Wuthering Heights: திரை விமர்சனம்

By Sivaraj Feb 14, 2026 08:12 AM GMT
Report

Wuthering Heights

ஹாலிவுட்டின் பிரபல நடிகை மார்கட் ராபியின் நடிப்பில் நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள Wuthering Heights திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

Wuthering Heights: திரை விமர்சனம் | Wuthering Heights Movie Review

கதைக்களம்

1771யில் லிவர்பூல் தெருக்களில் இருந்து மீட்ட ஹீத்கிளிப் (ஜேக்கப் எலோர்டி) என்ற சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் எர்ன்ஷா. அவனை தனது மகள் கேத்தரினின் (மார்கட் ராபி) செல்லப்பிராணி என்று கூறும் அவர், அச்சிறுவனை அடிமைபோல் நடத்தி வேலை வாங்குகிறார்.

ஆனால் கேத்தரின் அவனை நண்பனாக பார்க்க இருவரும் ஒன்றாக வளர்கின்றனர். ஒருநாள் தாமதமாக வந்த கேத்தரின் அவளின் அப்பா எர்ன்ஷா கடித்துக்கொள்ள, நான் தான் அதற்கு காரணம் எனக்கூறி பழியை ஏற்கும் ஹீத்கிளிப் சவுக்கடிகளை வாங்குகிறார்.

Wuthering Heights: திரை விமர்சனம் | Wuthering Heights Movie Review

இதனால் அவன் மீது அதிக அன்புவைக்கும் கேத்தரின் நெருங்கிய தோழியாகிறாள். இருவரும் வளர்ந்த பின்னர் ஒருநாள் விளையாட்டாக கேத்தரினிடம் நீ என் மனைவியாக இருப்பாய் என்று கூற, நாம் ஒன்று சேர்த்தால் வறுமையில்தான் வாட வேண்டும் என்று கூறுகிறாள் கேத்தரின். மேலும் தனக்கு எட்கர் லிண்டன் போல் பணக்கார வாழ்க்கை வேண்டும் என்றும் அவனிடம் கூறுகிறார்.

அவள் நினைத்ததுபோலவே ஒருநாள் எட்கர் தன்னை திருமணம் செய்துகொள்ள முன்மொழிகிறார். அதே சமயம் ஹீத்கிளிப்பை மணந்தால் வாழ்க்கை வறுமையிலேயே போய்விடும். எட்கரை திருமணம் செய்துகொண்டால் அதன்மூலம் குடிகார அப்பாவிடம் இருந்து அடிமை வாழ்க்கையில் இருக்கும் ஹீத்கிளிப்பை மீட்க முடியும் என்று தோழி நெல்லியிடம் கேத்தரின் கூறுகிறாள்.

அவள் கூறிய முதல் பாதியை மட்டும் ஒளிந்திருந்து கேட்கும் ஹீத்கிளிப், அங்கிருந்து வெளியேறி கண்காணாத தூரத்திற்கு குதிரையில் சென்றுவிடுகிறான். சில ஆண்டுகள் கழித்து நன்றாக செல்லும் கேத்தரினின் திருமண வாழ்க்கையில் வரும் ஹீத்கிளிப், அவளை பழிவாங்க சில காரியங்களை செய்ய அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

Wuthering Heights: திரை விமர்சனம் | Wuthering Heights Movie Review

படம் பற்றிய அலசல்

எமிலி ப்ரொண்டே எழுதிய Wuthering Heights என்ற நாவலின் தலைப்பிலேயே அந்த கதை திரைப்படமாக எடுத்துள்ளார் எமரால்டு பென்னெல். உணர்வுப்பூர்வமான அடிமையின் காதல் எப்படி வன்மமாக மாறி பழிவாங்க தூண்டுகிறது என்பதை காட்சிக்கு காட்சிக்கு நேர்த்தியாக எடுத்துக்காட்டியுள்ளார் இயக்குநர்.

வறுமை என்ற விஷயத்தால் இந்த காதல் திருமணமனத்திற்கு செல்லாது என்று கூறும் ஹீரோயின் மார்கட் ராபி, ஒரு கட்டத்தில் தனது காதலை ஹீத்கிளிப்பின் விருப்பப்படி காமமாக வெளிப்படுகிறாள்.

அந்த காட்சிகள் எல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி ரகம். இருவரும் ஒரு உறவில் பயணிக்க அது வேறுமாதிரியாக விஸ்வருபம் எடுக்கும் காட்சிகள் எல்லாம் திகில் மொமென்ட். ஹீத்கிளிப் அடுத்து என்ன செய்வானோ என்று பதைபதைக்க வகையில் அமைந்துள்ள காட்சிகள்.

Wuthering Heights: திரை விமர்சனம் | Wuthering Heights Movie Review

ஆனால் மார்கட், ஜேக்கப் சம்மந்தப்பட்ட நெருக்கமான காட்சிகள் ரொம்பவும் அத்துமீறல் ரகம். காதல் கதையில் காமத்தை அதிகம் தூக்கிப்பிடித்ததுதான் இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்று சொல்லலாம்.

அதனாலேயே படத்தின் முடிவு நம்மை ஆழமாக பாதிக்கவில்லை. என்னதான் சிறுவயது முதல் பார்த்து பழகியவன் என்றாலும், அவன் இந்த அளவிற்கு மோசமாக யோசிக்கிறான் என்று தெரிந்த பின்னும் அவனிடம் கேத்தரின் கதாபாத்திரம் நெருக்கம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேபோல் சில பாதிக்கும் வகையிலான காட்சிகளும் உள்ளன. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி பலருக்கு சங்கடத்தை தரலாம். கேத்தரின் கதாபாத்திரத்தை மார்கட் ராபி அட்டகாசமாக செய்துள்ளார். இறந்துபோன தந்தையின் உடலைப் பார்த்து முதலில் கதறி அழுது பின், அவர் செய்த கொடுமைகளை நினைத்து எட்டி உதைப்பது, நெல்லியின் துரோகத்தை அறிந்து கோப முகம் காட்டுவது, கணவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று பரிதவிப்பது, காதலில் திளைப்பது என அவர் மிரட்டியிருக்கிறார்.

Wuthering Heights: திரை விமர்சனம் | Wuthering Heights Movie Review

ஹீத்கிளிப்பாக ஜேக்கப்பும் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்துள்ளார். அவர் பழிவாங்க எடுக்கும் நடவடிக்கைகள், அவர் முகத்தில் காட்டும் குரூரம் நம்மை பயமுறுத்தும் வகையில் உள்ளன. அந்த அளவிற்கு நேர்த்தியாக நடித்துள்ளார்.

கயறு நிலையில் நல்ல கணவனாக எட்கர் லிண்டன் கதாபாத்திரத்தை ஷாசத் லத்தீப்பும், இசபெல்லா கதாபாத்திரத்தை அலிசன் ஓலிவரும் சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் ஒளிப்பதிவும், பின்னணி இசையும்தான். லினஸ் சன்ட்க்ரேனும், அந்தோணி வில்லிஸும் அந்த பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

க்ளாப்ஸ்

மார்கட் ராபி திரைக்கதை மற்றும் எதிர்பாராத சில காட்சிகள் ஒளிப்பதிவு இசை

பல்ப்ஸ்

காதல் கதையை வேறு விதமாக கொண்டுசென்றது

மொத்தத்தில் இந்த Wuthering Heights காதல் படம் என்று செல்பவருக்கு சற்று ஏமாற்றத்தை தந்தாலும், திரைக்கதையால் ஒருமுறை முழுமையாக பார்க்க வைக்கும்.

ரேட்டிங்: 2.5/5 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US