஸ்வரா மலையாள வாடையில் அவர் பேசும் கியூட் தமிழுகாகவே இளைஞர்கள் கூட்டம் இவருக்கு பல ஆர்மியை தொடங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, அதிலும் ரக்கட் கேர்ள் ஆக தானே ஓடி ஓடி பாலாஜியை காதல் செய்வது, அவருக்கு ஒரு அசிங்கம் என்றதும் தன் தோழியை அடித்து, பாலாஜியை வம்பிழுத்த பையனை காம்போஸால் குத்துவது என அவுட் ஆப் தி கிரவுண்ட் ஷாட் தான் பெர்ப்பாமன்ஸில்.
அபிஷன்-அனஸ்வரா 2 பேரும் முடிவெடுத்தது போல் தங்கள் எக்ஸ் காதலை தேடி போக, படம் இரண்டாம் பாதி முழுவதும் தேடல், அவர்கள் சந்திப்பு என செல்கிறது.
அதிலும் அபிஷன்-அனஸ்வரா இரயில் பயணம் பேச்சு, ப்ரண்ட் திருமணத்தில் அபிஷன் தான் செய்த தவறை உணர்ந்து தன் பள்ளி வாத்தியாரிடம் மன்னிப்பு கேட்பது, அனிஷாவுடன் சந்திப்பு என செம எமோஷனல் மற்றும் மன நிறைவு காட்சிகளாகவே செல்கிறது.

ஆனால், இந்த இரண்டு பேருக்கான காட்சிகளே படம் முழுவதும் வருவது இந்த ஜெனரேஷனுக்கு கொண்டாட்டம் தான். அனஸ்வரா எக்ஸ் காதலனை சந்திக்கும் இடம் கதை அப்படியே மாறி சோக Zone-க்கு போகும் என்று நினைத்தால், அடுத்த நிமிடமே அபிஷன் தண்ணி அடித்துவிட்டு அவர் போன் போட்டு எல்லோருக்கு அழும் காட்சி என மீண்டும் கலகலப்பிற்கு செல்கிறது.
அதோடு படத்தின் வசனம் முக்கியமாக வாத்தியாராக வரும் சரவணன் மீது தவறாக வரும் பழி, அது தவறு என்று அபிஷன் நினைக்குமிடம் அப்போது நாம் பார்க்காத விஷயத்திற்கு 4 பேர் சொல்வதற்காக ரியாக்ட் செய்யகூடாது போன்ற வசனம் ரசிக்க வைக்கிறது.

இப்படி படம் முழுவதும் காதல், ஜாலி என சென்றாலும் இது தான் நடக்கும் என்று நாம் நினைப்பதே நடப்பது கொஞ்சம் சுவாரஸ்யம் சில இடத்தில் குறைகிறது. டெக்னிக்கலாக படம் மிக வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு, எடிட் என அனைத்தும் சூப்பர் என்றாலும் படத்தை தூக்கி நிறுத்துவது ஷான் ரோல்டன் பின்னணி இசை தான்.
க்ளாப்ஸ்
அபிஷன்-அனஸ்வரா நடிப்பு
ஜாலியான பீல் குட் காட்சிகள்
டெக்னிக்கல் ஒர்க், முக்கியமாக பின்னணி இசை
பல்ப்ஸ்
கொஞ்சம் பார்த்து பழகி போன ஸ்கூல் காதல் ப்ரேக் அப் போன்ற ஏற்கனவே பல படத்தில் பார்த்த காட்சிகள்.
மொத்தத்தில் வித் லவ் இந்த ஜென் சி ரசிகர்கள் மற்றும் கொரியன் காதல் பட ரசிகர்களுக்கு காதல் விருந்து தான்.