ஆரோமலே திரை விமர்சனம்
அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் ஆரோமலே. காதல் கதைக்களத்தில் உருவாகி ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்துவிட்டு காதல் என்றால் சினிமாவில் வருவது போல்தான் இருக்கும் என்று நினைத்து காதலை தேடி அலைகிறார் கதாநாயகன் கிஷன் தாஸ்.
பள்ளி மற்றும் கல்லூரி என தொடர்ந்து ஒவ்வொரு பெண்ணாக அவர் காதலித்து வந்தாலும், அவை யாவும் காதலாக இல்லை. அதை அவரால் உணரவும் முடியவில்லை. மறுபக்கம், காதல் என்று ஒன்று இல்லவே இல்லை என சொல்லும் பெண்ணாக என்ட்ரி கொடுக்கிறார் கதாநாயகி ஷிவாத்மிகா.

Matrimony-ல் சீனியர் மேனேஜராக இவர் இருக்க, அந்த கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்கிறார் கிஷன் தாஸ். ஷிவாத்மிகாவை பார்த்தவுடன் காதலிக்க துவங்கும் கிஷன், அதன்பின் அவருடைய குணத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்.
இப்படி இருவரும் இரு துருவங்களாக இருக்கும், இவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது? இருவரும் இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதையாகும்.

படத்தை பற்றிய அலசல்
அறிமுக இயக்குநர் சாரங் தியாகு வித்தியாசமான காதல் கதையை காட்டவில்லை என்றாலும் ஓர் அழகான காதல் திரைப்படத்தை வழங்கியுள்ளார். படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அடுத்த காட்சி இதுதான் என எளிதாக நம்மால் கணிக்க முடிகிறது.
ஹீரோ ஹீரோயினுக்கு இடையே காதல் உருவாகும் காட்சிகளை காட்டிய விதம் அழகாக இருந்தாலும், நமக்கு தான் அது ஒட்டவில்லை. பல இடங்களில் கவுதம் மேனன் படம் பார்ப்பதுபோல் உணர முடிகிறது. அவருடைய துணை இயக்குநராக இருந்து, இப்படத்தை எடுத்ததால் அப்படி வந்துவிட்டதா? அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என இயக்குநரின் முடிவா என்றும் தெரியவில்லை.

கதாபாத்திரங்களின் வடிவமைப்புக்கு இயக்குநருக்கு தனி பாராட்டுக்கள். கதாநாயகி ஷிவாத்மிகா, கதாநாயகன் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் மற்றும் கிஷன் தாஸின் அம்மாவாக நடித்த நடிகை துளசி என ஆகிய மூவரின் ரோல் கவனத்தை ஈர்க்கிறது.
குறிப்பாக ஹர்ஷத் கான் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். நகைச்சுவை டைமிங்கில் பட்டையை கிளப்பியுள்ளார். பல இடங்களில் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றதே அவருடைய நகைச்சுவைதான், அவருக்கு வாழ்த்துக்கள். மேலும், தனது தந்தையை வெறுக்கும் கிஷன், ஒரு கட்டத்தில் அவருடைய உண்மையான குணத்தை அறிந்தபின் மாறும் விதமும், அந்த உண்மை என்னவேன்று அவருடைய அம்மா சொல்லும் காட்சியும் மனதை தொட்டது.

அதே போல் படத்தின் திருப்பு முனையாக வரும் விடிவி கணேஷ் கதாபாத்திரமும் நம்மை ரசிக்க வைக்கிறது. படத்தின் சுவாரஸ்யத்தில்தான் குறையே தவிர, கதாபாத்திரங்கள் அனைத்துமே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக காதல் படம் என்றால் மிக முக்கியமான விஷயம் பாடல்கள் மற்றும் பின்னணி இசைதான். ஆனால், இப்படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மனதை தொடவில்லை.
படத்தின் மற்றொரு பிளஸ் பாயிண்ட் சிலம்பரசனின் வாய்ஸ் ஓவர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவருடைய குரல் திரைக்கதையோடு பயணிக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காதல் வசனம் அதில் ஹைலைட். மற்ற தொழில்நுட்ப விஷயங்களிலும் குறை எதுவும் இல்லை.
பிளஸ் பாயின்ட்
ஷிவாத்மிகா, கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், துளசி, விடிவி கணேஷ்.
நகைச்சுவை காட்சிகள்.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு.
எஸ்டிஆர் வாய்ஸ் ஓவர்.
எடிட்டிங்.
காதல் என்றால் என்ன என்பதை சொன்ன விதம்.
மைனஸ் பாயின்ட்
சுவாரஸ்யம் குறைவு.
காதல் காட்சிகள் நம்முடன் கனெக்ட் ஆகவில்லை.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை.
மொத்தத்தில் இந்த ஆரோமலே படம், சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும் எங்கும் தடம்புரண்டு, கதைக்களத்தில் இருந்து வெளியேறி, தவறான பாதைக்கு சென்று நம்மை ஏமாற்றவில்லை. கண்டிப்பாக பார்க்கலாம்...
