நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாளால் வெட்டு.. தூத்துக்குடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
நடிகை தீபா
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபா. இவருடைய வெகுளித்தனமான பேச்சை பார்த்து பலரும் இவருக்கு ரசிகர்களானார்கள். சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த இவர், தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகை தீபாவின் தந்தை மீது நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தீபாவின் தந்தை புலவர் கணேசன் தூத்துக்குடி முத்தையாபுரம் பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து திடீரென அவரை சரமாரியாக வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணேசனை காப்பாற்ற முயற்சி செய்தவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

பலத்த காயமடைந்த அவர்களை உடனடியாக அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் அதிரடி
சம்பவம் நடந்த நிலையில், இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் இந்த தாக்குதலில் தொடர்புடையதாக தூத்துக்குடி சக்திநகர் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் இசக்கி ஆகிய இருவரை முதலில் கைது செய்துள்ளனர்.

இதன்பின் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மீதமுள்ள ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.